Election bannerElection banner
Published:Updated:

பில்கேட்ஸ் பின்னே, எலான் மஸ்க் முன்னே... பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் உயர்ந்தது எப்படி?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

டெஸ்லா மட்டுமல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் எனப் பல முக்கிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் முதலீடுகள் செய்துள்ளார் எலான் மஸ்க்.

இன்றைய உலகின் மிக முக்கிய டெக் ஜீனியஸாக கருதப்படுபவர் எலான் மஸ்க். கிட்டத்தட்ட 'தமிழ்ப்படம்' சிவா போல இந்த வருடம் முக்கிய பணக்காரர்கள் பலரையும் பின்னுக்குத் தள்ளி தடதடவென முன்னேறிக்கொண்டிருக்கிறார். இப்போது பில் கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக உயர்ந்திருக்கிறார் எலான் மஸ்க். ஜனவரி மாதம் 'Bloomberg Billionaires Index' பட்டியலில் 35-வது இடத்திலிருந்த அவர் இப்போது இரண்டாவது இடத்திற்கு உயர்ந்துள்ளார். இந்த வருடம் மட்டும் 100.3 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளைச் சேர்த்திருக்கிறார் மஸ்க்.

Tesla
Tesla
AP Photo/John Locher, File

இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவரது மின்சார கார் நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 மில்லியன் டாலர்களை தொட்டிருக்கிறது. எலான் மஸ்க்கின் மொத்த சொத்துகளில் முக்கால்வாசி அவர் டெஸ்லாவில் வைத்திருக்கும் பங்குகள்தான். இப்போது அவரது சொத்து மதிப்பு 127.9 பில்லியன் டாலர். டெஸ்லா மட்டுமல்லாமல் ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் எனப் பல முக்கிய தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களில் முதலீடுகள் செய்துள்ளார் எலான் மஸ்க்.

டெஸ்லாவின் அபார வளர்ச்சிக்கு மஸ்க்கின் ரியாக்ஷன்!

எட்டு வருடங்களில் இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்திற்கு கீழ் செல்வது இதுவே முதல்முறை. பல வருடங்களாக முதல் இடத்தை தக்கவைத்திருந்த இவரை 2017-ல் பின்னுக்குத் தள்ளினார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸ். இப்போது பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டாலர். இதுவரை 27 பில்லியன் டாலர் அளவிலான சொத்துகளை அவரது தொண்டு நிறுவனங்களுக்கு பில் கேட்ஸ் வழங்கியுள்ளார், இல்லையென்றால் இன்னும் இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பார்.

எலான் மஸ்க்கின் இந்த அபார வளர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மீம்ஸ் மழை பொழிந்தனர்

பில் கேட்ஸும், எலான் மஸ்க்கும் அவ்வப்போது வார்த்தை போர்களில் ஈடுபடுவது உண்டு. 'எலக்ட்ரிக் வாகனங்கள் பற்றி துளியும் புரிதல் இல்லாதவர்' என பில் கேட்ஸை ஒரு முறை குறிப்பிட்டார் மஸ்க். கொரோனா விஷயத்தில் மஸ்க்கின் போக்கை விமர்சித்தார் பில் கேட்ஸ்.

ஆனால், இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. ஆனால், 'Bloomberg Billionaires Index' பட்டியலில் இருப்பவர்களின் சொத்து மதிப்பு 23% உயர்ந்துள்ளது. 2020-ல் மட்டும் 1.3 டிரில்லியன் டாலர் சொத்துகளைச் சேர்த்திருக்கின்றனர் உலகின் முதல் 500 பணக்காரர்கள்.

இதைத்தான் 'Rich gets Richer, Poor gets Poorer' எனச் சொல்கிறார்களோ!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு