Published:Updated:

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்....! - எலான் மஸ்க்கின் தொழில்நுட்ப ஜீபூம்பா #MyVikatan

Elon musk
Elon musk ( John Raoux )

உங்களுக்கு விருப்பமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வரவேண்டும் என நினைக்கிறீர்கள், உடனே ஸ்டார் ஸ்போட்ஸ் சேனலுக்கு டிவி மாறுகிறது. ரிமோட் கூட இல்லாமல் ஹாயாக டிவி பார்க்கிறீர்கள்! எப்படி இருக்கிறது இந்தக் கற்பனை?

''பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நீங்கள் உங்கள் வீட்டின் கதவின் முன்பு நிற்கிறீர்கள். கதவு திறக்க வேண்டும் என்று மனதினுள் நினைக்கிறீர்கள், உடனே கதவு திறக்கிறது. உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்ததும் மின்விசிறி ஓட வேண்டுமென நினைக்கிறீர்கள், உடனே மின்விசிறி ஓடுகிறது! வெப்பம் அதிகம், மின்விசிறியின் காற்று போதவில்லை.

எனவே ஏசி இயங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், உடனே ஏசி இயங்கக் தொடங்குகிறது. வெப்பநிலை 20-லிருந்து 18 ஆக குறைய வேண்டும் என நினைக்கிறீர்கள். உடனே வெப்பநிலையை 18 ஆக மாற்றுகிறது!

அடுத்து டிவி ON ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள், உடனே டிவி ON ஆகிறது.

உங்களுக்கு விருப்பமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வரவேண்டும் என நினைக்கிறீர்கள், உடனே ஸ்டார் ஸ்போட்ஸ் சேனலுக்கு டிவி மாறுகிறது. ரிமோட் கூட இல்லாமல் ஹாயாக டிவி பார்க்கிறீர்கள்! எப்படி இருக்கிறது இந்தக் கற்பனை?

Representational Image
Representational Image
Neuralink Instagram

ஹாலிவுட் படங்களில்தான் இதெல்லாம் நடக்கும் என நாம் நினைக்கலாம். ஆனால் இவையும், இவைபோன்ற பல வியப்பூட்டும் செயல்கள் நம் அன்றாட வாழ்விலும் விரைவில் சாத்தியமாகும் என்கிறது எலான் மஸ்க்கின் நியூராலிங்க் (Neuralink) நிறுவன ஆய்வுகள்.

அனைத்துவித கருவிகளையும் நம் எண்ணவோட்டம் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்கிறது இந்த ஆய்வு.

அட! இது நன்றாக இருக்கிறதே என்று தோன்றுகிறதா? அப்படி என்னதான் செய்யப்போகிறது எலான் மஸ்க்கின் இந்த தொழில்நுட்ப ஜீபூம்பா? வாங்க பார்க்கலாம்...

உயிரினங்களின் மூளையில் மைக்ரோ-சிப்களைப் பொருத்தி, கணினிகள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆராய்ச்சி ஒன்றை நியூராலிங்க் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

ஒரு பன்றியின் மூளையில் கணினி சிப் வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. மனிதனின் மூளையில் இதுபோன்று சிப்கள் வைக்கும் ஒரு வியத்தகு புதிய ஆய்வு முறையின் முன்னோட்டமாக இந்த ஆய்வு பார்க்கப்படுகிறது.

Elon musk
Elon musk
Sebastian Gollnow

எலான் மஸ்க்:

எலான் மஸ்க் -உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர். புதுமை விரும்பி.

டெஸ்லா கார் நிறுவனம் மூலமாக ஆட்டோமொபைல் துறையில் புரட்சியை உண்டாக்கியவர். தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் மூலம் விண்வெளித் துறையில் பல வித்தைகளைக் காட்டிக் கொண்டிருப்பவர்.

இவர் 80% அளவிற்கு முதலீடு செய்திருக்கும் நிறுவனம்தான் நியூராலிங்க். இந்த நியூராலிங்க் நிறுவனம்தான் தற்போது பன்றியின் மூளையில் சிப் வைத்து ஒரு வெற்றிகரமான ஆய்வை முடித்துள்ளது.

அடுத்த கட்டமாக மனித மூளைக்குள் சிறிய சிப்களை வைக்கும் திட்டத்தை வெளியிட்டு, அதற்கான பூர்வாங்கப் பணிகளைத் துவங்கியுள்ளது.

நியூராலிங்க்:

நியூராலிங்க் கார்ப்பரேஷன் ஒரு அமெரிக்க நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம். இது எலான் மஸ்க்கினால் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து பல உயர் நரம்பியல் விஞ்ஞானிகளை நியூராலிங்க் பணியமர்த்தியுள்ளது.

2016-லிருந்து 2019-ற்குள் 158 மில்லியன் நிதியுதவியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.(இதில் 100 மில்லியன் மஸ்கின் பங்காகும்!) உயர் அறிவுத்திறன் கொண்ட 100 பேர் நியூராலிங்கில் பணியாற்றுகின்றனர். திறமையின் அடிப்படையில் ஆண்டிற்கு 3,00,000 முதல் 5,00,000 டாலர்கள் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

பெரும் விஞ்ஞானிகள், Phd முடித்தவர்கள் மட்டுமல்லாது, சமீபத்திய ஆண்டுகளில் கல்லூரி முடித்த திறமையுள்ள மாணவர்கள் கூட நியூராலிங்கில் பணியாற்றுகின்றனர்.

Three little pigs demo
Three little pigs demo

இந்நிறுவனத்தில் செய்யப்படும் முதன்மையான மற்றும் முக்கியமான ஆய்வு "மனித மூளை மற்றும் இயந்திரங்களைத் தொடர்புபடுத்தும்" (Brain-Machine Interfaces (BMIs) ஆய்வாகும்.

மனிதனின் மூளையை நேரடியாக இயந்திரங்களோடு இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து, மேம்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட தனித்துவமான நிறுவனம் இது.

டிரைவிங் லைசன்ஸ் மறந்துட்டோமேன்னு இனி கவலை வேண்டாம்..! - ஒரு அசத்தல் செயலி #MyVikatan

மூன்று சிறிய பன்றிகள் சோதனை:

மூன்று பன்றிகளை வைத்து நியூராலிங்க் செய்த பூர்வாங்க சோதனை பின்வருமாறு,

முதல் பன்றி : இதில் சிப் உள்ளிட்ட எந்த அறிவியல் சாதனமும் வைக்கப்படவில்லை. இது இயல்பான ஒரு சாதாரணப் பன்றி.


இரண்டாம் பன்றி : கெர்ட்ரூட் (Gertrude) என்று பெயரிடப்பட்ட இந்த பன்றியின் மூளையில் நியூராலிங்கின் மைக்ரோசிப் வைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் பன்றி : மூன்றாவது பன்றியின் மூளையில் நியூராலிங்க் மைக்ரோசிப் வைக்கப்பட்டு, அது பின்னர் அகற்றப்பட்டு இருந்தது.

ஆய்வு முடிவுகள்:

கெர்ட்ரூட் பன்றியின் மூளையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எட்டு மி.மீ அளவுள்ள கம்யூட்டர் சிப் ஒன்றை நியூராலிங்க் பொருத்தி இருந்தது. பன்றி இரண்டு மாதங்களாக எந்தவித உடல் உபாதைகளும் இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் பன்றியின் அன்றாட நடவடிக்கையின் போது உருவாகும் சிக்னல்கள், கம்யூட்டர் மூலம் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

தற்போது கெர்ட்ரூட் பன்றியையும், சிப் மூலம் பெறப்பட்ட தகவல்களையும் வெளியுலகத்துக்கு காட்டியிருக்கிறார் எலான் மஸ்க்.

இந்த ஆய்வு முழுவதும் நேரலையில் ஒருமுறை நிகழ்த்திக் காட்டப்பட்டது. மூன்று பன்றிகளுமே எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாக இருந்தன. இரண்டாவது பன்றியின் (கெர்ட்ரூட்) செயல்பாடுகள் அனைத்தும் அதன் மூளையில் இருந்து கணினிக்கு மைக்ரோ சிப் மூலம் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது. மூளையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தையும் சிப் கணினிக்குக் கடத்தியது. இந்தப் பரிமாற்றத்தின் மூலம் கெர்ட்ரூட் பன்றி என்ன நினைக்கிறது, என்ன செய்கிறது மற்றும் என்ன வெளிப்படுத்துகிறது என்பது கணினியில் பதிவானது!

Elon musk
Elon musk
Neuralink Twitter page

நியூராலிங் சிப்பின் தனித்தன்மைகள்:

* ஒரே நேரத்தில் அதிகபட்சம் 1024 கணினிகளுடன் இந்த சிப்பை இணைய முடியும்.

* இந்த சிப்பின் பேட்டரி ஒரு நாள் முழுக்க பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிறது.

* வயர்லெஸ் முறையில் இந்த சிப்பின் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

* போன், கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களுடன் இதை இணைக்க முடியும்.

* இந்த சிப்பை பொருத்துவதும்,நீக்குவதும் எளிது. இணைக்கவும், நீக்கவும் அதிகபட்சம் 30 நிமிடங்கள் போதுமானது.

* மனிதனது மூளைக்கோ, உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்கோ இந்த சிப்பினால் எந்த பாதிப்பும் வராது என நியூராலிங்க் தெரிவிக்கிறது.

* மனித தலைமுடியை விட 8 மடங்கு சிறிய அளவில் இதன் சென்சார்கள் இருப்பதால் மூளைக்கு இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் நியூராலிங்க் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மனித சோதனை:

இதே வகை சிப்பை மனித மூளையிலும் விரைவில் வைக்க முடியும் என்கிறார் எலான் மஸ்க். ரத்தம் வராமல், அனஸ்தீஸ்யா கொடுக்காமல் முப்பதே நிமிடங்களில் இந்த சிப்பை மனித மூளையில் இணைக்கலாம்.

நமது தலையில் ஒரு சிப் இருப்பதை நம்மால் உணரவே முடியாது. இந்த ஆப்புரேஷனுக்கு நம் தலையில் சிறு துளையிட்டால் போதும். இந்த சிப்பில் மொத்தம் 3000 எலக்ட்ரோடுகள்(electrode) இருக்கும்.

Neuralink’s N1 chip
Neuralink’s N1 chip
Neura.link Instagram

அதிகபட்சமாக 4 மிமீ × 4 மி.மீ. என்ற அளவில் இந்த சிறிய சிப்களில் நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய சிறு சிறு எலக்ரோடு இழைகளைப் பயன்படுத்தி, மனித மூளையில் உள்ள நரம்புசெல்களைத் தூண்டி விடுவதன் மூலம், மற்ற நரம்புசெல்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த சிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எலக்ட்ரோடு இழையும் துல்லிய ரோபோட் மூலம் பாதுகாப்பாகவும் வலியில்லாமலும் உட்செலுத்தப்பட இருக்கிறது.

மனித முடியை விட மெல்லிய எலக்ட்ரோடுகள் மூளையில் இருக்கும் நியூரான்கள் உடன் இணைந்து மூளையில் இருந்து சிக்னல்களை கணினிக்கு அனுப்பும்.

வானத்தில் இருந்து கொட்டிய வெள்ளம்! - பரவசத்தை ஏற்படுத்திய `நயாகரா' நீர்வீழ்ச்சி பயணம் #MyVikatan

படிநிலைகள்:

நியூராலிங்க் ரோபோ மனிதனது தலையில் சிறு துளையிட்டு மிகுந்த பாதுகாப்புடனும்,கவனத்துடனும் இந்த சிப்பை மூளைக்குள் செலுத்தும்.

மைக்ரோ சிப்பில் இருக்கும் 3000 எலக்ட்ரோடுகள் மூளையின் நியூரான்களுடன் இணைக்கப்படும்.

மூளையுடன் இணையும் இந்த சிப், மூளையில் இருந்து அருகில் இருக்கும் கணினியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும். கணினியானது தகவல்களை சிப்பிலிருந்து பெறவும்,கணினியில் இருந்து சிப்பிற்கு அனுப்பவும் செய்யும்.

பயன்கள்:

# இதன் மூலம் மனிதர்கள் தங்கள் மூளை மூலம் கணினி, போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களைத் தொடாமலேயே நினைவுகள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.

# மூளையில் இருக்கும் செல்களைத் தூண்டிவிட்டு நரம்பியல் மற்றும் பிற குறைபாடுகளை சரி செய்ய முடியும்.

மைக்ரோசிப் மூலம் கணினி மூளைக்கு கட்டளையிட்டு நோய்களை குணப்படுத்தும்.

# கணினியில் இருந்து சிக்னல்களை அனுப்பி கண்பார்வை இன்மை, பர்கின்சன், காது கேளாத தன்மை, அல்சைமர் என்று நாள்பட்ட குறைபாடுகளைக் கூட குணப்படுத்த முடியும்.

Representational Image
Representational Image
Pixabay

# எதையும் தொடாமல் மூளையின் மூலம் அனைத்து விதமான கருவிகளையும், இயந்திரங்களையும் கட்டுப்படுத்தவும், இயக்கவும் முடியும்.

# மனதில் நினைப்பவை உண்மையில் நடக்கும் அதிசயம் நிகழும். எல்லா சாதனங்களும் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

# மனஅழுத்தம், மனச்சோர்வு, அமைதியின்மை, மறதி உள்ளிட்ட மனம்சார் குறைபாடுகளை எளிதில் சரிசெய்துவிட முடியும்.

# "அப்லோட்" என்னும் அமெரிக்க வெப் சீரீஸில் வருவது போல மூளையின் நினைவுகளை சிப்பில் அப்லோட் செய்து, தேவைப்படும் நேரங்களில் இதை சினிமா போல முன் பின்னாக ஓட்டிப் பார்க்கலாம்.

# மனிதனது நினைவுகளைச் சேகரித்து, அவற்றைக் காலகாலத்திற்கும் பத்திரமாக வைத்திருக்கலாம்.

# ஒருவரின் குழந்தை பருவத்தின் நினைவுகளை இதன் மூலம் மீட்டெடுத்து நம்மால் அதைப் பார்க்க முடியும்.

# செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இதன் மூலம் மிக எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

# நினைவுகளைக் கொண்டு மனிதர்களுக்கு செயற்கை சொர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ கூட உருவாக்க முடியும்!

# மனித நினைவுகள் அழிவற்று வாழும்! நினைவுகள் தான் மனிதன் என்றால், மனிதன் அழிவற்ற பெருவாழ்வு வாழ்வான்!

Neuralink’s N1 chip
Neuralink’s N1 chip
Neura.link Instagram

ஒரு பன்றிக்குப் பொருத்தியது போன்று இத்தகைய சிப்புகளை மனிதர்களுக்குப் பொருத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. இயற்கை, சமநிலைக் குலைவு, கணினிகள் ஆதிக்கம், செயற்கை நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

அனைத்துவித பாதுகாப்பு சவால்களையும் எதிர்கொண்டு, அவற்றிற்கு சரியான தீர்வுகள் காண வேண்டியதும்,உரிய ஒப்புதல்கள் பெற வேண்டியது அவசியம்.

ஆனால் இந்தச் சோதனை மட்டும் வெற்றிபெற்றுவிட்டால் மனித குல வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இது இருக்கும் என்பது நிச்சயம்.

"இந்த சிப் மூலம் மனிதர்களை கணினி கட்டுப்படுத்தும் என்பது தவறான புரிதல். இந்தச் சோதனை மனிதர்கள் அளவற்ற ஆற்றல் உடையவர்களாக மாற வழிவகுக்கும். இது மனித குலத்தின் நன்மைக்கானது" என்று எலான் மஸ்க் கூறுகிறார்!

அழிவற்ற வாழ்வு, காலப்பயணம், நோய்கள் இல்லாத வாழ்வு, தவறுகளில் இருந்து கற்றல் உள்ளிட்ட பல்வேறு கண்ணிகள் இந்த ஆய்வுச் சங்கிலியில் சத்தமின்றி பிணைந்து கிடக்கின்றன!

எலான் மஸ்க் - நினைத்ததையும், முடியாததையும் முடிக்கும் ஆற்றலுடையவர் என உலகத்தால் அறியப்பட்ட மனிதர்! மஸ்க்கின் இந்த நியூட்ராலிங்க் சிப் தொழில்நுட்ப ஜீபூம்பா உண்மையில் பலிக்குமா என காலம் பதில் சொல்லும்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு