Published:Updated:

''செய்திகளுக்குப் பணம் கொடுக்க முடியாது!'' - ஆஸ்திரேலிய அரசை மிரட்டுகிறதா ஃபேஸ்புக்?!

டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள் - ஃபேஸ்புக்
டெக் நிறுவனங்கள் vs செய்தி நிறுவனங்கள் - ஃபேஸ்புக்

சமூக வலைதளங்களுக்கென ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை வகுத்திருக்கிறது. இதற்கு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, ஆஸ்திரேலிய அரசுக்கும், அந்நிறுவனங்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துவருகிறது.

ஃபேஸ்புக்குக்கும், ஆஸ்திரேலிய அரசு மற்றும் செய்தி நிறுவனங்களுக்குமான பனிப்போர் தீவிரமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த பல மாதங்களாகவே நீடித்துவரும் இப்பிரச்னை, கடந்த சில நாட்களாக இரண்டு தரப்புமே முரண்டுபிடிப்பதால் உச்சம் தொட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே, சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் தான் முதலிடத்தில் இருந்து வருகிறது. பல நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனங்களும், ஃபேஸ்புக்கில் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றன. ஆனால், ''ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற இணையதளங்கள் எந்தவித கட்டணமும் இன்றி செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருமானங்களையும் அந்த நிறுவனங்களே அபகரித்துக் கொள்கின்றன'' என ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் குற்றம் சாட்டியதில் இருந்துதான் பிரச்னையே ஆரம்பமானது.

Facebook
Facebook

''செய்தி நிறுவனங்கள் பெரிதாக வருவாய் இல்லாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், அவற்றிடம் இருந்து இந்த டெக் நிறுவனங்கள் செய்திகளைப் பெற்றுக் கொள்கின்றன. அதன் மூலம் வரும் விளம்பர வருவாய்களையும் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், செய்தி நிறுவனங்களுக்கு ஒரு பங்கு பணம்கூடத் தருவதில்லை'' என பிரபல ஆஸ்திரேலிய மீடியா நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றன. இதைத் தீர்ப்பதற்காக ஆஸ்திரேலிய அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்திருக்கிறது. அதை அமலுக்குக் கொண்டு வரவும் ஆர்வம் காட்டி வருகின்றது. ஆனால், இதற்கு முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கூகுள் தற்போது பணிந்துவிட, ஃபேஸ்புக்கோ ஆஸ்திரேலிய அரசையே மிரட்டும் வகையில் முரண்டுபிடித்துவருகிறது.

நெட்ஃபிளிக்ஸில் 'ஜகமே தந்திரம்'... ரிலீஸ் டேட் என்ன?!

ஆஸ்திரேலிய அரசின் நிலைப்பாடு என்ன?

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டப்படி, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் தளங்களில் காண்பிக்கப்படும் செய்திகளுக்கான தொகையை டெக் நிறுவனங்கள் நேரடியாக ஆஸ்திரேலியாவின் செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான தொகை எவ்வளவு என்பதனை செய்தி நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும் அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அரசு அமைக்கும் செயற்குழு, அதனை ஒழுங்கு செய்யும் என்பதுதான். இந்த வாரம், ஆஸ்திரேலியாவின் செனட் சபையில் இது குறித்த தீர்மானம் நிறைவேற உள்ளது. அது வெற்றியடையும் பட்சத்தில் இந்த வார இறுதிக்குள் சட்டம் அமலாவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

Facebook | Google
Facebook | Google

கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கின் நிலைப்பாடு என்ன?

ஃபேஸ்புக்கும், கூகுளும் ஆரம்பத்திலிருந்தே இதனைக் கடுமையாக எதிர்த்து வந்தன. ஆஸ்திரேலியா இந்த சட்டத்தில் மிகக் கடுமையாக இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்தே தங்கள் சேவையை நீக்கிக் கொள்வோம் என்ற தொனியில் முதலில் கூகுள் சொன்னது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியாவின் முதன்மையான செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டிருக்கிறது கூகுள். இதன் மூலம், சுமுகமான தீர்வை கூகுள் விரும்புவதாகவே தெரிகிறது.

ஆனால், ஃபேஸ்புக் தன் நிலையிலிருந்து பின் வாங்க மறுத்துவிட்டது. அதன் எதிரொலியாகக் கடந்த வாரம், தனது ஆஸ்திரேலிய தளத்தில் இருந்து செய்திகள் அனைத்தையும் நீக்கி தன் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக். எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி செய்யப்பட்ட இந்த செயலுக்கு ஆஸ்திரேலிய அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறது. எனினும், ஃபேஸ்புக் நிறுவனம், எதற்கும் செவி சாய்ப்பதாக இல்லை.

செவ்வாய் கிரகத்தில் 'Perseverance' ரோவர்... என்னவெல்லாம் செய்திருக்கிறது... இனி என்ன செய்யும்?!

என்ன சொல்கிறது ஃபேஸ்புக்?

தங்களுக்கும் செய்தி நிறுவங்களுக்கிடையேயான உறவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்கிறது ஃபேஸ்புக். ''ஃபேஸ்புக்கில் செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்திகளைப் பகிர்வதன் மூலம், ஃபேஸ்புக்கைவிட அந்த நிறுவனங்களே அதிக அளவில் பயனடைவதாகக் குறிப்பிடுகிறது ஃபேஸ்புக். கூகுளிடம் செய்தி நிறுவனங்கள் தாமாக முன் வந்து தங்கள் செய்திகளை அளிப்பதில்லை. அது கூகுளுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கிறது. மேலும், கூகுளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் இது முக்கியமும் கூட. ஆனால், ஃபேஸ்புக் அப்படியில்லை. செய்தி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்துதான் அவர்களது செய்திகளைத் எங்களது தளங்களில் பதிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கில் மக்கள் பார்க்கும் விஷயங்களில் இது வெறும் 4 சதவிகிதம் மட்டுமே. ஆனால், அதன் மூலம் மட்டுமே 2020-ல் செய்தி நிறுவனங்களுக்கு மொத்தம் 315 மில்லியன் டாலர் அளவுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறோம்'' என்கிறது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்

இதன் எதிரொலியாகவே கடந்த வாரம், தங்கள் தளத்தில் ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் தங்கள் செய்திகளைப் பகிர்வதைத் தடை செய்துள்ளது ஃபேஸ்புக். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் பயனர்கள் ஆஸ்திரேலிய செய்திகளையும், ஆஸ்திரேலிய பயனர்களுக்கு ஆஸ்திரேலியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் இருந்து பகிரப்படும் அனைத்து செய்திகளையும் தடை செய்துள்ளது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக் என்ன செய்தாலும், சட்டத்தை அமலாக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என ஆஸ்திரேலிய அரசும் தன் நிலையில் இருந்து மாறாமல் நிற்கிறது. மேலும், இந்த பிரச்னையில் மற்ற நாடுகளின் ஆதரவையும் திரட்டும் பொருட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருடனும் கலந்துரையாடியிருப்பதாகத் தெரிகிறது.

இனி என்ன நடக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு