Published:Updated:

``உங்கள் பிரைவெட் தகவல்களைப் பகிர்கின்றனவா டேட்டிங் ஆப்கள்?" -சர்வேயில் அதிர்ச்சித் தகவல்

டின்டர் டேட்டிங் ஆப்
டின்டர் டேட்டிங் ஆப்

ஓகே க்யூபிட் அப்ளிகேஷன் பயனாளர்களிடம் ``நீங்கள் சைக்கிடிலிக் மருந்துகள் (போதை மருந்துகள்) உட்கொள்பவரா?" போன்ற கேள்விகளைக் கேட்கிறது.

சமுக வலைதள டேட்டிங் அப்ளிகேஷன்களான டின்டர், கிரின்டர் உள்ளிட்டவை பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை நிறுவனங்களுடன் பகிர்வதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனங்களின் மீது சைபர் பாதுகாப்பு அடிப்படையிலான விசாரணையை மேற்கொள்ளச் சொல்லி அமெரிக்க சிவில் சுதந்திர யூனியன் பொதுமக்களுடன் இணைந்து கலிபோர்னியா மாகாண சபையிடம் மனு கொடுத்துள்ளது.

நார்வேஜியன் கன்ஸ்யூமர் கவுன்சில் எனும் நுகர்வோர் அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வின்படி கிரின்ட்ர், டின்டர், ஓகே க்யூபிட், ஹேப்பன், க்ளூ, மை டேஸ், பெர்ஃபெக்ட் 365, க்விப்ளா, ஃபைன்டர், டாக்கிங் டாம் 2 மற்றும் வேவ் கீபோர்ட் உள்ளிட்ட பத்து சமூக வலைதள அப்ளிகேஷன்கள் தங்களுடைய பயனாளர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்து அனுமதியின்றி வெளிநபர் விளம்பரதாரர்களிடம் பகிர்வதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற தகவல் பரிமாற்றங்கள் சைபர் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

டேட்டிங் ஆப்
டேட்டிங் ஆப்

``பயனாளர்கள் இதுபோன்ற சமூக வலைதள அப்ளிகேஷன்களை தங்களுடைய டெஸ்க்டாப் கணினியில் பயன்படுத்தும்போது தனிப்பட்ட செட்டிங்களின் வழியாக தங்களை மூன்றாவது நபர் விளம்பரதாரர்கள் கண்காணிப்பதைத் தடுக்க முடியும். ஆனால், அதையே தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் தடுக்க முடியாது. மேலும் பயனாளர்கள் நாள் முழுவதும் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பதால் அவர்களுடைய உடல்நிலை, செயல்பாடுகள், தனிவிருப்பங்கள், நம்பிக்கைகள், பாலியல் மற்றும் பாலின ரீதியான தகவல்கள் உள்ளிட்டவை அவர்களுடைய ஸ்மார்ட் போன்களில் பதிவாகிவிடுகின்றன.

இதை அப்ளிகேஷன்கள் எளிதாக எடுத்துக்கொண்டு விடுகின்றன. டேட்டிங்குக்காக இளைஞர்களால் பயன்படுத்தப்படும் ஓகே க்யூபிட் அப்ளிகேஷன் பயனாளர்களிடம் ``நீங்கள் சைக்கிடிலிக் மருந்துகள் (போதை மருந்துகள்) உட்கொள்பவரா?" போன்ற கேள்விகளைக் கேட்கிறது. அதற்குக் கிடைக்கப்பெறும் பதில்களை மருந்துகள் மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களிடம் பகிரப்படுவதாக பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.

செக்யூரிட்டி
செக்யூரிட்டி

இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையானவர்களை ஆன்லைன் வழியாக எளிதில் வலையில் விழ வைக்கும் செயல். ஓகே க்யூபிட் நிறுவனம் அண்மையில் தங்களுடைய 300-க்கும் மேற்பட்ட விளம்பரப் பார்ட்னர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கிரின்டர் போன்ற அப்ளிகேஷன்கள் பயனாளரின் இருப்பிடம் குறித்த தகவல்களை விளம்பரதாரர்களுடன் பகிர்கின்றன. இதை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வும் உறுதி செய்துள்ளது" இவ்வாறு அந்தக் குழு தங்களுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்துக் கூறும் நார்வெஜியன் கவுன்சில், `தனிநபர் பிரைவஸியை மீறியதாகக் கடந்த வியாழன் அன்று கிரின்டர் மற்றும் 5 விளம்பர நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தும்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது" என உறுதி செய்துள்ளது. சமூகவலைதளப் பெரு நிறுவனமான ஃபேஸ்புக் தங்களுடைய பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்ததாக கடந்த ஆண்டு வர்த்தக ஆணையம் அந்த நிறுவனத்துக்கு ஐந்து பில்லியன் டாலர் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

பின் செல்ல