Published:Updated:

`ஐபோன் ₹5000... ஒன்ப்ளஸ் ₹6000!' - டெலிகிராம் ஆப்பில் நடக்கும் கேட்ஜெட் மோசடி

"ஒருத்தன ஏமாத்தணும்னா முதல்ல அவனோட ஆசையைத் தூண்டணும்" - சதுரங்க வேட்டை படத்தில் வரும் வசனம் இந்த மோசடிக்கு அப்படியே பொருந்திப்போகிறது.

டெலிகிராம்
டெலிகிராம்

மெசேஜிங் ஆப் என்று வந்துவிட்டால் வாட்ஸ்அப்தான் பிரபலம். தொடக்கத்தில் அதற்குக் கடும் போட்டியாக இருக்கும் எனக் கருதப்பட்ட டெலிகிராம் போட்டியில் பின் தங்கியே இருந்தது.

டெலிகிராம்
டெலிகிராம்

ஆனால், சமீப காலமாக டெலிகிராம் ஆப் மீண்டும் பலரது மொபைல்களில் இடம் பெறத் தொடங்கியிருக்கிறது. இந்த மெசேஜிங் ஆப்பில் வெறும் சாட்டிங் மட்டும்தான் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அதைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தில் பலர் அந்தத் தளத்தில் பலர் இயங்கி வருகிறார்கள்.

மோசடிக்குத் தளம் அமைத்துக் கொடுக்கும் 'டெலிகிராம்'

வாட்ஸ்அப்புடன் ஒப்பிடும்போது பல கூடுதல் வசதிகள் டெலிகிராமில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக வாட்ஸ்அப் குரூப்பில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே நபர்களைச் சேர்க்க முடியும். ஆனால், டெலிகிராமில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் நபர்களைக்கூட குரூப் ஒன்றில் இணைத்துக்கொள்ளலாம். இது மட்டுமன்றி சேனல் என்ற ஆப்ஷனும் டெலிகிராமில் இருக்கிறது. இதன் மூலமாக வீடியோ, செய்தி அல்லது ஒரு தகவல் போன்றவற்றைப் பலரிடையே கொண்டு செல்ல முடியும்.

டெலிகிராம்
டெலிகிராம்

ஹாலிவுட், கோலிவுட்டில் வெளியாகும் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் என அனைத்தும் பைரஸி செய்யப்பட்டு இந்தச் சேனல்களில் வெளியாகின்றன. அதுபோன்ற சேனல்களில் ஷேர் ஆகிக்கொண்டிருக்கின்றன 'அந்த மெசேஜ்கள்'. அவற்றை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட ஒரு சேனலுக்கு அது கூட்டிச்செல்கிறது. அந்தச் சேனலில் இருக்கும் தகவல்கள் யாரும் நம்ப முடியாத வகையில் இருக்கின்றன.

ஐபோன் 5,000 ரூபாய்... ஒன்ப்ளஸ் 6,000 ரூபாய்

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஐபோன் Xs MAX, சாம்சங் S10 ப்ளஸ் என தற்சமயம் மார்க்கெட்டில் இருக்கும் மோஸ்ட் வான்டட் ஸ்மார்ட்போன்கள் அந்தச் சேனலில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. சந்தையில் இவற்றின் விலை 50,000-த்தைத் தாண்டும். ஆனால், இங்கே அவற்றின் விலை 10,000 ரூபாய்க்கும் கீழ்தான்.

ஐபோன்
ஐபோன்

ஐபோன் Xs MAX-ன் உண்மையான விலை ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகம். ஆனால், இந்தச் சேனலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலை வெறும் 8,000 ரூபாய்தான். மொபைல்கள் மட்டுமன்றி லட்ச ரூபாய் விலை கொண்ட DSLR கேமராக்கள், ப்ளே ஸ்டேஷன்கள் என கேட்ஜெட்களின் பட்டியலின் நீளம் அதிகமாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல இதற்கு முன்பு பொருள்கள் டெலிவரி செய்யப்பட்ட ஆதாரமாக ஸ்க்ரீன்ஷாட்டுகளும் அந்தச் சேனலில் நிறைந்து கிடக்கின்றன.

'பொருள் மட்டுமல்ல ரிப்ளைகூட வராது!'

இந்தப் பொருள்களில் ஏதாவது தேவைப்பட்டால் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரைத் தனியாகத் தொடர்புகொள்ள வேண்டும். பணத்தைச் செலுத்தினால் சில நாள்களில் பொருள் நேரடியாக வீடு தேடி வரும். அதுவும் அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதள நிறுவனங்களிடமிருந்து உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும் எனத் தகவல் தருகிறார்கள் மோசடிக்காரர்கள். அது எப்படிச் சாத்தியம் என்றால் 'கார்டிங்' மூலமாக இதைச் செய்கிறோம் என்ற விளக்கத்தையும் தருவார்கள். திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்தோ, ஒருவரிடமிருந்து திருடப்படும் கிரெடிட் கார்டு தகவல்களை வைத்தோ நடக்கும் முறைகேடான நடவடிக்கைகளுக்குப் பெயர்தான் 'கார்டிங்.'

கார்டிங்
கார்டிங்

'கார்டிங்'-குக்குப் பின்னால் இருக்கும் நெட்வொர்க் என்பது மிகப் பெரிது. போன்கால் மூலமாக ஏமாற்றிப் பெறப்படும் கிரெடிட்கார்டு தகவல்கள், ஃபிஷ்ஷிங் சைட்கள் மூலமாகத் திருடப்படும் கிரெடிட்கார்டு தகவல்கள் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. டெலிகிராமில் மோசடிக்காரர்கள் கொடுக்கும் தகவலை நம்பி பணத்தைச் செலுத்தினால். அடுத்தது நீங்கள் அனுப்பும் மெசேஜூக்கு ரிப்ளை செய்ய மாட்டார்கள். பொருளும்கூட வீட்டுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 100 சதவிகிதம் கிடையாது.

"நம்புங்க, இது மோசடி கிடையாது!"

கேட்ஜெட்களின் விலையைப் பார்த்தவுடன் சிலருக்கு ஆர்வம் வரும் வேளையில் கொஞ்சம் சந்தேகமும் வரத்தானே செய்யும். அவர்களிடம் பேசும்போது அதைப் பற்றிக் கூடுதலாகக் கேள்வி கேட்டால் அதைச் சமாளிக்கவும் அவர்களிடத்தில் ஒரு வழி இருக்கிறது. 'நம்புங்கள், இது மோசடி கிடையாது' என்ற ரீதியில் தொடங்கும் ஒரு விளக்கக் கடிதம் அது. அதில் ஒருவருக்கு எழும் பொதுவான சந்தேகங்களும் அதற்கான பதில்களும் இருக்கும்.

டெலிகிராம் கேட்ஜெட் மோசடி
டெலிகிராம் கேட்ஜெட் மோசடி

"நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள். எனவே, கூடுதலாக வேறு எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். நம்பிக்கை இருந்தால் மட்டும் பணத்தை அனுப்பி வையுங்கள்!" என சென்டிமென்டாகத் தூண்டிலை வீசுவார்கள். அவ்வளவுதான் ஏற்கெனவே பொருள் இவ்வளவு விலை குறைவாக் கிடைக்கிறதே என்ற மனநிலையில் இருப்பவர்கள் கேள்வியே கேட்காமல் பணத்தை அனுப்பிவிடுவார்கள்.

சரி, உண்மையில் அப்படி ஒருவர் மோசடி செய்பவரிடம் சிக்கினால் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவு செய்து சேனலில் குறிப்பிட்டிருந்த நபருக்குத் தனியாக ஒரு மெசேஜை அனுப்பி வைத்தோம். எதிர்ப்பக்கத்தில் இருந்து வந்த ரிப்ளையில் "என்ன மொபைல் வேண்டும் ?" என இருந்தது. ஒரு குறிப்பிட்ட மொபைல் மாடலைக் குறிப்பிட்டு அது வேண்டும் எனப் பதிலளித்தோம். அடுத்த சில நிமிடங்களில் அதற்கான பதில் மெசேஜ் வந்தது.

டெலிகிராம் கேட்ஜெட் மோசடி
டெலிகிராம் கேட்ஜெட் மோசடி

அதில் போனின் விலை 8,000 ரூபாய். உங்கள் முகவரி வேண்டும், பணத்தை பேடிஎம் அக்கவுன்டில் ஒரே தடவையில் செலுத்த வேண்டும். இரண்டு மணி நேரத்தில் அமேசானில் பொருள் ஆர்டர் செய்யப்படும் எனப் பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதற்கும் ஓகே சொல்லிவிட்டு வங்கிக் கணக்கை அனுப்பி வைக்கச் சொன்னோம். அடுத்த நிமிடமே அந்தத் தகவலும் கிடைத்தது. அதோடு நிறுத்திக்கொண்டோம். இந்த மோசடியைப் பற்றிய விவரம் தெரியாத ஆளாக இருந்தால் ஒரு வேளை பணம் அனுப்பியிருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

சென்னையைச் சேர்ந்த எத்திக்கல் ஹேக்கர் சிவ பாலாஜியிடம் இந்த மோசடியைப் பற்றிக் கேட்டோம்.

"இது போன்ற கேட்ஜெட் மோசடி கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. அவ்வளவு விலை உயர்ந்த பொருளை விலை குறைவாக வாங்க முடியும் என்பதால் பலரும் இந்தத் தகவல்களை நம்பிவிடுகிறார்கள். இந்த மோசடியைச் செய்பவர்கள் வலையில் பேராசை கொண்டவர்கள் சிக்கி விடுகிறார்கள். என்னிடமே இது போன்ற ஏமாந்த பலர் அவர்களது பணத்தை மீட்டுக் கொடுக்கச் சொல்லி வந்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் நடந்து வந்த இந்த மோசடி இப்போது டெலிகிராம் ஆப்பில் அதிகமாகவே நடக்கிறது. டெலிகிராமில் அவ்வளவு எளிதாக ட்ராக் செய்ய முடியாது என்பதுதான் அதற்குக் காரணம். கொஞ்சம் முயற்சி செய்தால் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கை வைத்து ட்ராக் செய்யலாம்.

சிவ பாலாஜி
சிவ பாலாஜி

பேடிஎம்-மிடம் அது தொடர்பான தகவல்களும் இருக்கும். ஆனால், இந்த இடத்தில்தான் மோசடி செய்பவர்கள் நூதனமாகச் செயல்படுகிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பிரபலமாகத் தொடங்கிய பேடிஎம், ஏர்டெல் பொன்ற பேமென்ட் பேங்குகளில்தான் பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் கணக்கு வைத்திருக்கிறார்கள். இவற்றில் நேரில் செல்லாமலேயே ஆப் மூலமாகவே ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க விண்ணப்பிக்க முடியும். ஆதார் அட்டை மூலமாக அருகில் உள்ள ஒரு இடத்தில் கைரேகை மூலமாக e-KYC யை வெரிஃபை செய்துகொண்டால் வங்கிக் கணக்கை ஆக்டிவேட் செய்துவிடலாம். இந்த எளிமைத் தன்மையை மோசடி செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஏதோ ஒரு கிராமத்தில் விவரம் தெரியாத ஒரு நபரின் பெயரில் கணக்கைத் தொடங்குகிறார்கள். மோசடி செயல்களுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதன் மூலமாக மோசடி செய்பவர்கள் எளிதாகத் தப்பிவிடுகிறார்கள். எனவே, ட்ராக் செய்தாலும் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. யாராக இருந்தாலும் இது போன்ற மெசெஜ்களை நம்பாமல் இருப்பதுதான் நல்லது" என்கிறார்.

"ஒருத்தன ஏமாத்தணும்னா முதல்ல அவனோட ஆசையைத் தூண்டனும்!"

இதுபோல டிஜிட்டல் முறைகேடுகளில் பணத்தை இழந்தவர்கள் சட்டப்படி ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதைப் பற்றி சைபர் குற்ற வழக்கறிஞர் சத்திய நாராயணனிடம் கேட்டோம்.

"இது போன்ற மோசடியில் இழக்கும் பணம் குறைவாகவே இருக்கும் என்பதால் காவல்துறையினர் கவனம் செலுத்துவது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், பாதிக்கப்பட்டவர் உறுதியாக இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நோக்கி நகரலாம். சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம். அவர்கள் வழக்கு பதிவு செய்த பின்னர், குற்றவியல் நடைமுறை 91-ன் படி பேமென்ட் பேங்குக்கு வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை அளிக்குமாறு கோரிக்கை வைப்பார்கள்."

வழக்கறிஞர் சத்திய நாராயணன்
வழக்கறிஞர் சத்திய நாராயணன்

அதன் மூலமாக வங்கிக் கணக்கில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை அவர்களிடமிருந்து பெற முடியும். ஆனால், இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது சந்தேகம்தான். இப்போது அனைத்து சமூக வலைதளங்களிலுமே இது போன்ற மோசடிகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. 'ஒருத்தன ஏமாத்தணும்னா முதல்ல அவனோட ஆசையைத் தூண்டனும்!' இப்படி ஒரு வசனம் `சதுரங்க வேட்டை' படத்தில் வரும். அது போலத்தான் இந்த மோசடிக் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றனர். அதிகமாக ஆசைப்பட்டால் பணத்தை இழப்பதைத் தவிர்க்க முடியாது" என்கிறார்.

இது சட்டவிரோதமான நடவடிக்கை என்பதால் ஏமாந்தவர்களால் காவல்துறையினரிடம் செல்ல முடிவதில்லை. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலரும் சமூக வலைதளங்கள், Quora போன்ற தளங்களில் புலம்பித் தீர்ப்பதைப் பார்க்க முடிகிறது.

டெலிகிராம் கேட்ஜெட் மோசடி
டெலிகிராம் கேட்ஜெட் மோசடி

ஆனால், என்ன செய்தாலும் பணத்தை மட்டும் திரும்பப் பெறவே முடியாது. எனவே, இதுபோன்ற மெசேஜ்கள் உங்கள் கண்ணில் பட்டால் யோசிக்காமல் அதைத் தவிர்த்துவிடுவது நல்லது.