Published:Updated:

`காப்பிரைட்' ஆப்ஷனில் இருந்த பிழை! -சுட்டிக்காட்டிய மதுரை மாணவருக்கு பரிசு வழங்கிய ஃபேஸ்புக்

கிஷோர்
கிஷோர் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

``ஓ.டி.டி சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வொர்க் பண்ணுகிறேன். இதனால் எப்போதும் டெக்னாலஜி பற்றியும் இன்டர்நெட்டிலுள்ள பல்வேறு தளங்களையும் கவனித்துவருகிறேன்'’ - கிஷோர்

உலகத்தையே ஒரு முகமாக்கிய ஃபேஸ்புக் தளத்திலுள்ள காப்பிரைட் ஆப்ஷனில் உள்ள தவற்றைக் கண்டுபிடித்து, அதை அந்த நிறுவனத்துக்குத் தெரிவித்து பரிசுபெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகிறது.

கிஷோர்
கிஷோர்
ஈ.ஜெ.நந்தகுமார்

இந்தத் தகவல் அமைச்சர் செல்லூர் ராஜுக்குத் தெரிந்து, கிஷோருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினார். ஃபேஸ்புக்கை பொழுதுபோக்கும் தளமாக சிலர் பயன்படுத்திவரும் நிலையில், அதன் டெக்னிக்கல் விஷயங்களிலுள்ள குறைபாடுகளை உன்னிப்பாகக் கவனித்து சரிசெய்ய வைக்கும் அளவுக்கு செயல்பட்டுள்ள மதுரை ஜெய்ஹிந்துபுரத்து இளைஞர் கிஷோரை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்ப்பதில் வியப்பேதுமில்லை.

கிஷோரிடம் பேசினோம், ''நான் சென்னையிலுள்ள கல்லூரியில் பி.டெக் படித்துவருகிறேன். அப்படியே அங்கு நண்பர்களுடன் சேர்ந்து, ஆன்லைன் மீடியாக்களில் கன்டன்ட் கிரியேட்டிவ் உருவாக்கி வருகிறேன். ஓ.டி.டி சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வொர்க் பண்ணுகிறேன். இதனால் எப்போதும் டெக்னாலஜி பற்றியும் இன்டர்நெட்டிலுள்ள பல்வேறு தளங்களையும் கவனித்து வருகிறேன்.

அமைச்சர் பாராட்டு
அமைச்சர் பாராட்டு
ஈ.ஜெ.நந்தகுமார்

அந்த வகையில்தான் ஃபேஸ்புக்கிலுள்ள ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷனை கவனித்தபோது அதிலுள்ள தவறு கண்ணில் பட்டது. ஃபேஸ்புக்கில் ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷன் இருக்கும். அது வேண்டுமென்றால் ஆக்டிவேட் செய்யலாம். அதன் பின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படும் வீடியோ ஆடியோக்களை நாம் காப்பிரைட் செய்யலாம்.

இப்படி காப்பிரைட் செய்யப்பட்டவைகளை வேறு நபர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் பிரைவேட் அல்லது பப்ளிக் என்ற பிரிவில் பதிவேற்றம் செய்வார்கள். பிரைவேட் பிரிவில் பதிவேற்றும்போது அவருடைய விவரங்களை காப்பிரைட் செய்துள்ள கிரியேட்டருக்கு ஃபேஸ்புக் காட்டும். பதிவேற்றியவரின் விவரங்களை காட்டக்கூடாது என்பதற்குத்தான் பிரைவேட் என்ற ஆப்ஷனை வைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பதிவேற்றியவரின் விவரங்களைக் காட்டுவது பிழையாகும். இதை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தேன்.

கிஷோர்
கிஷோர்
ஈ.ஜெ.நந்தகுமார்

உடனே தங்கள் பிழையைச் சரிசெய்துவிட்டார்கள். அதோடு, என்னைப் பாராட்டி ரூ. 77,000 பரிசு அனுப்பினார்கள். இந்தப் பாராட்டு, டெக்னாலஜி பற்றி படித்துவரும் எனக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. எதிர்காலத்தில், மீடியா டெக்னாலஜியில் சாதிக்க வேண்டும் என்பது எண்ணம்'' என்றார். மன்னனைப் புகழ்ந்து பாடும் பாட்டில் மட்டுமல்ல, நெட்டிலும் பிழையைக் கண்டுபிடித்து பேர் வாங்குவார்கள் மதுரை நக்கீரர்கள்.

அடுத்த கட்டுரைக்கு