Published:Updated:

கேமிங்க்காகப் புதிய செயலி - அமேசான், யூடியூபைத் தொடர்ந்து கேமிங் களத்தில் ஃபேஸ்புக்!

பேஸ்புக் கேமிங்
பேஸ்புக் கேமிங்

ஃபேஸ்புக்கில் கொண்டிருக்கும் 2.5 பில்லியன் பயனர்களில் 700 மில்லியன் பயனர்கள் கேமிங் ஃபேஸ்புக்கின் கேமிங் பக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஃபேஸ்புக் வலைதளத்தில் கேமிங்க்கு எனத் தனி இடம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், மொபைலில் பயன்படுத்தும் செயலியில் அப்படி இருக்காது. ஆனால், இன்று கேமிங்க்கு எனத் தனி செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது அந்நிறுவனம். கடந்த 18 மாதங்களாக ஆசியாவின் சில நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் இதைச் சோதனை செய்து பார்த்த நிறுவனம், தற்போது உலகம் முழுவதும் இருக்கும் பயனர்களின் பயன்பாட்டுக்கு 'ஃபேஸ்புக் கேமிங்' (Facebook Gaming) என்ற அதன் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தற்போது இந்தச் செயலி ஆண்ட்ராய்டு பயனர்களுக்குப் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. ஆப்பிள் சாதனங்களில், இந்தச் செயலிக்கான அனுமதி கிடைத்தவுடன் வெளியிடப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.

Live Streamer
Live Streamer

கேமிங்கை பொறுத்தவரை முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனத்தின் ட்விட்ச் (Twitch) தான். அதைத் தொடர்ந்து யூடியூபும், அதற்கடுத்த இடத்தில் ஃபேஸ்புக்கின் கேமிங் பக்கமும் இருக்கிறது. கேம் விளையாடுவதை நேரலை செய்பவர்கள் எண்ணிக்கையும் அதைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கையும் ட்விட்சில் அதிகம். உலகம் முழுவதும் நேரலையில் கேமிங்கை பார்க்கும் நேரத்தில் 61 சதவிகிதத்துடன் ட்விட்ச் முதல் இடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து யூடியூப் 28 சதவிகிதம் பார்க்கும் நேரத்தைக் கொண்டிருக்கிறது. முன்னதாக இந்தச் செயலியானது வருகின்ற ஜூன் மாதம்தான் வெளியிடப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிலைமையில் புதிய வகையான பொழுதுபோக்கைப் பயனர்கள் தேடுவதை மனதில் கொண்டு இந்த நேரத்தில் வெளியிட்டிருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

அதிகரிக்கும் அடல்ட் பதிவுகள்... சைபர் புள்ளியிங்... சவால்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறது  ஃபேஸ்புக்?

ஃபேஸ்புக்கில் கொண்டிருக்கும் 2.5 பில்லியன் பயனர்களில் 700 மில்லியன் பயனர்கள் கேமிங் ஃபேஸ்புக்கின் கேமிங் பக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் நேரலை செய்பவர்களாகவோ அதைப் பார்ப்பவர்களாகவோ, ஏதாவது ஒரு வகையில் கேமிங் பக்கத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். எனினும், அது மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஃபேஸ்புக் கேமிங் ரசிகர்களைத் தன்வசம் ஈர்க்க ட்விட்ச் மற்றும் யூடியூப் மேற்கொண்ட அதே பாணியைத்தான் மேற்கொண்டு வருகிறது.

Facebook Gaming
Facebook Gaming

பிரபலமான கேமிங் நிறுவனங்கள் மற்றும் கேம் ஸ்ட்ரீமர்களுடன் இணைந்து தனக்கான கேமிங் ரசிகர் வட்டத்தை அதிகரித்தது. Stream Elements என்ற பிரபல ஸ்ட்ரீமிங் நிறுவனம் அளித்த தரவுகளின்படி, ஃபேஸ்புக்கின் கேமிங் தளம் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் நேரலை செய்பவர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதம் உயர்ந்துள்ளது. நேரலையை ஒரே நேரத்தில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஃபேஸ்புக்கின் கேமிங் தளமும் சீரான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. ஃபேஸ்புக்கின் இந்தப் புதிய செயலியில் எளிதாக யாரும் நேரலை செய்யலாம் என்பது இதன் ப்ளஸ் பாய்ன்ட். இதன் வரவு பயனர்களை எந்த அளவுக்குக் கவர்கிறது என்பதை இனி வரும் காலங்களில்தான் காண வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு