Published:Updated:

கூகுள் மேப்: `இனி டிராஃபிக் சிக்னல்களையும் அறியலாம்’ - ஆண்ட்ராய்டு போனில் அறிமுகம்?

கூகுள் மேப்
கூகுள் மேப்

கூகுள், தனது பயனாளர்களுக்கு கொரோனா கால பயணங்கள் தொடர்பான சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தது.

கூகுள் மேப் வசதி வந்த பின்னர், சாலைகளை மக்கள் உள்ளூர் வாசிகளிடம் குறிப்பிட்ட இடத்துக்கு செல்வது குறித்து வழி எதுவும் கேட்பதில்லை. ஊர் பெயர் அறிந்திராத பகுதிகளுக்கு கூட அசால்டாகச் சென்று வர முடிகிறது என்றால், அதற்கு கூகுள் மேப்பின் மேம்பட்ட சேவைகள்தான் காரணம்.

பல்வேறு சேவைகளைத் தனது செயலி மூலம் வழங்கினாலும், அவ்வப்போது புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும். மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கவே பல அப்டேட்களை வழங்குவதாகத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் தெரிவித்து வருகிறது. நாம் செல்லும் சாலையில் விபத்துகள் ஏற்பட்டால் அதனை மேப் மூலமாகத் தெரிந்து கொள்ளும் வசதிகளையும் முன்னர் அறிமுகப்படுத்தி இருந்தது.

கூகுள் மேப்
கூகுள் மேப்

கொரோனா பரவ ஆரம்பித்தது முதல் கூகுள் மேப் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முதலியவற்றை அறிந்துகொள்ளும் வசதிகளியும் வழங்கியது. இந்த நிலையில் கூகுள் மேப் நிறுவனம் விரைவில், டிராஃபிக் சிக்னல் இருக்கும் சாலைகளையும் தனது ஆண்ட்ராய்டு போன்களில் இருக்கும் கூகுள் மேப் செயலி மூலம் குறிப்பிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கூகுள் தரப்பில் இருந்து இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

`கூகுள் மேப் செய்த உதவி’ - 4 மாதங்களுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்பு!

எனினும் ஆண்ட்ராய்டு உலகில் நடக்கும் டெக் விஷயங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் Droidlife இணையதளம், இத் தகவலை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவில் சில குறிப்பிட்ட நகரங்களில், மக்களுக்கு சாலைகளில் இன்னும் கூடுதல் சிறப்பான சேவையை வழங்க டிராஃபிக் சிக்னல் இருக்கும் தகவல்களையும் வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் சான் ஃபிரான்ஸிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூ யார்க், சிக்காகோ நகரங்களில் இந்த வசதிகளை கூகுள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாம். பின்னர், அடுத்த கட்டமாக நாடு முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னர் நாம் செல்ல இருக்கும் சாலையில் டிராஃபிக் இருந்தால், அந்த வழியை சிவப்பு நிறமாகக் காட்டும். இப்போது, அந்தப் பகுதியில் சிக்னல் இருந்தால், அதனையும் தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் மேப்பில் கொரோனா அப்டேட்
கூகுள் மேப்பில் கொரோனா அப்டேட்

எனினும் அமெரிக்காவில் இந்தச் சேவையை செயல்பாட்டுக்கு வருவது இது முதல்முறையில்லை. காரணம், ஆப்பிளின் ஐபோன்னில் iOS 13 இயங்குதள போன்களில் மேப் சேவை உதவியுடன் `சிரி’ மூலம் டிராஃபிக் சிக்னல் இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். இது தவிர கூகுள், தனது பயனாளர்களுக்கு கொரோனா கால பயணங்கள் தொடர்பான சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தது. அந்தச் சேவை மூலம் பயனாளர்கள், கூட்ட நெரிசலான பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

அடுத்த கட்டுரைக்கு