Published:Updated:

திறனில்லாத ஆசிரியர்கள், போலி விளம்பரங்கள்?! WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சை!

WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சைகள்!
News
WhiteHat Jr-யை சுற்றும் சர்ச்சைகள்!

தொடர்ந்து WhiteHat Jr-யை விமர்சித்துவந்ததால் பிரதீப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் WhiteHat Jr-ன் நிறுவனரும் CEO-வுமான கிரண் பஜாஜ். 20 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் கற்றுத்தரும் ஸ்டார்ட்-அப்பாக ஆரம்பிக்கப்பட்ட தளம் WhiteHat Jr. இந்தியாவில் குறிப்பாக லாக்டெளன் காலத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டது இந்த தளம். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வாடிக்கையாளர்களைக் குவிக்க ஆரம்பித்தது WhiteHat Jr. அடுத்ததாக இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் விரிவடைய முடிவுசெய்திருந்தது. இதன் விளைவாகப் பிரபல ஆன்லைன் கல்வி தளமான பைஜூஸின் தாய் நிறுவனமான 'Think and Learn' 300 மில்லியன் டாலருக்கு (சுமார் 2,223 கோடி ரூபாய்) WhiteHat Jr தளத்தை வாங்கியது.

WhiteHat Jr Ad
WhiteHat Jr Ad

இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது WhiteHat Jr-ன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சூட்சமங்கள்தான். டிஜிட்டல் விளம்பரங்களில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் வரை செலவழித்தது அந்த நிறுவனம். 'இணையத்தைத் திறந்தாலே WhiteHat Jr விளம்பரங்கள் தான் வருகின்றன' எனச் சிலர் புலம்பும் அளவுக்கு அதன் விளம்பரங்களை சமூக வலைத்தளங்களிலும் மற்ற டிஜிட்டல் தளங்களில் வர வைத்தது. இந்த மார்க்கெட்டிங் பல பயனாளர்களை பெற்று தந்தது. பிரச்னை தொடங்கியதும் இங்கேதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விளம்பரங்களின் தரத்தை மேற்பார்வையிடும் Advertising Standard Council of India (ASCI) அமைப்பிற்கு WhiteHat Jr விளம்பரங்கள் குறித்து புகார்கள் வர ஆரம்பித்தன. 'அடுத்த விமானத்திலேயே உங்கள் குழந்தை சிலிக்கான் வேலிக்கு பறக்க வேண்டுமா?', '7 வயது Ted X பேச்சாளரைப் பாருங்கள், உங்கள் குழந்தை இப்படி ஆக வேண்டுமா', 'இளம் வயதில் கோடிங்கில் தேறியவர்களுக்குப் பயிற்சி கொடுக்க கூகுள், வேய்மோ போன்ற நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன' என்பது போன்ற வாசகங்களுடன் வெளிவந்தன இந்த விளம்பரங்கள். இதற்கு சில உதாரணங்களையும் காட்டியது அந்நிறுவனம். சிறுவர்கள் வடிவமைத்த ஆப்கள் என WhiteHat Jr சொன்ன ஆப்கள் பலவும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கவே செய்கின்றன. ஆனால், அனைத்தும் WhiteHat Jr பெயரிலிருந்தன. சில நூறு பேர் மட்டுமே அதைப் பதிவிறக்கியிருந்தனர். ரேட்டிங்கும் மிகவும் மோசமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களைத் திசைதிருப்பும் வகையில் அமைந்திருப்பதாக ASC அமைப்பு WhiteHat Jr-ன் பல விளம்பரங்களை நீக்கச்சொல்லி உத்தரவிட்டது.

WhiteHat Jr Ad
WhiteHat Jr Ad

குறிப்பாக 'வூல்ஃப் குப்தா' என்ற மாணவனை வைத்து WhiteHat Jr செய்த விளம்பரங்கள் பெரும் சர்ச்சையில் சிக்கின. "13 வயதில் உங்கள் குழந்தைகள் பள்ளியில் என்ன செய்வதெனத் தெரியாமல் இருக்கும்போது வூல்ஃப் குப்தா செயற்கை நுண்ணறிவு கற்று கூகுளில் 20 கோடி சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்" என தங்களது வகுப்புகளில் சேருமாறு விளம்பரம் செய்தது WhiteHat Jr. ஒரு தளத்தில் 20 கோடி ரூபாய் என்றது இன்னொரு தளத்தில் 9 கோடி ரூபாய் என்றது. வயதும் 9, 13, 14 என மாற்றி மாற்றி விளம்பரம் செய்தது அந்நிறுவனம். இதைப் பலரும் பார்த்து 'யாருப்பா அந்த வூல்ஃப் குப்தா?' எனத் தேட ஆரம்பித்தனர். கற்பனையான கதாபாத்திரம் என்றாலும் WhiteHat Jr செய்வது தார்மீக ரீதியாகத் தவறு எனப் பலரும் விமர்சித்தனர். இதுபற்றி விமர்சிக்கும் பதிவுகளை 'Copyright Infringement' என நீக்கித்தொடங்கியது WhiteHat Jr.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் பிரதீப் பூனியா என்பவர் WhiteHat Jr நிறுவனத்தினுள் நடக்கும் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை கைப்பற்றி அவற்றை வெளியிடத் தொடங்கினார். 'WhiteHat Jr போலி விளம்பரங்கள் மூலம் ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் விஷயங்களுக்குப் பணம் வசூலிக்கிறது' என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வேலைத்தேடி வரும் பெண்களை இரட்டை அர்த்தத்தில் தரைகுறைவாக அதன் ஊழியர்கள் பேசும் ஸ்கிரீன்ஷாட்களையும் வெளியிட்டார். WhiteHat Jr-ல் இருப்பதில் பலரும் தரமில்லாத ஆசிரியர்கள் என்பதும் இவரது முக்கிய குற்றச்சாட்டு. அதை நிரூபிக்கும் விதமாக மாணவர்கள் பயிற்சியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு வீடியோ ஒன்றையும் இவர் பதிவிட்டார்.

"WhiteHat Jr-ம் அதன் CEO கரண் பஜாஜூம் செய்வது தெளிவான ஏமாற்று வேலை" என்னும் இவர் முன்னாள் ஐஐடி மாணவர். இதற்கு முன்பு மற்றொரு ஆன்லைன் கல்வி ஸ்டார்ட்-அப்பில் பணியாற்றி வந்தவர். இவரது வீடியோக்களையும் யூடியூப்பிலிருந்து நீக்கியது WhiteHat Jr. அப்படியும் தொடர்ந்து WhiteHat Jr-யை விமர்சித்துவந்ததால் பிரதீப் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் WhiteHat Jr-ன் நிறுவனரும் CEO-வுமான கரண் பஜாஜ். 20 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் WhiteHat Jr பற்றி பதிவிட பிரதீப் பூனியாவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. "சட்ட விரோதமாக WhiteHat Jr-யிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைப் இனி பதிவிடக் கூடாது" என்று பிரதீப் பூனியாவுக்கு உத்தரவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம். 'WhiteHat Snr' என்ற அவரது யூடியூப் சேனலை மாற்றுமாறும் உத்தரவிடப்பட்டது. மறு விசாரணை வரும் ஜனவரி மாதம் நடக்கவிருக்கிறது.

பூனியாவின் முறைகள் தவறாக இருந்தாலும் அவர் சொல்வது போல WhiteHat Jr-ன் போக்கு சரியல்ல என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது. அந்நிறுவனத்தின் சேவையை யார் கேள்வி கேட்டாலும் உடனடியாக அவர்களின் பதிவுகளை நீக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. பிரபல ஏஞ்செல் முதலீட்டாளரான அனிருதா மல்பணியும் தொடர்ந்து WhiteHat Jr-ன் விளம்பர யுக்திகளையும் அதன் சேவையையும் விமர்சித்து வருகிறார். இவர் மீதும் 14 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நேற்று வழக்கு தொடர்ந்திருக்கிறது WhiteHat Jr. இவருக்கும் WhiteHat Jr பற்றி கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து இன்று உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

மொத்தமாகப் பார்த்தால் குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால் இது போன்ற விளம்பரங்கள் பெற்றோர்களைக் குறிவைத்தே போடப்படுகின்றன. இந்த பெற்றோர்கள் 'கூகுள் வேலை, Ted X பேச்சாளர்' என கனவுகளில் மூழ்காமல் தங்களது மகன்/மகள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையுடன் மட்டும் கல்வியை அணுகினால் இது போன்ற விளம்பரங்களெல்லாம் தானாகவே காணாமல் போய்விடும்.