Published:Updated:

மகாபாரதம் மறு ஒளிபரப்பு; `லூடோ கிங்’கின் அபார வளர்ச்சி!’ - யார் இந்த விகாஷ் ஜெய்ஸ்வால்?

லூடோ கிங்
லூடோ கிங் ( | ScreenShot )

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில், இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டுச் செயலியாக உருவெடுத்திருக்கிறது லூடோ கிங்.

உலகின் ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்விலும், தொழில்நுட்பமும் இணையதளமும் ஆதிக்கம்செலுத்தும் இந்தக் காலகட்டத்தில்... எது, எப்போது வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. டி.வி-யிலும், மொபைல்போன்களிலும் பலமுறை மீண்டும் மீண்டும் பார்த்துச் சிரித்த வடிவேலுவின் `நேசமணி’ காமெடிகள் மீண்டும் ஒற்றைக் கமென்ட் மூலம் உலக ஹிட் அடிக்கும் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள். சாதாரண விஷயங்கள் உலக ட்ரெண்ட் அடிக்கும்போது, ஒருவித ஆச்சர்யம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். அப்படியானதுதான் லூடோ கிங் (LUDO KING) என்னும் மொபைல் கேமின் அபார ஹிட்.

லூடோ கிங் | ScreenShot
லூடோ கிங் | ScreenShot

சிறு வயதில், வீட்டில் அடம்பிடித்து ஸ்னேக் & லேடர் என்னும் பரமபதம் விளையாடும் போர்டு வாங்கியது நினைவிருக்கிறது. அந்த அட்டையின் பின்னால், இந்த லூடோ விளையாட்டுக்கான விஷயங்களும் இருக்கும். ஆனால், ஸ்னேக் & லேடர் விளையாடி விளையாடி அட்டை கிழிந்ததே தவிர, ஒருநாளும் லூடோ விளையாடியதில்லை. ஆனால் இன்று, லூடோ கிங் என்ற செயலி மூலம் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறோம். இதை, எப்போதும் ராயல் கேம் என்றே அழைக்கிறார்கள். காரணம், அரசாட்சி நடைபெற்ற காலங்களில் அரசர்களும் மகாராணிகளும் அரண்மனைக்குள் இந்த விளையாட்டை விளையாடுவார்கள்.

உலகத்தின் வரலாற்றை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அதேபோன்று முழுக்க முழுக்க இந்தியாவிலே, இந்தியர்களாலே உருவாக்கப்பட்ட இந்த லூடோ கிங் செயலியின் வளர்ச்சியை லாக் டெளனுக்கு முன், பின் என பிரித்துக்கொள்ளும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபாரமானது. சிறிய உதாரணம்...

லாக் டெளனுக்கு முன் இந்தச் செயலியில் தினமும் விளையாடிவர்களின் எண்ணிக்கை 13-15 மில்லியனாக இருந்தது. இதுவே லாக்டெளன் அறிவிப்புக்குப் பின், தற்போது சராசரியாக தினமும் 60-63 மில்லியன் மக்கள் விளையாடிவருகிறார்கள்.

இந்த லாக்டெளன் காலத்தில், லூடோ கிங் என்ற பெயரை எப்படியாவது கடந்துதான் வந்திருப்போம். நம்மில் பலர் தினமும் விளையாடி வரலாம். சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது லூடோ கிங் தொடர்பான மீம்ஸ் மூலமாகக்கூட அறிந்திருக்கலாம். மீம்ஸ் போடும் அளவுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்திருக்கிறது, இந்த லூடோ கிங் கேம்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு செயலியாக உருவெடுத்திருக்கிறது லூடோ கிங். இந்தத் தருணத்தில் இந்த கேம் உருவானது குறித்தும், அதற்கு முழுமுதற் காரணமான விகாஷ் ஜெய்ஸ்வால் குறித்தும் தெரிந்துகொள்வது, முழுக்க முழுக்க மோட்டிவேஷன் ரகம்!

லூடோ கிங் | ScreenShot
லூடோ கிங் | ScreenShot

`ஒரு கனவு... அந்த கனவுக்கான தேடுதல்... உழைப்பு.. வெற்றிக்கான காத்திருப்பு’ -இவை அனைத்தும் இணைந்தால் சரியான தருணத்தில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு விகாஷின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

பீகார் மாநிலம் பாட்னா, அவருக்கு சொந்த ஊர். தன் இரண்டு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். அம்மா, விகாஷ், அவரின் மூத்த சகோதரர் என மொத்த குடும்பமும், மீதம் இருக்கும் காலத்தை தந்தையின் பென்ஷன் பணத்தைக் கொண்டு வாழ்கிறது.

``எனது 17 வயதில், அந்த ஊரில் செயல்பட்டுவந்த ஒரு கேமிங் பார்லர், உள்ளூர் நிர்வாகத்தால் மூடப்படுகிறது. இதனால் கேம் விளையாடுவதை அதிகம் விரும்பும் நான் கவலையடைந்தேன். பின்னாட்களில் பெரிய ஆளாகி, ஒரு கேமை சொந்தமாக வாங்கி, அதை நாள் முழுவதும் விளையாட வேண்டும் என்றெல்லாம் அப்போது நினைத்துக்கொண்டேன்’ என டீன் பருவ கனவுகளை நினைவுகூர்கிறார் விகாஷ். அப்போதெல்லாம் விகாஷின் குடும்பத்தில் இருக்கும் அம்மாவோ, அவரது சகோதரரோ நீ என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டது கிடையாதாம். ஆனால், விகாஷ் ஒரு பணக்காரன் ஆக விரும்புவதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

Vikash
Vikash
Twitter

பள்ளிப் படிப்பை முடித்த விகாஷுக்கு, மென்பொருள் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டது. காரணம், இன்றைய தேதிக்கு, அவர்கள்தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது விகாஷின் எண்ணம். அதற்கான நுழைவுத் தேர்வுக்காகத் தயாரானார். இரண்டு வருட முயற்சிக்குப் பின்னர்தான், கல்லூரியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படிக்க இடம் கிடைத்தது. இடையில் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் அனிமேஷன், கிராஃபிக் டிசைன் மற்றும் 3டி வகுப்புகளுக்கும் சென்றுவந்தார்.

``அந்தக் காலகட்டத்தில் தந்தையை இழந்த நிலையில், ஒரு மகனை, ஒரு சகோதரனை பொறியியல் படிக்க வைப்பது சாதாரண விஷயம் கிடையாது. கூடுதலாக, நான் கம்ப்யூட்டர் தேவைப்படுவதாகச் சொன்னேன். எனது அம்மாவும் அண்ணனும் கஷ்டப்பட்டு எனக்கு வாங்கிக் கொடுத்தார்கள். அவர்களின் உழைப்பை என்றுமே நான் வீணாக்கியது கிடையாது. கல்லூரியில் அனைத்து மாணவர்களும் கம்ப்யூட்டரை படம் பார்க்க பயன்படுத்துவார்கள். நான் கம்ப்யூட்டர் சார்ந்த பத்திரிகைகளுடன் அப்போது சில இலவச மென்பொருள் சிடி இலவசமாகக் கிடைக்கும். அதைப் பயன்படுத்தி நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

லூடோ கிங்
லூடோ கிங்

அப்படித்தான் ஒருமுறை, கேமிங் தொடர்பான சி.டி கிடைத்தது. ஓர் இரவு முழுவதும் கடினமாக முயன்று `EGGY BOY’ என்ற கேமை உருவாக்கினோம். பல்வேறு பத்திரிகைகளில் எனது கேமை சிறந்த கேமாகத் தேர்ந்தெடுத்தார்கள். என்னுடன் படிக்கும் நண்பர்கள் சிலரும், இந்த கேமை அப்போது விளையாடிக்கொண்டு இருந்தார்கள்” என கல்லூரி வாழ்க்கையைக் குறிப்பிடுகிறார் விகாஷ்.

பின்னர், மும்பையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் இந்தியா கேம்ஸ் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், பணியில் முழுமையான திருப்தியைப் பெற முடியவில்லை. அதனால், தனியாக கேமிங் கன்டென்ட் இணையதளங்கள் உருவாக்கி, அதன்மூலம் பணம் சம்பாதித்தார். அப்படி கிடைக்கும் வருமானம், தனது மாதச் சம்பளத்துக்கு இணையாக வரவே, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனியாக கேமிங் மற்றும் இணையதளம் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டார்.

2010-ம் ஆண்டு, விகாஷ், நவி மும்பையில் Gametion Technologies நிறுவனத்தைத் தொடங்கினார். தனது சேமிப்பான 2 லட்ச ரூபாய் முதலீட்டுடன் இந்த நிறுவனம் தொடங்கியது. 7 பேர் கொண்ட சிறிய டீம், சில கம்ப்யூட்டர்கள், அவ்வளவுதான். ``அப்போது பணம் மட்டுமே குறிக்கோள். அதற்காக கேம்களை உருவாக்கத் தொடங்கினோம்” என்றார்.

லூடோ கிங்
லூடோ கிங்
Twitter

2013 -ம் ஆண்டில், லூடோ விளையாட்டை மொபைல் தளத்துக்குக் கொண்டுவருவது குறித்து முதல் முறையாகப் பேசினார்கள். அப்போது, அவர்கள் டீமில் இருந்த 7 பேரில் மூன்று பேர் மிக சிறப்பாகச் செயல்படக்கூடியவர்கள். ``அவர்கள் யாரும் லூடோ ஆட்டத்தை இதற்கு முன்னர் விளையாடாதவர்கள்" என்கிறார் விகாஷ். ``லூடோ விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ரூல்ஸ் இருக்கும். நாம் மொபைலுக்காக இதை வடிவமைக்கும் பட்சத்தில், விதிமுறைகள் எளிதான இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக்கொண்டோம். நீண்ட முயற்சிக்குப் பின்னர் 2016 -ம் ஆண்டு, லூடோ கிங் அறிமுகமானது” என்கிறார்.

அறிமுகம் ஆனது முதலே லூடோ கிங்குக்கு நல்ல ரீச் தான். ஆனால், லாக் டெளன் அறிவிப்பு வேறு மாதிரியான சர்ப்ரைஸ்களை விகாஷுக்குத் தந்தது. இதுதொடர்பாக விகாஷ், ``மார்ச் மாதம் 24 -ம் தேதி லாக் டெளன் அறிவித்த பின்னர், லூடோ கிங் விளையாடுபவர்களின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது.

குறிப்பாக, மகாபாரதம் மறு ஒளிபரப்பு முடிந்ததும் பெருமளவில் மக்கள், எங்கள் கேமை விளையாடத் தொடங்குவார்கள். இதனால் எங்கள் சர்வர்கள் திணறின.

lUDO KING Team
lUDO KING Team
www.gametion.com/

ஒரே நேரத்தில் பலர் விளையாட வருவதால், எங்களிடம் இருக்கும் சர்வர்கள் கடும் சிக்கலைச் சந்தித்தது. எங்கள் தொழில்நுட்ப டீம் கடுமையாக 3 நாள்கள் வேலைபார்த்து, சிக்கலை முடிவுக்குக் கொண்டுவந்தனர். அதுவரை 8 சர்வர்களுடன் இயங்கிய நிறுவனம், தற்போது 200 சர்வர்களுடன் இயங்குகிறது. காரணம், லூடோ கிங். லாக்

டெளனுக்கு முன்னர் தினமும் 13 முதல் 15 மில்லியன் மக்கள் இந்த கேமை விளையாடிவந்தார்கள். ஒரு மாதம் இந்த எண்ணிக்கை 60-63 மில்லியனாக இருந்தது. இதுவே லாக் டெளனுக்குப் பின்னர் தினசரி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனைக் கடந்துவிட்டது. அதுவே, மாத எண்ணிக்கை 185 மில்லியனாக உயர்ந்திருக்கிறது” என்றார்.

தொடர்ந்து, ``இந்திய மொபைல் கேம்கள் இதுவரை 100 மில்லியன் பதிவிறக்கம் என்ற நிலையைத் தொட்டதில்லை. ஆனால், லூடோ கிங் தற்போது வரை 350 மில்லியனுக்கும் அதிகமான இன்ஸ்டால்களைப் பெற்றிருக்கிறது. 2019 நிதியாண்டில், எங்கள் நிறுவனம் 6 மில்லியன் டாலர் அளவுக்கு டர்ன்-ஓவர் செய்தது. அதுவே 2020 நிதியாண்டில், அதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். 7 பேருடன் தொடங்கிய இந்த நிறுவனம், தற்போது 70 பேர் கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

Ga
Ga
Twitter

சென்சார் டவர் என்ற நிறுவனத்தின் புள்ளிவிவர கணக்குகளின்படி, லூடோ கிங் மட்டும் மார்ச் மாதத்தில் சுமார் 3,00,000 டாலர் வருவாய் ஈட்டியுள்ளது . 40 வயதாகும் விகாஷ், தற்போது கேமிங் உலகின் புதிய சென்சேஷன் ஆகியிருக்கிறார். லூடோ கிங் விளையாட்டில் அடுத்து என்ன அப்டேட் என்றுகேட்டால், ``4 -க்கும் அதிகமான நபர்கள் விளையாடும்படியான அப்டேட் விரைவில் வரும். கூடவே, ஆடியோ சாட் ரூம் என்ற ஆப்ஷனும் வழங்க இருக்கிறோம்” என்கிறார் கூலாக!

Story Inputs: YourStory

அடுத்த கட்டுரைக்கு