Published:Updated:

Network Enforcement Law, Hate Speech Law... ஜெர்மன், பிரான்ஸ் நாடுகளின் டிஜிட்டல் அவதூறுக்கு எதிரான சட்டங்கள்!

இணையத்தில் பகிரும் கருத்துகளுக்கான சட்டங்கள்
இணையத்தில் பகிரும் கருத்துகளுக்கான சட்டங்கள்

இதுபோன்ற சட்டங்கள் முழுமையாகத் தேவை இல்லை என ஒதுக்க முடியாது. அதே நேரத்தில், கருத்துரிமையைப் பாதிக்கும் வகையிலும் இருக்கக் கூடாது.

டிஜிட்டல்தான் இனி புதிய சமூகம் என்றான பிறகு, டிஜிட்டலில் பகிரும் தகவல்களுக்கு சட்டங்கள் வகுக்கவேண்டியது அவசியமாகிறது. சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சமூக வலைதளத்தில் ஒருவர் இணையும் வயதும் நாளுக்குநாள் குறைந்துவருகிறது. சமூக வலைதளங்களில் பகிரும் தகவல்களை முறைப்படுத்தவும், தவறான நோக்கத்தில் அல்லது அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் கருத்துகளை நீக்கவும் புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது, பிரான்ஸ். வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்தில் இதைப்போல ஒரு சட்டம் தேவை என ஒரு சாரரும், தேவையில்லை என ஒரு சாரரும் விவாதித்துவருகிறார்கள்.

Hate Speech
Hate Speech

மேலும், சமூக வலைதளச் சேவை வழங்கும் நிறுவனங்கள், விதிகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும், மீறுபவர்கள் மீது நடவடிக்கையாக அதிக அளவிலான அபராதத் தொகையைக் கட்ட வேண்டும் எனவும் அரசு தரப்பில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதைப் போல ஒரு சட்டம் தற்போது தேவையா? அரசு சொல்வதுபோல டெக் நிறுவனங்களால் முழுமையாக அவற்றைப் பின்பற்ற முடியுமா? அவற்றில் இருக்கும் டெக்னிக்கல் சவால்கள் என்ன? இதைப் போன்ற ஒரு சட்டம் அமலானால் ஏற்படும் பின்னடைவுகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

116 மில்லியன் இந்திய கேமர்களை வசீகரித்த ஆன்லைன் கேம் எது தெரியுமா? #VikatanTech
LAW PROPOSITION
to fight against the hateful content on the Internet ,

இணையத்திற்கான Hate Speech Law ஒன்றை வகுத்திருக்கிறது பிரான்ஸ். வன்முறையாகவும் அல்லது தனிமனித அவதூறு அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவை அவதூறாக விமர்சிப்பது 'Hate Speech' என வகைப்படுத்தலாம். ஒரு தனிநபரை அல்லது குழுவை இனம், மொழி, மதம், பால் அல்லது உடல்நலக் குறைபாடு போன்றவற்றை வைத்து இழிவுபடுத்துவது அல்லது அவமதிப்பது கூடாது. மீறுபவர்கள்மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் வகையில் பிரான்ஸில் Hate Speech Law ஏற்கெனவே இருக்கின்றன. தற்போது, நம் அன்றாட வாழ்க்கை என்பதில் சமூக வலைதளமும் ஓர் அங்கமாகிவிட்டது எனும்போது, அவற்றிற்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் எனும் நோக்கில்தான் இணையத்திற்கான Hate Speech Law-வை அமலாக்கவிருக்கிறது பிரான்ஸ்.

சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்கள்

இந்தப் புதிய சட்டத்தின்படி, அவதூறாகப் பதியப்படும் கருத்துகளை குறிப்பிட்ட நிறுவனம் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும், தீவிரவாதத்தையோ, சிறார் வதை தொடர்பான வன்முறையான கருத்துகளையோ நீக்க, ஒரு மணி நேரம் மட்டுமே கால அவகாசம். அதற்குள் அந்தக் கருத்துகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், 1.36 பில்லியன் டாலரிலிருந்து உலக அளவில் அந்த நிறுவனம் பெறும் வருமானத்திலிருந்து 4 சதவிகிதம் வரை அபராதமாகக் கட்ட வேண்டும் எனக் கூறுகிறது புதிய சட்டம்.

Network Enforcement Law
ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்ட சட்டம்

அக்டோபர் 1, 2017-ல் ஜெர்மனியில் இதேபோன்ற ஒரு சட்டம் நடைமுறைக்கு வந்தது. Network Enforcement Law எனப்படும் அந்தச் சட்டத்திலும், சமூக வலைதளத்தில் பகிரப்படும் சட்டவிரோதமான கருத்துகளை, குறிப்பிட்ட குறைந்த கால இடைவெளியில் நீக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோதமான கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். அவதூறான கருத்துகளை 7 நாள்களில் நீக்க வேண்டும். மேலும், கருத்தைப் பகிர்ந்தவர் இது தொடர்பான விளக்கத்தைக் கொடுக்கலாம் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் அவதூறான மற்றும் சட்டவிரோதமான கருத்துகளுக்கு என்ன விதமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், முதல் ஆறுமாத அறிக்கையில் நிறைய பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டிருக்கிறது மற்றும் தகவல்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன என ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 2.3 மில்லியன் டாலர் அபராதமும் விதித்தது ஜெர்மன்.

டிஜிட்டல் உலகம்
டிஜிட்டல் உலகம்

இதுபோன்ற சட்டங்கள் அவசியமா?

சாலையில் நீங்கள் நடந்து செல்லும்போது, ஒருவர் உங்களைக் கடும் சொற்களால் பேசினால், உங்களால் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும்; அதற்கான சட்டங்கள் இருக்கின்றன. சமூக வலைதளங்களும் சமூகத்தின் ஒரு அங்கம் என்றான பிறகு, அதற்கான முறையான சட்டங்கள் இருப்பதும் அவசியம்தான். இதற்து உதாரணம் கூற வேண்டும் என்றால், சில வாரங்களுக்கு முன் பிரபலங்களின் பெயர்களை அவர்களின் புகைப்படங்களையும் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பல மீம்கள் வைரலாகின. நடிகர் சமுத்திரக்கனியின் பெயர் மற்றும் புகைப்படத்தோடு தொடங்கிய இந்தப் பதிவுகள், தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் தனி மனிதர்களையும் தாக்கியது. மேலும் உருவ கேலி என்பது இந்தியாவில் சமூக அளவில் மனத்தளவில் விளையாட்டு என ஏற்றுக்கொள்ளப்பட்ட செயலாகவே இருக்கிறது.

அரசியல் தலைவர்களையும் நம் சமூக வலைதளங்களில் தினமும் உருவகேலி செய்துகொண்டு, அதை 'Just for fun' நாம் இதனைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம். ஆனால், இப்படிப்பட்ட கருத்துகளுக்கு, இணையத்திலும் இடமில்லை என்பதுதான் பிரான்ஸின் புதிய சட்டம் கூறுகிறது.

இதுபோன்ற சட்டங்களினால் ஏற்படும் பின்னடைவுகள் என்ன?

இதுபோன்ற சட்டங்களினால், பேச்சுரிமையும் கருத்துரிமையும் பாதிக்கப்படும். ஜனநாயக சமூகம், சில அளவு வரை அவதூறான கருத்துகளைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். சில நேரங்களில் சட்டத்திற்கு உட்பட்ட, ஆனால் தன் தனிப்பட்ட கருத்தை முன்வைக்கும்போது, அது சட்டத்திற்குப் புறம்பானதாகப் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. மிகவும் குறைவான நேரத்தில், குறிப்பிட்ட கருத்துகளை நீக்க வேண்டும் என்பது சரியான கருத்துகளையும் தவறான புரிதலினால் கட்டுப்படுத்த வாய்ப்புகள் இருக்கிறது எனப் பல விதமான எதிர்ப்புக் குரல்களும் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

laws for Technology
laws for Technology

டெக் நிறுவனங்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

இந்தச் சட்டங்கள் கூறும் வரையரைகள்படி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகள் அல்லது பதிவுகளை மேற்பார்வையிடவும் வகை பிரிக்கவும் மனிதர்களைத்தான் தற்போது பயன்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தற்போதுதான் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றன. முழு அளவில் இயந்திரங்களே கருத்துகளை வகை பிரிக்க இன்னும் பல ஆண்டுகளாகக் கூடும். ஒருநாளில், ஃபேஸ்புக்கில் 350 மில்லியன் புகைப்படங்கள் பதிவேற்றப்படுகின்றன. ட்விட்டரில், ஒரு நாளில் பதிவு செய்யப்படும் ட்வீட்களி்ன் எண்ணிக்கை 300 மில்லியன். மேலும், ஃபேஸ்புக் என்பது புகைப்படங்களுக்கு மட்டுமானது அல்ல. காணொளிகள், எழுத்துப் பதிவுகள் என அவற்றில் பல வகையுண்டு. இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், ஒரு நாளில் 500 மில்லியனுக்கும் மேலான பதிவுகள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்படுகின்றன. இவையனைத்தையும் 24 மணி நேரத்தில் தரம் பிரித்துக் கண்டறிந்து நீக்குவது என்பது இயலாத காரியம். எனவே, இதற்கான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு லட்சம் டாலர்களை முதலீடு செய்யும் முடிவில் இருக்கிறது ஃபேஸ்புக். இதன்மூலம் கருத்துகளைத் தரம் பிரித்து அகற்றுவதில் மனிதர்களின் பங்கைக் குறைக்க முடியும். Machine Learning மூலம் தீவிரவாதம் தொடர்பான பதிவுகள் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நீக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கின்றன, ஃபேஸ்புக்கும் ட்விட்டரும்.

ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis
Post-Traumatic Stress Disorder
Content Moderation பணியில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்னை

சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளைத் தரம் பிரிக்கும் வேலையை, அதாவது Contet Moderation பணியை தற்போது மனிதர்கள்தான் செய்துவருகிறார்கள். ஒரு நாளில் சமூக வலைதளத்தில் பதிவேற்றப்படும் பதிவுகளில் கொலை, தற்கொலை, வன்முறை, சிறார் வதை, போர்னோகிராபி போன்ற பதிவுகளை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, ஒரு சாதாரண நபர் மிகுந்த மன உளைச்சலுக்கும், மனநலம் சார்ந்த பிரச்னைகளாலும் பாதிக்கப்படுகிறார். Content Moderation பணியில் ஈடுபடும் பலர் Post-Traumatic Stress Disorder-ஆல் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், இந்தப் பணியை ஃபேஸ்புக், மூன்றாம் தர நிறுவனங்கள்மூலம் தான் மேற்கொள்கிறது. இந்தப் பணியில் இருப்பவர்கள், பணி குறித்த அனுபவங்களை அல்லது பிரச்னைகள் குறித்து பொது வெளியில் பேச அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதில் இப்படிப்பட்ட பிரச்னைகளும் இருக்கின்றன.

Content Moderation
Content Moderation

இந்தியாவில் இதுபோல சட்டம் இருக்கிறதா?

தனிமனித அவதூறு பரப்பும் வகையில் கருத்துகளைப் பதிவிடுபவர்களைத் தண்டிக்க இந்தியாவில் சட்டங்கள் உண்டு. Information Technology Act 2000 (IT Act 2000)-ன் படி டெக்னாலஜி தொடர்பான குற்றங்களுக்கான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சமூக வலைதளங்களில் தனிமனித அவதூறு பரப்புபவர்களுக்கு 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனை அளிக்க முடியும். ஆனால் டெக் நிறுவனங்கள், இதுபோல கருத்துகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் வகையில் தனிப்பட்ட பிரிவுகள் இல்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் முதலமைச்சர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாகப் பேசியதாகப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும்கூட அதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதுபோன்ற சட்டங்களால், தவறான நோக்கத்தில் தங்கள் மீது எதிர்க்கருத்து கூறபவர்களை ஒடுக்குவதற்கும் அரசு தரப்பில் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சட்டங்கள் முழுமையாகத் தேவை இல்லை என ஒதுக்க முடியாது. அதே நேரத்தில், கருத்துரிமையைப் பாதிக்கும் வகையிலும் இருக்கக் கூடாது.
அடுத்த கட்டுரைக்கு