Published:Updated:

குழந்தைகளுக்கான 'கிட்ஸ் மெசெஞ்சர்' - ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சென்ற பெற்றோர்களின் புகார்கள்!

க.சுபகுணம்

குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் செயலியில் சில குறைகள் இருப்பதாகவும் பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே குழந்தைகள் முகம் தெரியாத நபர்களோடு நட்பு கொண்டு வருவதாகவும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து புகார்கள் வருகின்றன.

சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்கள் ( Pixabay )

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களால் குழந்தைகள் வழி தவறிச் செல்வதும் பல பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதும் நடந்துகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க, 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கெனப் பிரத்யேகமாக 'கிட்ஸ் மெசெஞ்சர்' என்ற செயலியைக் கொண்டு வந்தது ஃபேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக் செயலி
ஃபேஸ்புக் செயலி
Pixabay

2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் செயலியில் குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலான பல அம்சங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கும். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு மட்டுமே தொடர்பில் இருக்கக்கூடிய விதத்திலும் தெரியாத முகங்களோடு பழக்கம் ஏற்படுவதைத் தடுக்கவும் இது கொண்டுவரப்பட்டது. நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்குக்கூட இதில் பெற்றோரின் அனுமதி தேவை. பெற்றோர் அனுமதி கொடுக்கும் நபர்களோடு மட்டுமே குழந்தைகள் இணைப்பில் இருக்கவும் தொடர்புகொள்ளவும் முடியும். ஆனால், இந்தச் செயலியில் சில குறைகள் இருப்பதாகவும் பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே குழந்தைகள் முகம் தெரியாத நபர்களோடு நட்பு கொண்டு வருவதாகவும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து புகார்கள் வருகின்றன.

இந்தச் செயலியில் குரூப் சாட் செய்யும் வசதிகளும் உள்ளன. அதில் குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களோடு நட்புகொள்வதைத் தடுக்க எந்த வசதிகளும் இல்லை. அதே சமயம், இந்தச் செயலியில் நட்பு பாராட்ட இருவரின் பெற்றோர்களில் ஏதேனும் ஒரு தரப்பில் அனுமதி கிடைத்தாலே போதும் என்ற வகையில் இருப்பதையும் பெற்றோர்கள் குறை கூறியுள்ளார்கள். ஒரு குழந்தையின் பெற்றோர் மட்டுமன்றி அவரது குடும்பத்தைச் சேர்ந்தவராகக் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களில் யார் வேண்டுமானாலும் அந்தக் குழந்தையோடு பேசலாம். இப்படி இருக்கக் கூடாதென்றும், இதன்மூலம் முன்பின் பழக்கமில்லாதவர்களோடு நட்புகொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பு ஏற்படலாமென்றும் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பி.பி.சி-யிடம் பேட்டியளித்த ஃபேஸ்புக் நிறுவனம், "புகார்கள் வந்தவுடனேயே இந்த வசதியை நீக்கிவிட்டோம்" என்று கூறியுள்ளனர். ஆனால், இதுகுறித்து முழுமையான தரவுகள் எதையும் தர ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்துவிட்டனர்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
Pixabay

'காமன் சென்ஸ்' என்ற குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்டேயர் இதுகுறித்துப் பேசியபோது, "ஃபேஸ்புக் மெசெஞ்சர் கிட்ஸ், அதன் மற்ற வசதிகளில் இருப்பதுபோலவே கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளை குழந்தைகள் மற்றும் பெற்றோர் இடையே கொண்டு வருகிறது. இதற்கும் பெரியவர்களுக்கான ஃபேஸ்புக் செயலிக்கும் இடையே பெரிய வேறுபாடில்லை" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

ஏற்கெனவே, தனிமனிதத் தரவுகள் வெளியான பிரச்னையில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.