Published:Updated:

`இந்தியாவின் இந்த நடவடிக்கை கவலையளிக்கிறது' - ஆப்களின் தடைக்கு சீனாவின் ரியாக்ஷன்!

ஜாவோ லிஜியன்
ஜாவோ லிஜியன் ( https://twitter.com/zlj517 )

தகவல் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி 59 சீன ஆப்களை தடைசெய்வதாக நேற்று இரவு அறிவித்தது இந்திய அரசு.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய - சீன ராணுவ மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். ஏற்கெனவே கொரோனா மற்றும் பிற காரணங்களால் சீனா மீது கோபம் கொண்டுள்ள இந்தியர்களை இது இன்னும் சூடேற்றியது. சீன தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற #BoycottChineseProducts ஹேஷ்டேக்கிற்கு இந்தியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சீனாவின் மிக முக்கிய பலமாகக் கருதப்படும் பொருளாதாரத்தில் கை வைப்பதன் மூலம் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்பதே இந்தியர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. இந்தச் சூழலால் தகவல் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி 59 சீன ஆப்களைத் தடைசெய்வதாக நேற்று இரவு அறிவித்தது இந்திய அரசு.

தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்
தடைசெய்யப்பட்ட ஆப்களின் பட்டியல்

"தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின்படி கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரக் கால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இந்த 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன" என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் டிக் டாக், ஷேர் இட் போன்ற பிரபல ஆப்கள் இடம்பெற்றிருந்தன. 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பிவருகின்றன என்றும் தெரிவிக்கிறது இந்த அறிக்கை.

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

இந்த நடவடிக்கை குறித்து முதல்முறையாகச் சீன தரப்பிலிருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் பேசியிருக்கிறார். "இந்தியாவின் இந்த உத்தரவு என்பது சீனாவுக்குக் கவலையளிக்கிறது. வெளிநாடுகளில் இயங்கும்போது அந்நாட்டின் உள்ளூர் சட்டதிட்டங்களுக்கு ஏற்றவாறு இயங்கவே சீனா நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது சீன அரசு. சீனா உட்பட அனைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அடிப்படை சட்ட உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார் அவர்.

ஜாவோ லிஜியன்
ஜாவோ லிஜியன்
இப்படியான முடிவு இந்தியாவுக்கும் பலன் தராது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். உண்மை நிலவரம் என்ன என்பதை தற்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறோம்
ஜாவோ லிஜியன்

இன்று சீனாவின் பிரபல சமூக வலைதளங்களான Weibo மற்றும் WeChat-ல் இந்தியாவின் இந்த முடிவுதான் முக்கிய பேசுபொருளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு