Published:Updated:

மொபைல் திருடுபோனால் கண்டுபிடிக்க இனி அரசே உதவும்... வருகிறது புதிய தொழில்நுட்பம்!

கார்க்கிபவா

இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரு மொபைல் போன் திருடு போனால் அதை எளிதில் டிராக் செய்ய முடியும். மொபைலில் சிம் கார்டை மாற்றினாலும், IMEI எண்ணையே மாற்றினாலுமகூட டிராக் செய்ய முடியும்.

Mobile theft
Mobile theft ( Pixabay )

மொபைல் போன் திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொணடேயிருக்கின்றன. மொபைல் திருடு போனதும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றாலும் பெரும்பாலும் அவற்றை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. அல்லது எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிடுவார்கள். காரணம், திருடப்பட்ட மொபைலைக் கண்டறிவது அவ்வளவு சுலபமில்லை. மொபைல் போன்களின் விலை லட்சங்களைத் தாண்டி போய்க்கொண்டிருக்கும் காலத்தில் இத்திருட்டை இனியும் கண்டுகொள்ளாமல் விட முடியாது. மொபைல் போன் திருட்டைத் தடுக்க பல ஆண்டுகளாக அரசு திட்டமிட்டு வந்திருக்கிறது. அந்த வகையில் 2017-ல் தொடங்கப்பட்ட ஒரு புராஜெக்ட் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

Mobile theft
Mobile theft
Pixabay

இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரு மொபைல் போன் திருட்டு போனால் அதை எளிதில் டிராக் செய்ய முடியும். மொபைலில் சிம் கார்டை மாற்றினாலும், IMEI எண்ணையே மாற்றினாலும்கூட டிராக் செய்ய முடியும். அது மட்டுமன்றி, அந்த மொபைலை பிளாக்கூட செய்யலாம். பிளாக் செய்யப்பட்டத் தகவலை அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர முடியும். அவர்களும் பிளாக் செய்துவிட்டால் திருடப்பட்ட மொபைலை எங்கேயும் பயன்படுத்தவே முடியாது. அதனால் திருடப்பட்ட மொபைல்களை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். காசு கிடைக்காது எனத் தெரிந்தால் மொபைல் திருட்டுகளும் நிச்சயம் குறைந்துவிடும்.

சென்டர் ஃபார் டெவலெப்மென்ட் ஆஃப் டெலிமேட்டிக்ஸ் அமைப்பு இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தப் புதிய தொழில்நுட்பம் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.