Published:Updated:

`மருத்துவ பணியாளர்கள், விவசாயிகள், ஆன்லைன் ஆசிரியர்கள்!’ -டூடுல் தொடர் மூலம் சிறப்பு செய்யும் கூகுள்

டூடுல் வெளியிட்ட கூகுள்
டூடுல் வெளியிட்ட கூகுள்

கூகுள் நிறுவனம், `இந்த மோசமான நிகழ்வில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒருவரையொருவர் உதவி செய்ய வேண்டிய நேரமிது. அதற்கு முக்கியத்துவம் அளித்து உதவி செய்வதை முதன்மையாகக் கருதி செயல்படுவோம்’ எனத் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றைச் சமாளிக்க உலக நாடுகள் பலவும் திணறி வருகின்றன. இந்த நிலையில் நோய்த் தொற்றுக்கு, இந்தியாவில் இதுவரை 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாடு முழுவதும், மத்திய அரசு144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த மூதாட்டி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த மூதாட்டி

இதனால், பல்வேறு தரப்பு மக்களும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிற இந்தச் சூழலில், நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருக்கும் மக்களைப் பாதுகாக்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல பிரிவினரும் 24 மணி நேரமும் போராடி வருகின்றனர். தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றி வரும் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, கூகுள் நிறுவனம் தனது பக்கத்தில் டூடுல் விளக்கப்படங்களை வெளியிட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி முதல், முதல் பகுதியில் டூடுல்களைத் தொடராக வெளியிட்டு வருகிறது

அதில், சுகாதாரப் பணியாளர்கள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்வோர், விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றோரின் டூடுல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று தனது பக்கத்தில் ஆன்லைன் மூலம் கற்பித்தலைத் தொடங்கியிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது. அதில் அனிமேஷன் செய்யப்பட்ட ஆசிரியர் கணினி மூலம் பாடம் கற்பிப்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் உதவிய தன்னார்வலர்கள்
கொரோனா பாதிப்பில் உதவிய தன்னார்வலர்கள்

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூகுள் நிறுவனம், `இந்த மோசமான நிகழ்வில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒருவரையொருவர் உதவி செய்ய வேண்டிய நேரமிது. அதற்கு முக்கியத்துவம் அளித்து உதவி செய்வதை முதன்மையாகக் கருதி செயல்படுவோம். அதே நேரத்தில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதே அடுத்த கட்டத்துக்கான வாழ்வியலாகும். எனவே, அப்படியான நிலையில் தற்போது ஆசிரியர்களும், மாணவர்களும் மாறி வரத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு கூகுள் நிறுவனத்தின் நன்றி’ என்று தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு