Published:Updated:

Google: `ஜூன் 2021 வரை வொர்க் ஃப்ரம் ஹோம்தான்!’ - கூகுளின் புது முடிவு

கூகுள் | Google
கூகுள் | Google ( AP | Patrick Semansky )

தற்பொது கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு பாதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

எட்டு மணிநேர உழைப்பு, 1,2 மணிநேர பயணம் கடந்து களைத்து வந்து ஓய்வெடுக்கும் வீடுகளே, தற்போது பெரும்பாலானவர்களின் அலுவலகம் ஆகிவிட்டது. ஒவ்வொரு மாலையும் பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு இளைப்பாறியவர்கள், வீடுகளிலேயே பணியும் செய்து முடிக்கும் வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு தொடக்கம் முதலே உலகின் பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை நீண்ட நாள்களுக்கு வீட்டிலிருந்து வேலைசெய்ய அனுமதித்துள்ளது. குறிப்பாக ட்விட்டர் நிறுவனம் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இருந்தே எதிர்பார்த்த பலன் கிடைப்பதால், ஊரடங்கு முடிந்தாலும் குறிப்பிட்ட அளவு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறது.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிவரை ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதித்தன. தற்போது கூகுள் நிறுவனம் அடுத்த ஆண்டு பாதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.

வொர்க் ஃப்ரம் ஹோம் சூழலை மேம்படுத்த ஊழியர்களுக்கு தனி நிதி தரும் நிறுவனங்கள்!

இதுகுறித்து ஊழியர்களுக்கு அளித்துள்ள குறிப்பில், கூகுள் நிறுவனத்தின் 42 அலுவலகங்கள் மட்டுமே செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 70 அலுவலகங்கள் இருக்கின்றன. ``தன்னார்வமாக வீட்டிலிருந்து வேலை செய்யும், அலுவலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாத ஊழியர்கள் ஜூன் 30, 2021 வரை வீட்டிலிருந்தே வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர்" எனக் கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

google கூகுள்
google கூகுள்

மேலும், ``வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் அடுத்த 12 மாதங்களுக்கு உங்கள் அன்பிற்குரியவர்களையும் அதே நேரத்தில் அலுவலக வேலைகளையும் சமமாகக் கையாளும் தன்மை உருவாகும் என நம்புகிறேன்" என்றும் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு