Published:Updated:

VPN பயன்படுத்துவது சட்டவிரோதமா... காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?

VPN பயன்படுத்தியதற்கு FIR
VPN பயன்படுத்தியதற்கு FIR

VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் சில நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு, தொடர்ந்து பல விவாதத்துக்குரிய திட்டங்களை அமல்படுத்திவருகிறது. காஷ்மீரில் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டதும் அப்படியான ஒரு திட்டம்தான். இதனால், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் சட்ட ஒழுங்குப் பிரச்னைகள் வருமெனக் காரணம் காட்டி இணையத்தை முடக்கியது அரசு. இப்போது, சமீபத்தில் இந்தக் குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறிய பிறகு, அஸ்ஸாமும் இந்தியாவின் பிற வடகிழக்குப் பகுதிகளும் காஷ்மீருடன் இணைந்திருக்கின்றன.

இப்படித் தொடர் இணைய முடக்கங்களால் உலகின் `Internet shutdown capital' என்ற பெயரெடுத்தது இந்தியா. உலகில் வேறு எந்த நாட்டிலும் இத்தனை இணைய முடக்கங்கள் நடப்பதில்லை.
இணைய முடக்கம்... இந்தியா நம்பர் ஒன்!

இப்படி, காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முடக்கப்பட்ட இணையம் இந்த ஜனவரி மாதம்தான் மீண்டும் கொடுக்கப்பட்டது. அதுவும் 2G வேகத்தில்தான் தரப்பட்டது. அதிலும் பல கட்டுப்பாடுகள். மக்களுக்கு சில முக்கிய இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தும் அனுமதி தரப்பட்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் பட்டியல் (Whitelisted Websites), இணையதள சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டு அதை மட்டுமே வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது அரசு.

இந்தப் பட்டியலில் எந்தச் சமூக வலைதளங்களும் இடம்பெறவில்லை. கடந்த வாரம், இந்தத் தடையை மீறி VPN பயன்படுத்தியதற்காகப் பலர் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை. இந்த VPN என்னவென்று இன்றைய இளைஞர்களிடம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. பலரும் அதைப் பயன்படுத்திவருகின்றனர். ஆனால், அரசின் இந்த நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்
VPN என்றால் என்ன?
Virtual Private Network எனப்படும் VPN, உங்களுக்கு மட்டுமேயான தனி மெய்நிகர் நெட்வொர்க். இதில் நீங்கள் எந்த இணையதளத்திற்குச் செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது.

இது போன்ற VPN சேவைகளை இன்று எளிதாக பிரவுசர்களிலும் பிரத்யேக ஆப்கள் மூலமும் பெற முடியும். இதைப் பயன்படுத்தியதற்குத்தான் காஷ்மீரில் சிலர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர்
இது எந்தளவுக்கு இருக்கிறதென்றால், சாலைகளில் செல்லும் மக்களை நிறுத்தி வலுக்கட்டாயமாக அவர்களின் மொபைல்களை அன்லாக் செய்யச்சொல்லி சோதனை செய்துள்ளனர் காவல்துறையினர்.

இதனால், சட்டப்படி VPN பயன்படுத்தியதற்கெல்லாம் வழக்கு தொடர முடியுமா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முதலில் எந்தெந்தச் சட்டங்களின்கீழ், ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது என்பதைப் பார்த்தோம். சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) 13-வது பிரிவிலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின் கீழும், இபிகோ 188 மற்றும் 505-ம் பிரிவுகளின் கீழும் சுமார் 200-க்கும் அதிகமான பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

VPN
VPN

இதில் கேள்வி என்னவென்றால், சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்கே FIR போடப்பட்டதா அல்லது தவறாக அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டதா என்பதுதான். UAPA சட்டம், இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்களையே சட்டவிரோதச் செயல்பாடுகள் எனக் குறிப்பிடுகிறது. இது கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்குவதாகவும் இருக்கலாம் என்பதால் இந்தப் பதிவுகளில் பெரிய அளவில் அச்சுறுத்தல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்தச் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யமுடியும். பொதுமக்கள் இடையே பயத்தையும் இரு பிரிவினர் இடையே மோதலையும் வன்முறையையும் தூண்டும் செயல்களையே இபிகோ 505-ம் கீழ் தண்டிக்கமுடியும்.

இதனால் VPN மூலம் சமூக வலைதளங்கள் பயன்படுத்தியதற்காக மட்டும் இந்த UAPA மற்றும் இபிகோ 505-ம் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்துவிட முடியாது. இபிகோ 188-ம் பிரிவின்கீழ் வேண்டுமானால் வழக்கு பதிவுசெய்யலாம். இது அரசு அதிகாரி பிறப்பித்த ஆணை ஒன்றை மீறும் விதமாக நடந்துகொண்டதற்காகப் பதிவுசெய்யமுடியும்.

Supreme Court
Supreme Court

எப்படிப் பார்த்தாலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவின்கீழ் காஷ்மீரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வழக்குகள் செல்லாது. ஏனென்றால் அப்படி ஒரு சட்டமே கிடையாது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், எளிதாகத் துஷ்பிரயோகம் செய்யமுடியும் என்பதாலும் இந்தச் சட்டம் 2015-ல் நீக்கப்பட்டது. ஆனால், இன்னும் இந்தப் பிரிவில் பல வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் கர்நாடகாவில் இப்படி நடந்த சம்பவம் ஒன்றில் கர்நாடக உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. "இப்படியாக FIR பதிவு செய்யப்பட்டது சட்டத்தை மீறியதாகவும் தேவையில்லாமல் குடிமகன்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவுமே எடுத்துக்கொள்ளப்படும்" எனக் காவல்துறை அதிகாரிகளுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.

இதுகுறித்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கோவையைச் சேர்ந்த சைபர் வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் பேசினோம். "தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு, தொலைத்தொடர்பு சேவைகள் வழி அவதூறு பரப்புவதைத் தடுப்பதற்கான சட்டப்பிரிவு. ஆனால், இந்தச் சட்டம் 2015-ல் ஸ்ரேயா சிங்கால் மற்றும் இந்திய அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் நீக்கப்பட்டது. நீக்கப்பட்ட இந்தச் சட்டத்தை வைத்து ஒருவரைக் கைது செய்யமுடியாது. இது காலாவதியான சட்டம். காஷ்மீரில் நடந்திருப்பது தெளிவான சட்ட துஷ்பிரயோகம்" என்றார்.

சத்திய நாராயணன் | Sathya Narayanan
சத்திய நாராயணன் | Sathya Narayanan

பொதுவாக VPN பயன்படுத்துவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தோம். இதற்கு ``VPN பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் ஒன்றுமில்லை. ஆனால், தடைசெய்யப்பட்ட தளங்களுக்குச் செல்வது குற்றம்தான். அதனால் VPN மூலம் அந்த இணையதளங்களுக்குச் செல்வதும் சட்டவிரோதச் செயலாகிவிடும். ஆனால், பொதுவாக VPN பயன்படுத்துவது சட்டவிரோதம் ஆகாது" என்று பதிலளித்தார் அவர்.

இதனால் VPN பயன்படுத்துவதில் சிக்கலில்லை, எதற்காக அதைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பது தெளிவாகிறது.

`நீ இந்துவா... முஸ்லிமா; ஆடையைக் கழற்று..!'- டெல்லி வன்முறையில் பத்திரிகையாளரின் `திகில்' அனுபவம்

மேலும் பேசுகையில், "இந்தியாவில் காவல்துறை மற்றும் அமலாக்கத்துறைகளில் இதுபோன்ற தேவையில்லாத, தவறான அணுகுமுறைகள் கொண்ட பல FIR-கள் பதியப்படுகின்றன. இதனால் இன்றைய இளைஞர்களின் எதிர்காலமும் முன்னேற்றமும் மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்த வழக்குகள் எதிர்கொண்டு நடத்தித் தீர்வு காண அவர்களுக்கு நீண்டகாலம் செலவழிக்க வேண்டியுள்ளது. எனவே, இது போன்ற FIR நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்" என அழுத்தமாகக் கூறினார் வழக்கறிஞர் சத்திய நாராயணன்.

அடுத்த கட்டுரைக்கு