Published:Updated:

`ஜியோவுக்கு எதிராக ட்ராய் அதிரடி' - மொபைல் ரிங் டைம்மை உயர்த்தியது!

இறுதியாக ஜியோவுடன் முரண்படத் தொடங்கியிருக்கிறது ட்ராய்.

ட்ராய் அதிரடி
ட்ராய் அதிரடி

ஜியோ மற்ற நிறுவன அழைப்புகளுக்குத் தனியாக நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் விதித்ததுதான் கடந்த மாதம் டெலிகாம் வட்டத்தில் ஹாட் டாபிக். இது கொண்டுவரப்பட்டதன் காரணம் IUC (Interconnect Usage Charge) எனப்படும் கட்டணம்தான். ஏர்டெல் வாடிக்கையாளர் ஜியோ வாடிக்கையாளரை அழைத்தால், அந்த அழைப்பை இணைக்க ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை ஜியோ வசூலிக்கும். அதுபோல் ஜியோ வாடிக்கையாளர் ஏர்டெல்லுக்கு அழைத்தால், அந்த அழைப்பை இணைக்க ஜியோ நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகையை ஏர்டெல் நிறுவனம் வசூலிக்கும். இதுதான் IUC கட்டணம்.

ஜியோ
ஜியோ

இலவச வாய்ஸ் கால்களைத் தந்துவந்த ஜியோ, IUC கட்டணமாக நிமிடத்துக்கு ஆறு பைசாவை மற்ற நிறுவனங்களுக்குக் கொடுப்பதை விரும்பவில்லை. மூன்று ஆண்டுகளில் சுமார் 13,500 கோடி ரூபாயை இப்படி IUC தொகையாக மற்ற நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்தது ஜியோ. இதைச் சமாளிக்கக் கையில் எடுத்த ஆயுதம்தான் ரிங்டைம் குறைப்பு. ஏர்டெல், வோடஃபோன் போன்ற பிற நிறுவனங்களுக்குச் செல்லும் அழைப்புகளுக்கு ஜியோவில் 20 விநாடிகள்தான் ரிங் அடித்தன. இப்படி ரிங்டைமைக் குறைப்பதன்மூலம் பிற நெட்வொர்க் சந்தாதாரர்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் அழைப்புகளை எடுக்கும் வாய்ப்புகள் குறையும். பலரும் மிஸ்டுகாலைப் பார்த்துத் திருப்பி அழைப்பர். இதன்மூலம் IUC செலவு குறைவதுடன் அதன்மூலம் வருமானமும் பெறலாம் என்பதே ஜியோவின் மாஸ்டர் பிளான்.

ஜியோவின் இந்தச் செயல், மற்ற நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து டிராயிடம் புகார் கொடுத்தன. "மற்ற நிறுவனங்களின் 2G, 3G சேவைகளின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் அவற்றின் வாடிக்கையாளர்கள் பலரும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டுகாலே கொடுக்கின்றனர். ஜியோ வாடிக்கையாளர்தான் திருப்பி அழைக்கிறார்கள். ஜியோவில் நாள் ஒன்றுக்கு 25-30 கோடி மிஸ்டுகால்கள் வருகின்றன’’ என்றது ஜியோ.

நிமிடத்துக்கு 6 பைசா.. ஏர்டெல், வோடஃபோன் அழைப்புகளுக்குக் கட்டணம் விதித்த ஜியோ!

தொடர்ந்து அக்டோபர் 18-ம் தேதி இதுதொடர்பாக டிராய் நடத்திய கூட்டத்தில் ஏர்டெல் நிறுவனம், ‘ரிங்டைமை 45 நொடிகளாக வரையறுக்க வேண்டும்’ என்றது. வோடஃபோன் - ஐடியா நிறுவனம், ‘30 நொடிகள் வைக்கலாம் அல்லது அழைக்கப்படுகின்ற டெலிகாம் நிறுவனமே இதை நிர்ணயிக்கலாம்’ என்றது. ஆனால், ஜியோ நிறுவனமோ, ‘94 சதவிகித அழைப்புகள் 20-25 நொடிகளிலேயே ஏற்கப்பட்டுவிடுகின்றன. தவிர, உலகளவிலும் ரிங்டைம் 15-20 நொடிகள் மட்டுமே இருக்கிறது. அதிக நொடிகள் ரிங்டைம் வைப்பதால் நெட்வொர்க் வீணாகிறது’ என்று வாதாடியது.

இந்த விவகாரத்தில் இறுதியாக முடிவெடுத்துள்ளது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்.

அதன்படி மொபைல் அழைப்புகளுக்கு குறைந்தபட்சம் 30 விநாடிகளாவது ரிங் போகவேண்டும், லேண்ட்லைன் அழைப்புகளுக்கு 60 விநாடிகளாவது ரிங் போகவேண்டும் என்று அறிவித்துள்ளது ட்ராய். இதன்மூலம் இறுதியாக ஜியோவுடன் முரண்படத் தொடங்கியிருக்கிறது ட்ராய்.