Article 370, பப்ஜி, ஜோக்கர்... இந்தியா அதிகம் தேடியது இதைத்தான்! #GoogleTrends2019

எந்த ஒரு திரைப்படத்திலும் இடம்பெறாத ஒரு பாடல்தான், இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பாடல்.
ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும், அவ்வாண்டின் டாப் 10 பட்டியல்கள் சுவாரஸ்யமானவை. 'டாப் 10' வெளியிடும் இந்த முறையைப் பல பெரிய டெக் நிறுவனங்களும் தொடர்ந்து பின்பற்றிவருகின்றன. நேற்று, இந்தியாவின் டாப் 10 பட்டியல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது. அதேபோல இன்று, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை, கூகுள் நிறுவனம் பிரிவு வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் சுவாரஸ்யமானவற்றைப் பார்க்கலாம்.

கூகுளில் அதிகம் தேடப்பட்டவை
கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்தியாவில் எப்போதுமே மவுசு அதிகம். எனவே, எதிர்பார்த்ததைப் போலவே 'கிரிக்கெட் உலகக் கோப்பை' பற்றித்தான் இந்தியர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். அடுத்த இடத்தில், இந்த ஆண்டின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான 'நாடாளுமன்றத் தேர்தல் 2019' தொடர்பான செய்திகளை அதிகம் தேடியிருக்கிறார்கள். அடுத்தடுத்த இடங்களில், இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்திய 'சந்திரயான் 2', தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக் 'கபீர் சிங்', இந்த ஆண்டு மிகப் பெரிய எதிர்பார்ப்போடு வெளியான ஆங்கிலத் திரைப்படமான 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' இருக்கின்றன.
'எனக்கு அருகில் இருக்கும்' (Near Me)...
இந்தப் பிரிவில்... அருகில் இருக்கும் ஏ.டி.எம், உணவகங்கள் ஆகியவைதான் தேடப்படும். ஆனால், இந்த ஆண்டு சுவாரஸ்யமாக, 'அருகில் இருக்கும் நடனப் பள்ளி எது என்பதைத்தான் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். ஆக, இந்தியாவில் பிரபுதேவாக்கள் பலர் தயாராகிக்கொண்டிருக்கின்றனர் என்பதை மட்டும் புரிந்துகொள்ளலாம். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில், 'அருகில் இருக்கும் சலூன் எது?' என்பதும் மூன்றாவது இடத்தில், 'அருகில் இருக்கும் கஸ்டமர் ஸ்டோர்ஸ் எது?' என்பதும் அதிகம் தேடப்பட்டுள்ளன.
'எப்படி' (How To)...
இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முதல் முறை வாக்காளர்கள் அதிகம் பேர் வாக்களித்ததால், 'எப்படி வாக்குப்பதிவு செய்ய வேண்டும்?' என்பதை அதிகம் தேடியுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில், 'ஆதார் அட்டையோடு பான் கார்டை எப்படி இணைப்பது?' என்பதையும் 'வாக்காளர் பதிவேட்டில் எப்படி என் பெயரைச் சரிபார்ப்பது?' என்பதையும் அதிகம் தேடியுள்ளனர்.
இந்தப் பட்டியலில் 7-வது இடத்தில், சுவாரஸ்யமான கேள்வி ஒன்று இடம்பெற்றிருந்தது. 'பப்ஜி விளையாடுவது எப்படி?' என்பதுதான் அந்தக் கேள்வி.
அதிகம் தேடப்பட்ட மனிதர்கள்
இந்திய அளவில், கூகுளில் அதிக அளவில் தேடப்பட்ட மனிதர், இந்திய 'விங் கமாண்டர்' அபிநந்தன் வர்த்தமான். புல்வாமா தாக்குதலுக்காக இந்திய விமானப் படை பதில் தாக்குதல் நடத்தியபோது, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டு, பின்னர் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட இவரை, இந்தியர்கள் அதிகம் தேடியது ஆச்சர்யமில்லை. இரண்டாவது, இடத்தில் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இடம்பெற்றுள்ளார். உடல்நிலை சரியில்லாமல் இருந்த காரணத்தால், இவரைப் பற்றி இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். மூன்றாவது இடத்தில், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் இடம்பெற்றிருக்கிறார். உலகக் கோப்பை நடைபெற்ற ஆண்டு என்பதால், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை நாயகன் யுவராஜை அதிகம் தேடியுள்ளனர்.
அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்
இந்திய அளவில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட திரைப்படம், இந்தி மொழியில் வெளியான 'கபீர் சிங்'. இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ஆங்கிலத் திரைப்படங்களான 'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' திரைப்படமும் ஹாலிவுட்டின் 'ஜோக்கர்' திரைப்படமும் இடம்பெற்றுள்ளன.
அதிகம் தேடப்பட்ட பாடல்கள்
இந்த ஆண்டு, எந்தத் திரைப்படத்திலும் இடம்பெறாத 'லே போட்டோ லே' என்ற ராஜஸ்தானி ஆல்பம் பாடல்தான், இந்திய அளவில் அதிகம் கூகுள் செய்யப்பட்ட பாடல்.
'ஹாப்பி ஹார்டி & ஹீர்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தேரி மேரி கஹானி' என்ற பாடல், இரண்டாவதாக அதிகம் தேடப்பட்டுள்ளது. ரீ-மிக்ஸ் செய்யப்பட்ட பஞ்சாபி மொழிப் பாடலான 'தேரி ப்யாரி ப்யாரி டூ அக்கியான்' என்ற பாடல் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.
அப்படினா என்ன...?
காஷ்மீருக்கு 'சட்ட பிரிவு 370'-ன்படி வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்த ஆண்டு ரத்துசெய்தது மத்திய அரசு. அதன் விளைவாக 'Article 370 என்றால் என்ன?' என்பதை இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, சில முன்னணி சேனல்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தின. அதனால் 'Exit Poll என்றால் என்ன?' என்ற தேடல் இந்தப் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. ஒளி உள்பட எதுவுமே வெளியேற முடியாத அளவு ஈர்ப்பு சக்தி கொண்டுள்ள கருந்துளையின் (Black Hole) முதல் புகைப்படம் இந்த ஆண்டு வெளியிட்டப்பட்டது. அதன் விளைவாக, 'கருந்துளை என்றால் என்ன?' என்ற கேள்வி இந்தப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டு நிகழ்வுகள் என்ற பிரிவில் சந்தேகமேயின்றி 'கிரிக்கெட் உலகக் கோப்பை' என்பதற்குத்தான் முதலிடம். இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் 'ப்ரோ கபடி லீக்' போட்டிகளைத்தான் இரண்டாவதாக அதிகம் தேடியுள்ளனர். இந்தப் பட்டியலில் மூன்றாவதாக, இந்தியர்கள் அதிகம் தேடியது 'விம்பிள்டன் டென்னிஸ்' போட்டிகளைப் பற்றித்தான்.
விளையாட்டு நிகழ்வுகள் பட்டியலில்... ஐபிஎல் போட்டிகள், முதல் 10 இடங்களுக்குள் கூட இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யமே!
செய்திகள் பிரிவில் அதிகம் தேடப்பட்டவை
பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு என்பதால், செய்திகள் பிரிவில் 'நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்' பற்றிய செய்திகள்தான் அதிகம் தேடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த இடங்களில் 'சந்திரயான் 2', 'Article 370' ஆகியவை இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கூகுளில், நீங்கள் அதிகம் தேடியது பற்றி கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!