Published:Updated:

Google, Microsoft, Facebook vs Zoom, வீடியோ காலிங் சேவைக் களத்தில் வலுக்கும் போட்டி!#InDepth

Video Calling | வீடியோ காலிங்
Video Calling | வீடியோ காலிங்

வீடியோ கான்ஃபரன்ஸிங் மற்றும் வீடியோ காலிங்கிற்கென எத்தனை செயலிகள் இருக்கின்றன, அவற்றில் ஒன்றை விட மற்றொன்று எந்த வகையில் சிறப்பானதாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகத் தொடங்கிய போதே, ஊரடங்கு அமல்படுத்தலின் காரணமாக வீடியோ காலிங் செயலிகளுக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் மாத இறுதியில் இருந்து இந்தியாவிலும் ஊரடங்கு தொடங்கியது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி அளித்தன. புதிதாக வொர்க் ஃப்ரம் ஹோம் தொடங்கிய பல நிறுவனங்கள் தொடக்கத்தில் Zoom செயலியைத்தான் அலுவலகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தினர். நாட்கள் செல்லச் செல்ல, Zoom செயலி பாதுகாப்பானது இல்லை என அது தொடர்பாகப் பல பாதுகாப்புக் குறைபாட்டுக் குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கின.

ஜூம் (Zoom)
ஜூம் (Zoom)

Zoom-ன் மீது நம்பிக்கை குறையக் குறைய, அலுவலகப் பயன்பாடு பள்ளி மற்றும் கல்லூரிப் பயன்பாடுகளுக்கு வேறு வீடியோ காலிங் சேவைகளைத் தேடியது வொர்க் ஃப்ரம் ஹோம் சமூகம். தனிப்பட்ட முறையில் வீடியோ காலிங் செய்யச் சிறப்பான செயலிகள் பல இருக்கின்றன. பிரதானமாக வாட்ஸ்அப்பே இருக்கிறது. எனவே அலுவலகப் பயன்பாடான வீடியோ கான்ஃபரன்ஸ் சேவைதான் இங்கு அதிகம் தேடப்பட்டது. இந்தநிலையில் தான் தனது பழைய வீடியோ காலிங் செயலியைப் பெயர் மாற்றம் செய்து, கொஞ்சம் அப்டேட்டும் செய்து வெளியிட்டது கூகுள். அதன் பிறகு வீடியோ காலிங் கோதாவில் பலரும் குதிக்க, தற்போது விதவிதமான வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவைகளைப் பல நிறுவனங்களும் வெளியிட்டிருக்கின்றன. அவை என்னென்ன? புதிதாக வளர்ந்து வரும் இந்தப் போட்டியால் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

நான்கு பேர் மட்டுமே வீடியோ காலிங் செய்யலாம் என்பதை மாற்றி எட்டுப் பேர் வரை காலிங் செய்யும் வகையில் வசதியை மேம்படுத்தியது வாட்ஸ்அப். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக வீடியோ காலிங் சேவைகள் வேண்டும் என நினைப்பவர்கள் கூகுளின் ஹேங்அவுட்ஸ் (Google Hangouts) அல்லது கூகுள் டுயோ-வை (Google Duo) முயற்சி செய்யலாம். கூகுள் டுயோ வீடியோ காலிங்கிற்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி. அதில் மெஸேஜிங் வசதி கூட இருக்காது. மேலும் பிரத்யேகமாக வீடியோ காலிங்கிற்காகவே உருவாக்கப்பட்டதால், வீடியோவின் தரமும் அதில் சிறப்பாக இருக்கும்.

டிசம்பர் 2019-ல் பத்து மில்லியனாக இருந்த zoom பயனர் எண்ணிக்கை மார்ச் 2020-ல் 200 மில்லியனாகவும், ஏப்ரலில் 300 மில்லியனாகவும் உயர்ந்தது.
கூகுள் மீட்
கூகுள் மீட்

தற்போது அலுவலகப் பயன்பாட்டிற்கு வருவோம். இந்த இடத்தில்தான் வீடியோ கான்ஃபரன்ஸிங்கிற்கான தேவை அதிகரித்தது. அலுவலகப் பயன்பாடு என வரும் போது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல விதமான சேவைகளும் கட்டண அடிப்படையிலேயே இருந்தன. பல வசதிகளைக் கொண்ட Zoom குறிப்பிட்ட நேரம்வரை இலவசமாகக் கிடைத்தது. அதனால்தான் டிசம்பர் 2019-ல் பத்து மில்லியனாக இருந்த பயனர் எண்ணிக்கை மார்ச் 2020-ல் 200 மில்லியனாகவும், ஏப்ரலில் 300 மில்லியனாகவும் உயர்ந்தது. இலவசப் பயனர்களுக்கு 40 நிமிடம் மட்டுமே என்ற நேரக் கட்டுப்பாடும் Zoom செயலியில் இருந்தது. இந்தச் செயலியில், பாதுகாப்பு குறைபாடு, பிரைவசி பிரச்னைகள் எழுந்தபிறகு, போட்டியாக இருந்த Google Hangouts Meet-ன் செயல்பாடு வேகமெடுத்தது.

Google Hangouts செயலியானது தனிப்பட்ட பயன்பாட்டிற்கானது. Google Hangouts Meet சேவையானது வணிக நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 100 பேர் வரை கான்ஃபரன்ஸிங் செய்யும் வசதி, ஸ்கிரீன் ரெக்கார்டிங் என Zoom-ல் இருந்த அனைத்து வசதிகளும் கூகுள் மீட் செயலிலும் இருந்தன. ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் Google Hangouts Meet என்று இருந்த பெயரை Google Meet என மாற்றி புதிதாகக் களமிறங்கியது கூகுள். Zoom-ன் பாதுகாப்பு அம்சங்கள் மீது நம்பிக்கை இழந்தவர்களுக்கு மாற்றாக மாறியது கூகுள் மீட். அலுவலகப் பயன்பாட்டிற்கான வீடியோ காலிங் சேவைக்கான போட்டி Zoom vs Meet ஆகத் தான் இருந்துவருகிறது.

அதிகளவில் பயன்படுத்தப்படும் Zoom செயலி! நம் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?

கடந்த சில நாள்களுக்கு முன்னர் Zoho நிறுவனமும், வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவைகளுக்கான Zoho Meeting மற்றும் Zoho classes என இரு செயலிகளை அறிமுகப்படுத்தியது. இதில் Zoho Meeting செயலியானது அலுவலகப் பயன்பாட்டிற்கும், Zoho Classes செயலியானது கல்வி நிறுவனங்களுக்கும் என இருவேறுவிதமாக வெளியிட்டது. இந்த வீடியோ காலிங் சேவையை அடுத்த மூன்று மாத காலத்திற்கு அரசுக்கு இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. Zoho-வைத் தொடர்ந்து ஜியோவும் ஜியோ மீட் (jio Meet) என்ற பெயரில் புதிய சேவை ஒன்றைக் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. அந்தச் செயலியிலும் இலவசமாக ஐந்து பேர் வரையில் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்ய முடியும். அதற்கு மேல் 100 பேர் வரை கான்ஃபரன்ஸிங் செய்ய முடியும். ஆனால் அதற்குக் கட்டணம் உண்டு.

Facebook Messenger Room
Facebook Messenger Room
gizbot.com

இந்தக் களத்தில் புதிதாக ஃபேஸ்புக்கும் களம் இறங்கியது. தன் மெஸன்ஜர் செயலியில் இதற்கான அப்டேட்டை மட்டும் வெளியிட்டது ஃபேஸ்புக். 50 பேர் வரை இணையும் வகையிலான வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவைகளை வழங்கவிருக்கிறோம் என அறிவித்தது ஃபேஸ்புக். எனினும், ஃபேஸ்புக் என்பது கேளிக்கைக்கான இடம்தான் என்பதால் அலுவலகப் பயன்பாட்டிற்கான போட்டியில் அதனால் பெரிய தாக்கம் இல்லை. ஆனால், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வீடியோ காலிங் செயலிகளுக்கான போட்டியில் நிச்சயம் இதற்கு ஓர் இடம் உண்டு. தனிப்பட்ட பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப் ஏற்கெனவே இருக்கிறது என்றாலும், வீடியோ காலிங்கின்போது அவ்வளவு தரமானதாக இல்லை. மேலும், நிலையான நெட்வொர்க் இருக்கும் இடங்களிலும் வாட்ஸ்அப் வீடியோ காலிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. எனவே அதற்கான மாற்றான ஒன்றைச் சிந்திப்பதும் இயல்பே.

Zoom, Google Meet, Jio Meet, Zoho Meeting, Skype
அலுவலகப் பயன்பாட்டுக்கு ஏற்ற வீடியோ கால் செயலிகள்

வீடியோ கான்ஃபரன்ஸிங் மற்றும் வீடியோ காலிங்கிற்கென எத்தனை செயலிகள் இருக்கின்றன, அவற்றில் ஒன்றை விட மற்றொன்று எந்த வகையில் சிறப்பானதாக இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

அலுவலகப் பயன்பாடு:

முதலில் அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் எத்தனை சேவைகள் இருக்கின்றன? Zoom, Google Meet, Jio Meet, Zoho Meeting, Skype. இவற்றில் Jio Meet மற்றும் Zoho Meeeting ஆகியவை புதிதாக வெளியானவை. மேலும் இரண்டுமே அலுவலகப் பயன்பாட்டிற்கு என வரும் போது கட்டணத்துடன் பயன்படுத்தும் வகையில்தான் வெளியிடப்பட்டிருக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Skype செயலியானது அலுவலகப் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இரண்டு வகையான பயன்பாட்டிற்கும் ஏற்றவாறாக வடிவமைக்கப்பட்டது. அதுவும் சில வசதிகளைப் புதிதாகச் சேர்த்து Meet Now சேவையை வழங்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் Skype பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 சதவிகிதம், அதாவது 40 மில்லியனாக அதிகரித்திருக்கிறது. Google Meet பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனாகவும், Zoom பயனாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனாகவும் இருக்கிறது.

Skype
Skype
தற்போது பாதுகாப்பு அம்சங்களில் மேம்பட்டு இருப்பது Google Meet சேவைதான்.

இந்த இடத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு செயலியும் மற்ற செயலிக்குப் போட்டியாக இல்லை. அனைத்துச் செயலிக்கும் போட்டி Zoom மட்டுமே. Zoom vs Meet, Zoom vs Skype, என ஒவ்வோரு நிறுவனமும் Zoom-டனான போட்டியில்தான் தங்கள் சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. மற்ற நிறுவனங்கள் தங்கள் செயலியில் எந்தவொரு அப்டேட் செய்யும்போதும். Zoom-ல் இருக்கும் வசதிகள் மற்றும் Zoom செய்த தவறுகள் என்ற இரு விஷயங்களைத்தான் தங்கள் செயலிகளிலும் இருக்க வேண்டும் அல்லது இருக்கக் கூடாது என உறுதிப்படுத்துகின்றன. Zoom தான் வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளுக்கான முன்னோடியாக இருக்கிறது. புதிய போட்டியாளர்கள் களம் இறங்க, இறங்க தன் பயனர் தளத்தைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் Zoom-ற்கு இருக்கிறது. எனவேதான் பலவீனமாக இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளை நீக்க உழைத்து வருகிறது Zoom. அதன் ஒரு பகுதியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது செயலியில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை நீக்கியுள்ளதாகக் கூறி Zoom 5.0 என்ற புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் கடந்த மாதங்களில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் இனி Zoom-ல் இருக்காது எனத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். எனினும் தற்போது பாதுகாப்பு அம்சங்களில் மேம்பட்டு இருப்பது Google Meet சேவைதான்.

`Zoom-க்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் புதிய அறிமுகம்!'- வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உள்ள வசதிகள் என்ன?

தனிநபர்ப் பயன்பாடு:

தனிநபர்ப் பயன்பாட்டிற்கு என வரும்போது கட்டணத்துடன் பயன்படுத்தும் வகையில் எந்தச் சேவைகளும் பெரும்பாலும் இல்லை. வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்கைப், கூகுள் டுயோ, கூகுள் ஹேங்அவுட்ஸ் மற்றும் ஹவுஸ்பார்ட்டி ஆகியவைதான் தற்போது பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. ஊரடங்கின் காரணமாக வீடியோ காலிங் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கிய பிறகு அனைத்துச் செயலிகளும் புதிய அப்டேட்களை வெளியிட்டன. அதில் முக்கியமாக ஒரே நேரத்தில் அதிக நபர்கள் பங்குபெறும் வகையில் வீடியோ காலிங் சேவைகளை மாற்றி அமைப்பது.

டுயோவின் பயன்பாடு 800 சதவிகிதம் வரை அதிகரித்திருத்துள்ளது.
கூகுள்
Google Duo
Google Duo

அந்த வகையில் வாட்ஸ்அப் நான்கு பேரில் இருந்து எட்டுப் பேராக அதிகரித்தது. டுயோ எட்டுப் பேரில் இருந்து 12 பேராக அதிகரித்தது. மேலும் டுயோவின் பயன்பாடு 800 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஹவுஸ் பார்ட்டி என்ற வீடியோ காலிங் செயலியும் 50 மில்லியன் வரை புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. இதைத் தனிப்பட்ட முறையில் வீடியோ காலிங் செயலி எனக் கூறுவதை விட சமூக வலைதள வீடியோ காலிங் சேவை எனக் கூறலாம். ஏனெனில் மற்ற சமூக வலைதளக் கணக்குகளில் இருக்கும் நண்பர்களோடுதான் இந்தச் செயலி இயங்குகிறது. இவற்றில் பாதுகாப்பு அம்சங்களோடு சேர்த்து சிறந்ததாக இருப்பது டுயோ தான். வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக வேறு செயலி வேண்டும் என்பவர்கள் டுயோவை முயற்சி செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு