Published:Updated:

இயல்பான ஒன்று பொக்கிஷமாக மாறுகிறதே...

கிளப் ஹவுஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிளப் ஹவுஸ்

கிளப் ஹவுஸில் மனம் திறக்கும் பார்வைத்திறன் சவால் உடையவர்கள்!+

தி.ஷிவானி

இது இணையத்தின் காலம் என்பதைவிட சமூக வலைதள காலம் என்றே சொல்ல வேண்டும். ‘போன் இல்லாம ஒரு நாள் முழுக்க இருந்தால் ஒரு கோடி’ என அறிவிப்பு வெளியிட்டாலும்கூட ‘பரவாயில்லை இருக்கட்டும்ங்க’ எனத் தன்னடக்கத்துடன் பம்மும் அளவுக்கு சமூக வலைதளங்கள் மக்கள் மனங்களை ஆக்கிரமித்துவிட்டன. இருக்கும் ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ன பிறவும் போதாமல் இப்போது ஆடியோ சோஷியல் மீடியாக்களும் வந்துவிட்டன. ட்விட்டர் தரும் ‘ஸ்பேஸஸ்’ என்ற ஒலி உரையாடல் வசதியைவிட, கிளப் ஹவுஸ் என்ற புது சமூக வலைதளம் ஆடியோவுக்கென பிரத்யேகமாகக் களம் கண்டு ஹிட் அடித்திருக்கிறது.

கிளப் ஹவுஸில் மாடரேட்டர் என ஒருவர் இருந்து, யார் யார் கைக்கு மைக் போக வேண்டுமென முடிவு செய்கிறார். அவர்தான் அந்த உரையாடலையே வழி நடத்தும் கேப்டன். ஆனாலும், ஆன்லைன் கிளாஸ்களில் நடக்கும் ரகளைகளுக்குப் பஞ்சமில்லாமல் இங்கேயும் கலாட்டாக்கள் நடக்கின்றன. மாடரேட்டர் பேசச் சொன்னால், பேசாமல் இருப்பது அல்லது சம்பந்தமே இல்லாமல் பேசுவது, மைக்கை ஆன் - ஆஃப் செய்து விளையாடுவது போன்ற சேட்டைகளுக்குத் துளியும் குறைவில்லை.

இயல்பான ஒன்று பொக்கிஷமாக மாறுகிறதே...

வெவ்வேறு தலைப்புகளில் ஏகப்பட்ட ரூம்கள் கிளப் ஹவுஸில் கொட்டிக்கிடக்கின்றன. பாட்டுக்குப் பாட்டு ஹவுஸிலிருந்து வெளியே வந்தால் கதையுடன் விளையாட ஹவுஸ், மிமிக்ரி ஹவுஸ் காத்திருக்கின்றன. சாப்பிட்டுக்கொண்டே ஸூம் மீட்டிங் அட்டெண்ட் செய்வது எவ்வளவு எளிதாக இருக்கிறதோ... அதைவிட ஈஸி என்கிறார்கள். சுவாரஸ்யம் தாண்டி பல நன்மைகளும் கிளப் ஹவுஸில் இருக்கின்றன என்கிறார்கள் இந்த ஹவுஸுகளை நடத்தும் பார்வைத்திறன் சவால் உடையவர்கள்.

முழுக்க ஒலி சார்ந்த இடம் என்பதால் கிளப் ஹவுஸ் இவர்களின் உற்ற தோழன் ஆகிவிட்டது. பொதுத்துறை, வங்கித்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளில் இயங்கி வரும் இவர்கள், இப்படி ஒரு சோஷியல் மீடியா ஆப்புக்காகத்தான் இத்தனை வருடங்களாகத் தவம் இருந்தோம் என மனதைத் திறந்தனர். அவர்கள் பகிர்ந்ததன் சுருக்கம் இதோ...

சாதுவாக இருக்கும் இன்ட்ரோவேர்ட்டுகள் மெசேஜ் அனுப்பும்போது ‘இவரா பேசுகிறார்’ என ஆச்சர்யப்பட வைக்கும் அளவுக்குப் பேசுவார்கள். அதைப் போல நேரில் பேச அவ்வளவு தயக்கம் காட்டும் பார்வைத்திறன் சவால் உடையவர்கள் கிளப் ஹவுஸில் இறங்கி அடிக் கிறார்கள். அனைத்து தரப்பு மக்களுடன் எல்லோரையும் போலவே யதார்த்தமாகப் பேசி பழக ஆசை. அதற்கு நிறைய சமூக வலைதளங்களும் இருக்கின்றனதாம். ஆனால், எங்களுக்கு ஏற்றபடி யூஸர் ஃபிரெண்ட்லியாக இருப்பது கிளப் ஹவுஸ்தான். கிட்டத்தட்ட ரேடியோ கேட்பது எப்படியோ... அப்படிதான் கிளப் ஹவுஸும். வேலை செய்து கொண்டிருக்கும்போது கைக்கு வேலை என்றால் செவிகளுக்கு ரேடியோவால் விருந்து. ரேடியோ மூலம் கேட்க மட்டும்தானே முடிகிறது. அதனூடாக வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தால் நேரடியாகக் கூற முடிவதில்லையே. ஆனால், கிளப் ஹவுஸில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது மட்டு மல்லாமல் பதில் கருத்துகளையும் கூற முடிகிறது. பொழுதுபோக்கும் ஆகிறது; கருத்துக்கு மாற்றுக் கருத்து சொன்ன திருப்தியும் கிடைக்கிறது.

எங்களை வெளிப்படுத்த வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள், ஃபேஸ்புக்கில் கருத்துகளும் புகைப்படங்களும்தானே. புகைப் படங்களை போஸ்ட் செய்வது பார்ப்போரின் இரக்கத்தை எதிர்பார்த்து கிடையாது. ஆனால், யதார்த்தத்தில் எங்களுக்கு மிஞ்சுவது அதுதான். அதனால் அதைச் செய்ய விரும்ப மாட்டோம். டைப் செய்து கமென்ட்டுகளில் கருத்துச் சொல்ல வேண்டிய சிரமம் கிளப் ஹவுஸில் இல்லை. ஆன்லைன் மீட்டிங் ஆப்கள் போல முகத்தைக் காட்டியாக வேண்டிய தேவையுமில்லை. குரலே போதுமானதாக இருக்கிறதே. அதனாலேயே கிளப் ஹவுஸில் நாங்கள் ‘நாங்களாகவே’ இருக்க முடிகிறது.

மாற்றத்துக்கு ஏற்றபடி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சூழல். மனதுக்கு நெருக்கமானவர்களிடம் கூட பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாத மனநிலை. இதற்கு மத்தியில்தான் நாங்களும் வாழ்கிறோம். எங்கே செல்ல வேண்டுமானாலும் எங்களைப் போன்றோருக்குத் துணைக்கு ஆள் தேவை. அப்படியான சூழலில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும் சம்பாதிப்பதும் எங்களுக்குப் பொக்கிஷமான ஒன்று. கிளப் ஹவுஸில் இருக்கும் இடத்திலிருந்தே யார் துணையுமின்றி புதிய மனிதர் களைச் சந்திக்கிறோம். அவர்களோடு கதைக்கிறோம். பாடல்கள் பாடுகிறோம். வாசிக்கும் புத்தகங்களிலிருந்து கருத்து பரிமாற்றம் செய்கிறோம். மற்ற சமூக வலை தளங்கள் போல அல்லாது நேரடியாகப் பல துறைகள் சார்ந்தவர்களிடம் பேசுகிறோம். புதிய உறவைக் கட்டமைக்க முடிகிறது. சகஜமாகப் பேசிப் பழகுகிறோம். இதைவிட வேறு என்ன வேண்டும்?

ஒருவர் கண்ணுக்கு இயல்பாகத் தெரிவது மற்ற வருக்குப் பொக்கிஷமாகத் தெரிகிறதே... இதல்லவா படைப்பு என நம்மையும் கணங்களில் சிந்திக்கத் தூண்டுகின்றனர் கிளப் ஹவுஸில் யதார்த்தப் பாடத் தைக் கற்பிக்கும் பார்வைத்திறன் சவாலுடையவர்கள்.

‘சொல்’லி அடிகிறதுன்னா இதுதான். வாழ்த்துகள் சகாக்களே.