சீனாவில் புகழ்பெற்ற வீடியோ பிளாகர், "Your Highness Qiao Biluo". அவரின் வசீகர பேச்சுக்கும் இனிமையான குரலுக்கும் லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ் உண்டு. Douyu என்ற தளத்தில்தான் அவர் பேசுவார். குரலுக்கும் ஃபோட்டோவுக்கும் ஃபில்ட்டர் போடுவது போல, வீடியோவுக்கும் ஃபில்ட்டர் போடும் வசதி அந்தத் தளத்தில் உண்டு. அந்த வசதியைப் பயன்படுத்தி, தன் நிஜ முகத்தைக் காட்டாமலே பிரபலமானார். ஃபில்ட்டர் போடப்பட்ட முகத்தைப் பார்த்தவர்கள், நிஜத்திலும் அவர் அப்படித்தான் இளமையாக, அழகாக இருப்பார் என் நம்பியிருந்தார்கள்.
கடந்த ஜூலை மாதம், ஒரு லைவ் வீடியோ ஒன்றில் தோன்றினார் அந்தப் பெண். எல்லோரும் அவரின் நிஜ முகத்தைக் காட்டுமாறு கேட்க, '12 லட்ச ரூபாய் சேர்ந்தால் என் முகத்தைக் காட்டுகிறேன்' என்றார். உடனே, அனைவரும் பணத்தை அனுப்பத் தொடங்கினார்கள். அதில் ஒரு 'தீவிர' ரசிகர், 4 லட்ச ரூபாய் அனுப்பிவிட்டார். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட் நடந்தது. திடீரென ஏற்பட்ட டெக்னிக்கல் பிரச்னையில் ஃபில்டர் ஏமாற்ற, அவரின் நிஜ முகம் ரசிகர்களுக்குத் தெரிந்தது. அவர் 58 வயது பெண்மணி என்பது உலகம் அறிந்தது. உண்மை தெரிந்ததும் ஏராளமான ஃபாலோயர்ஸ் கழன்றுகொண்டார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒரு பக்கம், "வயதில், அழகில் என்ன இருக்கிறது... அவர் செய்தது சரிதான். இந்த ஆணாதிக்க சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்" என ஆதரவு பெருகியது. இன்னொரு பக்கம், 'ஏமாற்றிவிட்டார்' என திட்டித் தீர்த்தார்கள். நடந்ததையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு, கலெக்ட் ஆன தொகையை எண்ணிக்கொண்டிருப்பார் அந்த வீடியோ பிளாகர். பிரச்னை, அந்தத் தளத்தில் புகழ்பெற்ற மற்றவர்களுக்குத்தான். அவர்களின் உண்மை முகம் என்ன என்பதைக் கேட்டு நச்சரிக்கிறார்களாம் சைனா ரசிகர்கள்.