Published:Updated:

`ஆட்டத்துக்கு நாங்களும் வரலாமா?!' ஸ்ட்ரீமிங்கில் நெட்ஃப்ளிக்ஸோடு மோதும் HBO #TechTamizha

இந்தச் சேவை மே 2020-ல் அமெரிக்காவில் கிடைக்கத் தொடங்கும்!

HBO Max
HBO Max

`டூரிங் டாக்கீஸ்' சினிமா இன்று கையடக்க மொபைலுக்கும் வந்துவிட்டது. இணைய ஊடுருவல் அனைத்து துறையிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்து புது வடிவம் கொடுத்திருக்கிறது. அந்த மாற்றங்களை திரைத்துறையிலும் காணலாம். இந்த நூற்றாண்டைக் காட்சி ஊடகத்துக்கான நூற்றாண்டாகக் கொண்டாடலாம் என்னும் அளவுக்கு அவ்வளவு மாற்றங்கள். கடந்த 20 ஆண்டுகளில் `ஃபிலிம் டு டிஜிட்டல்', `டிவி டு ஸ்ட்ரீமிங்' என பரபரவென ஓடிக்கொண்டிருக்கிறது நம்ம ஆக்ஷன், கட் நடைமுறை. இவற்றுக்கு நடுவில் முழுமையான சினிமா அனுபவத்தைப் பெற தியேட்டருக்குதான் செல்ல வேண்டுமா என யோசிக்க ஆரம்பித்துவிட்டான் கடைக்கோடி ரசிகன்.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் | HBO
கேம் ஆஃப் த்ரோன்ஸ் | HBO

ஒருபுறம் `ஸ்ட்ரீமிங்கில் வந்ததும் பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனநிலையில் மக்கள் பலரும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இன்னொருபுறம் `பொழுதுபோக்குக்குப் படங்கள்தான் பார்க்கவேண்டுமா' என்ற மனநிலை. இன்று வரும் ஆங்கில தொடர்களின் தரம் அப்படி! பெரிய பட்ஜெட் படங்களை விடவும் பிரமாண்டமாகத் தயாராகத் தொடங்கிவிட்டன டிவி/வெப் தொடர்கள். இன்று பலரும் இந்த ஃபார்மட்டில் சொல்லியடித்தாலும், ஒரு விதத்தில் இந்த ட்ரெண்ட்டை ஆரம்பித்துவைத்தது HBO தான்.

சினிமாவுக்கு மாற்றுப் பொழுதுபோக்காக டிவி மட்டுமே இருந்த காலம் அது. சிட்-காம், டாக் ஷோ, ஸ்டாண்ட்-அப் காமெடி என பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் திரைப்படங்களுக்கேயான மொழியிலும், கதைசொல்லலிலும் எதுவுமே டிவிக்காக தயாரிக்கப்படவில்லை. அப்படியான சூழலில்தான் 1999-ம் ஆண்டில் `தி சப்ரனோஸ்' (The Sopranos) என்ற தொடரை ஒளிபரப்பியது HBO. `ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு கேங்ஸ்டர் கதை' என்று சொல்வார்களே, அதுதான் 'தி சப்ரனோஸ்'. டிவி/வெப் சீரிஸ்னா இப்படித்தான் இருக்கும் என்று மக்கள் நம்பும் இன்றைய ஃபார்மூலாவை வகுத்தது `தி சப்ரனோஸ்'தான். அதுதான் முதல் முக்கிய `டிவி சினிமா' என்று சொல்லலாம்.

'தி சப்ரனோஸ்' (The Sopranos)
'தி சப்ரனோஸ்' (The Sopranos)

அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து டிவியில் உயர்தர கதைகளை சொல்ல வேண்டும் என்ற முனைப்புடனே இயங்கிவருகிறது HBO. கடந்த தசாப்தத்தில் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைகள் மூலம் போட்டிகள் வந்தாலும் இன்றும் தனக்கான இடத்தை HBO தக்கவைத்துக்கொண்டிருக்கக் காரணம், அதன் நிகழ்ச்சிகளில் இருக்கும் தரம்தான். இதற்கு `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரின் உலகளாவிய ரீச்சை ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வருடாவருடம் விருதுகளையும் மறப்பதில்லை HBO.

ஆனாலுமே இன்றைய ஜென்-Z மற்றும் மில்லேனியல் ரசிகர்களுக்கு நேரடியாக ஆன்லைனில் படையல் வைக்கமுடியாமல் சில காலமாகத் திணறிவந்தது HBO. HBO Now, HBO Go போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் மூலம் அதன் டிவி நிகழ்ச்சிகளை அமெரிக்க மக்களுக்குக் கொடுத்துவந்தாலும் ஆன்லைனில் நெட்ஃப்ளிக்ஸ் உண்டாக்கிய தாக்கத்தை HBO-வால் உண்டாக்கமுடியவில்லை. மென்பொருள் அளவிலேயே சில சொதப்பல்கள் இருந்தது இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். இருந்தும் HBO நிகழ்ச்சிகளுக்கு இருந்த மவுசு என்பதே குறையவில்லை, காலம் செல்லச் செல்ல புதிய இடங்களுக்குப் பரவிக்கொண்டுதான் இருந்தது அது. அமெரிக்காவில் இரவு 9 மணி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இந்தியர்கள் பலரும் அதிகாலையில் (அமெரிக்காவில் இரவென்றால் இங்கே அதிகாலைதானே!) கண்விழித்துப் பார்க்கின்றனர். இந்தியாவிலேயே HBO-க்கான க்ரேஸ் அப்படி. இப்படியான சூழலில் இறுதியாக `நாங்களும் ஆட்டத்துக்கு வரலாமா?' என ஸ்ட்ரீமிங்கில் பெரிய என்ட்ரி கொடுக்கத் தயாராக இருக்கிறது HBO.

ஆனால் தனியாக அல்ல, பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் மீடியா (AT&T நிறுவனத்துக்குச் சொந்தமானது) உதவியுடன் ஸ்ட்ரீமிங் சந்தையில் களம் காணவுள்ளது HBO. ஸ்ட்ரீமிங் சேவையின் பெயர் HBO Max. 2020-ல் மே மாதம் இந்தச் சேவை அமெரிக்காவில் கிடைக்கத்தொடங்கும். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்?

HBO Max
HBO Max

தொழில்நுட்ப அளவிலேயே நெட்ஃப்ளிக்ஸுக்கு இணையான அனுபவத்தை HBO Max தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. UI லெவலிலேயே புதிய வசதிகள் பலவும் கொடுக்கப்படவுள்ளது. ஆனால், வெளியே என்ன பூசினாலும் உள்ளே என்ன இருக்கப்போகிறது என்பதுதான் இதன் வெற்றியைத் தீர்மானிக்கும்.

இதை அவர்களும் உணரவே செய்திருக்கின்றனர். HBO-வின் ஹிட் தொடர்கள் தாண்டியும் எக்கச்சக்க கன்டென்ட் இதில் இருக்கும்படி திட்டமிட்டிருக்கின்றனர். வார்னர் பிரதர்ஸுடன்தான் கூட்டணி என்பதால் அந்த நிறுவனத்தின் முக்கிய படங்கள் அனைத்தும் இதில் இடம்பெறும். இதுபோக DC யூனிவெர்ஸ் படங்கள் இதில் ஸ்ட்ரீம் ஆகும் என்பதால் சூப்பர்மேன், பேட்மேன், வொண்டர்வுமன் என சூப்பர் ஹீரோக்களுக்கு பஞ்சம் இருக்காது. மேலும், கார்ட்டூன் நெட்வொர்க், CNN, TBS எனப் பல நிறுவனங்களின் கன்டென்ட் இந்த HBO Max-ல் இருக்கும். இத்துடன் ஃப்ரெண்ட்ஸ், பிக் பேங்க் தியரி என கிளாசிக் ஹிட் தொடர்களின் ஸ்ட்ரீமிங் உரிமையையும் பெரும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறது HBO Max. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்ப்பதற்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை எப்போதுமே தயாராக வைத்திருக்கும் HBO Max.

HBO Max
HBO Max

இத்துடன் இந்தச் சேவைக்கென்றே பல`அல்லுசில்லு செதறு' இது டிஸ்னி என்ட்ரி! Max ஒரிஜினல்ஸ் தயாரிக்கப்படவுள்ளன. இதனால் ஒரு வருடத்தில் HBO-வின் அதே அக்மார்க் தரத்துடன் கூடுதல் தொடர்கள் நமக்குக் கிடைக்கப்போகின்றன. இதில் சிலவற்றின் பட்ஜெட்களைக் கேட்டால் வாயடைத்துப் போய்விடுவீர்கள். இந்த அறிமுக நிகழ்வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதைப் பின்னணியில் வரும் அடுத்த தொடர் என்ன என்பதும் அறிவிக்கப்பட்டது. அதனால் இப்போதே `வெயிட்டிங்லேயே வெறியேறுதே' மோடில்தான் இருக்கின்றனர் சீரிஸ் பிரியர்கள்.

மொத்தமாக HBO Max-க்கு அடுத்த வருடம் மட்டும் 2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 14,000 கோடி ரூபாய்) முதலீட்டைச் செய்யவுள்ளது AT&T நிறுவனம். இதன்பின் ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தொகை இன்னும் 1 பில்லியன் டாலர் கூடிக்கொண்டே இருக்குமாம். இதுவே குறைவுதான். தற்போது நெட்ஃப்ளிக்ஸ் வருடத்துக்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை நிகழ்ச்சிகளின் தயாரிப்புகளுக்கு மட்டும் செலவழிக்கிறது. இருந்தும் `நாங்கள் தரத்தில் கவனம் செலுத்தப்போகிறோம்' என்கிறது HBO Max. நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் குறிப்பிட்ட குறைந்த அளவிலான நிகழ்ச்சிகள்தான் பெருவாரியான மக்களால் பார்க்கப்படுகிறது. முக்கால்வாசி நிகழ்ச்சிகளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. அவற்றைத்தான் தவிர்க்கப் போவதாகக் கூறுகிறது HBO Max.

டிஸ்னி+
டிஸ்னி+

இது இப்படி இருக்க இன்னும் சில நாள்களில் டிஸ்னியும் தனது `டிஸ்னி+' ஸ்ட்ரீமிங் சேவைகளை அமெரிக்காவில் கொடுக்கவுள்ளது. தற்போது உலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் டிஸ்னிதான் என்று யோசிக்காமல் சொல்லலாம். டிஸ்னி, ஃபாக்ஸ் என முக்கிய படைப்புகள் அனைத்தும் `டிஸ்னி+' சேவையில் இடம்பெறும். மார்வெல், ஸ்டார்வார்ஸ் போன்ற முன்னணி ஃப்ரான்ச்சைஸ்கள் இவர்கள் கைவசம் என்பதால் அவெஞ்சர்ஸ்: எண்டுகேம் முதல் ஸ்டார்வார்ஸ்: எபிசோடு IX வரை அனைத்தையும் இந்தத் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யமுடியும். மேலும் பிக்ஸார், டிஸ்னியின் அனிமேஷன் படங்களும் இதில் இருக்கும். இதுபோக பல முக்கிய ஒரிஜினல் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வெளியிடவுள்ளது டிஸ்னி. அதில் அவெஞ்சர்ஸ் படங்களில் இடம்பெற்ற வின்டர் சொல்ச்சர், லோக்கி, ஸ்கார்லெட் விட்ச் போன்ற கதாபாத்திரங்களுக்கான தனித்தனி சீரிஸும் அடங்கும்.

Vikatan

இப்படி ஒருபுறம் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ட்ரீமிங்கில் குதித்துக்கொண்டிருக்க, டெக் உலகின் ராஜாவான ஆப்பிளும் ஸ்ட்ரீமிங் பக்கம் திரும்பியிருக்கிறது. `ஆப்பிள் டிவி+' சேவை ஏற்கெனவே கிடைக்கத்தொடங்கிவிட்டது. ஆப்பிள் தயாரிப்புகளை மட்டுமே கொண்ட இந்தச் சேவையை ஆப்பிள் சாதனங்கள் இருந்தால் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். இப்படி மதிப்புக்கூட்டல் சேவையாக `ஆப்பிள் டிவி+' சேவையைத் தருவதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களைப் பெறமுடியும் என்பது ஆப்பிளின் நம்பிக்கை.

100 கோடி ரூபாய்
ஆப்பிள் டிவி+ சேவையில் வெளிவந்திருக்கும் `The Morning Show' என்னும் தொடரின் ஒரு எபிசோடு பட்ஜெட் இது.
தி மார்னிங் ஷோ | The  Morning Show
தி மார்னிங் ஷோ | The Morning Show
அமேசான், நெட்ஃப்ளிக்ஸுடன் போட்டிபோடுமா ஆப்பிள் டி.வி ப்ளஸ்? #StreamingWars

இப்படி வரிசையாக அனைவரும் ஸ்ட்ரீமிங் சந்தையில் களமிறங்குவதால் பெரும் பின்னடைவைச் சந்திக்கப்போவது நெட்ஃப்ளிக்ஸ்தான். 2020-ல் ஒப்பந்தம் முடிகிற காரணத்தால் நெட்ஃப்ளிக்ஸில் இருக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் பலவும் மேலே குறிப்பிட்ட சேவைகளுக்குக் கைமாறவிருக்கிறது. இவை அனைத்துமே கட்டண சேவைகள் என்பதால் அனைத்து சேவைக்கும் ஒரு வாடிக்கையாளன் பணம் செலுத்தி சந்தா பெறுவான் என்று சொல்லமுடியாது. இதனால் வாடிக்கையாளர்களை எப்படி கைக்குள் வைத்திருப்பது என்ற திட்டமிடலில் தீவிரமாக இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஏற்கெனவே பல முக்கிய ஒரிஜினல் நிகழ்ச்சிகளைத் தயாரித்துள்ளதால் அவற்றின் அடுத்த அடுத்த சீசன்கள் தொடர்ந்து வெளிவரும். ஆனால், அடுத்த வருடம் காத்திருக்கும் கடும் போட்டியில் சண்டை செய்ய அது மட்டும் போதாது என்பதால் நெட்ஃப்ளிக்ஸிடமிருந்தும் பல புதிய தொடர்களை எதிர்பார்க்கலாம்.

இதனால் இந்தியாவில் என்ன நடக்கப் போகிறது?

ஹாட்ஸ்டார்
ஹாட்ஸ்டார்

இப்படியான தொடர் மற்றும் படங்களுக்கான ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள் அமெரிக்காவைப் போன்றே இந்தியாவில் இருக்காது. இந்தியாவில் HBO நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஸ்ட்ரீம் செய்யும் உரிமம் தற்போது ஹாட்ஸ்டாரிடம் இருக்கிறது. டிஸ்னி படங்களும் ஹாட்ஸ்டாரில்தான் வெளிவருகின்றன. டிஸ்னி+ மற்றும் HBO Max வருகையால் இந்த நிலை மாறுமா என்று தெளிவாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் இந்த இரண்டு பெரிய ஸ்ட்ரீமிங் சேவைகளும் இந்தியாவுக்கு வருமா என்றே தெரியவில்லை. ஆனால், நிச்சயம் உலகளவில் இருக்கும் அனைவரும் சென்றுசேர வேண்டும் என்றே இந்தப் பெரும் முதலீட்டைச் செய்திருக்கின்றன இந்த நிறுவனங்கள். ஆனால் ஒன்று நிச்சயம், தயாரிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏதேனும் ஒரு வடிவத்தில் இருக்கும் சேவைகள் மூலம் நம்மை வந்துசேர்ந்துவிடும்.

எடுக்க இத்தனை கனிகள் இருப்பது கடைக்கோடி ரசிகனுக்குக் கொண்டாட்டம்தானே!