Published:Updated:

"ஸ்னோடன்: ஹீரோவா...? துரோகியா..?" Permanent Records புத்தகம் என்ன சொல்கிறது?

ஸ்னோடன்
ஸ்னோடன்

அயல் தேச தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வார்த்தைகள் வழியாக அவரைத் தூற்றுபவர்களுடனும் ஆதரிப்பவர்களுடனும் “Permanent Records” புத்தகம் வழியாக உரையாடுகிறார் ஸ்னோடன்.

மிகச் சாதாரணமான ஒரு நாள்!

அந்தச் சிறுவனுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்.

அவனுடைய சகோதரியின் பெயருக்கு ஒரு கடிதம் வருகிறது. எனக்கே எனக்காக எப்போது கடிதம் வரும் என்ற ஏக்கம் ஒருபக்கம், அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம்.

அப்போது ஒரு குரல்.

அவன் அம்மாவின் குரல்.

"அடுத்தவர்களுக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் பார்ப்பது தவறு”

"சாதாரண கடிதம்தானே, அடுத்தவர்களுக்கு வந்த கடிதத்தைப் பிரித்துப் படிப்பது எந்தளவுக்குத் தவறு அம்மா?” இது அவனுடைய குரல்.

“உன்னைச் சிறையில் தள்ளக்கூடிய அளவுக்குத் தவறு மகனே…!”

அன்று அவனுடைய பிறந்த நாள்.

அவனுக்கு இப்போது வயது 29.

அமெரிக்க அரசின் மிக உயரிய ரகசிய கோப்புகள் அடங்கிய சர்வர்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களைக் காப்பாற்ற வேண்டிய வேலை அவனுடையது. அவனுடைய வேலையின் ஒரு பொருட்டாக ஒரு மென்பொருளை உருவாக்குகிறான். அந்த மென்பொருளைப் பார்ப்பவர்களுக்கும் பயன்படுத்துபவர்களுக்கும் அவன் வேலையை எளிதாக்கியதாகவே தோன்றும். ஆனால், அவன் ரகசியமான கோப்புகளை ஓரிடத்தில் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறான். ரகசியங்களைப் பேணிக் காக்கும் உயரதிகாரிகளுக்குத் துளியும் சந்தேகமே இல்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்த மென்பொருளைப் பயன்படுத்திப் பார்த்ததும் அவருடைய சந்தேகம் மறந்துவிட்டது அவருக்கு.

ரகசியக் கோப்புகளை ரகசியமாகப் படிக்கிறான். அதுவும் அரசாங்கத்தின் உயர் ரகசியங்களை.

உலக மக்களை வேவு பார்க்கும் அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை அரசுக்குத் துளியும் சந்தேகம் வராமல் வேவு பார்க்கிறான். உளவாளிகளை உளவு பார்க்கிறான்.

தனக்குக் கிடைத்த ரகசியத்தை ஊடகங்களில் அம்பலப்படுத்துகிறான். தலைமறைவாகிறான். அயல் தேச தூதரகத்தில் தஞ்சமடைகிறான்.

Permanent Record
Permanent Record

சகோதரியின் கடிதத்தைப் பிரிப்பது தனி நபர் உரிமை மீறல் என வளர்க்கப்பட்ட சிறுவன், அரசாங்கத்தின் உயர் ரகசியங்களை அத்துமீறி அம்பலப்படுத்தியவனாக மாறிய கதையை தானே விவரிக்கும் சுயசரிதைதான் “Permanent Records”.

எட்வர்ட் ஸ்னோடன்.
இந்த பெயர் மொத்த அமெரிக்க மக்களையும் ஒரு கேள்வி கேட்க வைத்தது, “இவர் ஹீரோவா..? துரோகியா..?”.

இதைச் சரிசமமாகப் பிரிந்து நின்று விவாதித்தார்கள். “இவன் நிச்சயம் துரோகி…கைக்கூலி" என்று அடித்துச்சொன்னது அரசுத் தரப்பு. அது எப்படி சொல்லாமல் இருப்பார்கள்...ஒரு ‘விசிலூதி'யாக (Whistle Blower) ஸ்னோடன் வெளிப்படுத்தியது சில நூறு அடி ஆழத்தில் புதைந்துகிடக்கும் அமெரிக்க அரசின் இருண்ட ரகசியத்தை.

அரசின் உளவுத்துறைப் பிரிவுகள் அத்தனை குடிமக்கள் பற்றிய தகவல்களையும் வேவு பார்ப்பது குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார் ஸ்னோடன். தேச பாதுகாப்புக்கு ஆபத்து, அரசின் ரகசியங்களை வெளியிடுவது குற்றம், அரசு ஆவணங்களைத் திருடிய கொள்ளைக்காரன் என்றெல்லாம் அரசுத்தரப்பாலும் ஒரு பிரிவு மக்களாலும் தூற்றப்பட்டார் ஸ்னோடன். தனிநபர் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் என்ற கருத்து கொண்ட பிரிவினரும் அறிவுத்தளத்தில் இயங்குபவர்களும் அவரை ஒரு கதாநாயகனாகப் பார்த்தார்கள்.

அமெரிக்க அரசால் தேடப்படும் குற்றவாளியாக, அயல் தேச தூதரகத்தில் தஞ்சம் புகுந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய வார்த்தைகள் வழியாக அவரைத் தூற்றுபவர்களுடனும் ஆதரிப்பவர்களுடனும் “Permanent Records” புத்தகம் வழியாக உரையாடுகிறார் ஸ்னோடன்.

மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் முதல் பகுதி அவருடைய இளம் பருவத்தின் கதையும் இணையம் வளர்ந்த கதையையும் விவரிக்கிறார். இரண்டாம் பகுதியில் அரசின் உளவுத்துறைகளான CIA, NSA ஆகியவற்றில் அவர் பணிபுரியத் தொடங்கிய விதத்தையும் இந்த அமைப்புகளின் குறைகளையும் விமர்சிக்கிறார். அரசின் மிக முக்கிய துறைகளாக விளங்கும் உளவுத்துறையில் முக்கிய பணிகளைக் கையாளும் பணியாளர்களே ஒப்பந்த ஊழியர்களாக நியமிக்கப்படும் அவலத்தையும் அதன் குறைபாடுகளையும் அவர் விமர்சிக்கும் அத்தியாயங்களைப் படிக்கும்போது அமெரிக்க அரசு இயங்கும் விதத்தின் போதாமை பெரும் அதிர்ச்சியையே தருகிறது.

Snowden
Snowden

புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் தனிநபர் உரிமைகளையும், அவை மீறப்படுவதன் அபத்தத்தையும், உளவுபார்க்கும் அமைப்புக்குள் பணிபுரிந்து கொண்டு தனிநபர் உரிமைகள் சார்ந்த அறத்தை யோசிப்பவருக்கு எழும் மனச் சிக்கல்களையும், அரசின் இந்த உளவுபார்க்கும் ரகசியத்தை வெளிப்படுத்த முனைந்த முயற்சிகளையும் வெளிப்படுத்தியதன் பின்விளைவுகளை விவரிக்கிறது. அவர் வெளிப்படுத்திய ரகசியங்கள் ஊடகங்களில் வெளிவரத் துவங்கியவுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் ஹாங்காங்கிலிருந்து வெளியேறி ஸ்னோடன் மாஸ்கோவில் தஞ்சமடைந்ததையும் அதன்பிறகு ஸ்னோடனின் மனைவி உளவுபார்க்கப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது இந்த பகுதி.

அரசுக்கு எதிராக ஒருவர் காய் நகர்த்தும் போது, அது தன் கறைபடிந்த கோரப்பற்களைக் காட்டுவது அவர்தம் உறவினர்களிடம் தான். ஸ்னோடனின் காதலியான லிண்ட்ஸே மில்ஸை அரசும், மீடியாவும் பாரபட்சமின்றி துளைத்தெடுத்தன. லிண்ட்சேயின் நாட்குறிப்பிலிருந்து சில பதிவுகளை லிண்ட்சேயின் அனுமதியுடன் இந்தப் புத்தகத்தில் ஒரு அத்தியாயமாகவே வெளியிட்டிருக்கிறார் ஸ்னோடன். தொடர்ச்சியாக லிண்ட்சேவுக்கு கேள்விகள் நீள்கிறது. சில மணி நேரம் நாள்களாக ஆகிறது. நாள்கள் வாரங்களாகிறது. கேள்விகளும் சந்தேகங்களும் மட்டும் அப்படியே இருக்கிறது.

அரசின் உலகளாவிய வேவு பார்ப்பது குறித்த ரகசியங்களை ஸ்னோடன் வெளியிட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது. அந்த ரகசியங்கள் தாண்டி இந்தப் புத்தகத்தின் மூலம் என்ன தெரிந்துகொள்ள முடியும்?

ஸ்னோடனைப் போலவே சில ஆயிரம் பேராவது அரசாங்கத்தின் இந்த உலகளாவிய உளவு பார்க்கும் வேலையில் பணிபுரிந்த போதும், ஸ்னோடனை விட அதிகார அடுக்கில் உயர்மட்டங்களிலிருந்தவர்கள் யாரும் ஏன் இந்த தகவல்களை வெளியிடவில்லை. தனிநபர் உரிமை மீறல்களைப் பற்றிய குற்ற உணர்ச்சியோ, அது தவறு என்ற எண்ணமோ ஏன் யாருக்கும் எழவே இல்லை. உளவுத்துறையில் ஒருவர் நுழையும் போதே தனிநபர் உரிமைகள் குறித்த கருத்து எப்படி உருவாக்கப்படுகிறது என்பது முதற்கொண்டு, ஏன் அவர்கள் ஸ்னோடனைப் போல அந்தத் தகவல்களை வெளியிடவில்லை என்பதையும் ஸ்னோடனே விளக்குகிறார். இதற்கு முன்பு அரசின் ரகசியங்களை வெளியிட்டவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதோடு அவர்களை அரசாங்கம் கையாண்ட விதத்தையும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளையும் படிக்கும் போது நமக்கே காரணம் புரியும்.

Snowden
Snowden

ரகசியங்களை வைத்திருப்பவர்கள் தானே அரசு கண்காணிப்பைப் பற்றி எல்லாம் கவலைப்படவேண்டும். மடியில் கனமில்லாதவர்கள் ஏன் பயப்படவேண்டும் என்ற எதிர்க்குரல்களுக்கான விமர்சனமாக ஸ்னோடன் அளிக்கும் விளக்கமும், எப்படியெல்லாம் இந்த டிஜிட்டல் யுகத்தில் தனியார் நிறுவனங்களாலும் அரசாலும் தொடர்ந்து நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதுமாக எழுதப்பட்டிருக்கும் அத்தியாயங்களையும் படிக்கும் போது நமது மொபைல் போனை சற்று பயத்தோடுதான் பார்க்கவேண்டியதாக இருக்கும்.

"கணினியையோ மொபைல் போனையோ தொட்ட எந்த மனிதனையும் அமெரிக்க அரசால் தாராளமாக உளவுபார்க்க முடியும்."
ஸ்னோடன்

'ஸ்மார்ட் கருவிகள்' என்ற பெயரில் வலம் வரும் அத்தனை சாதனங்களும் பயன்படுத்துபவர்களின் தகவல்களை உளவுபார்க்கும் கருவிகளாகவே இருக்கின்றன என்பதை ஒரு ஸ்மார்ட் ஃப்ரிட்ஜை வைத்து விளக்குகிறார்.

கிட்டத்தட்ட ஸ்னோடன் வளர்ந்த காலமும் இணையம் வளர்ந்த காலமும் ஒன்றே. புத்தகத்தின் முதல் பகுதியில் பல அத்தியாயங்களில் தனது கதையின் வழியே இணையத்தின் முதல் தலைமுறையின் வளர்ச்சியையும் கூறுகிறார். இணையம் வளர்ந்த கதையுடன் இணையம் சார்ந்த தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்கள் சாதாரண வாசகர்களுக்குக் கடினமாக இல்லாமல் எளிய அறிமுகங்களாக இருப்பதும் புத்தகத்தின் பின் பகுதியில் வரும் விஷயங்களைப் புரிந்துகொள்ளச் சுலபமானவையாக இருப்பது புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.

முதலில் போலியான பெயர்களில் பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது ஒரு புனைபெயரைத் தேர்ந்தெடுக்கிறார். அந்தப் புனைபெயர் ஜூலியன் அசாங்கே பயன்படுத்திய புனைபெயரைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கிறார். ஆனால், ரகசியங்களை வெளியிட விக்கிலீக்ஸை தேர்ந்தெடுக்காமல், மரபான பத்திரிகையாளர்களை ஏன் ஸ்னோடன் தேர்ந்தெடுத்தார் என்பதற்கான விளக்கமும் புத்தகத்திலேயே இருக்கிறது.

ஸ்னோடன்
ஸ்னோடன்

வெறும் WhistleBlower ஆக அரசின் ரகசிய ஆவணங்களை மட்டும் பத்திரிகையாளர்கள் வசம் ஒப்படைக்காமல் அவற்றைப் புரிந்துகொள்ளவும், தொழில்நுட்பம் தொடர்புடையவற்றைத் தெளிவாகவும் விளக்கமாகவும் அவர்கள் எழுதத் தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கி இருக்கிறார். பத்திரிகையாளர்களைத் தொடர்புகொள்ள அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் தொடர்பான விவகாரங்கள், TOR நெட்வொர்க் பற்றிய அறிமுகம், கண்காணிப்பு தொடர்பான தொழில்நுட்ப விவகாரங்கள் என அனைத்தையும் அத்தனை எளிமையாக விளக்குகிறார். ஜூலியன் அசாங்கே எழுதிய When Google Met Wikileaks புத்தகத்தில் தொழில்நுட்பம் தொடர்பான விளக்கங்கள் எளிய வாசகர்களுக்குப் பெரிய அயர்ச்சியை ஏற்படுத்தும். அந்தக் குறை இந்தப் புத்தகத்தில் இல்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல்.

அரசின் இந்த ரகசியத்தை வெளியிட்டபோதே, அதாவது ஏழு ஆண்டுகளுக்கு முன்பே "நான் ஏன் ரகசியங்களை வெளியிட்டேன்?" என்பதை விளக்கும் அறிக்கைகளை எழுதி இருக்கிறார் ஸ்னோடன். ஆனால், சரியான வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றை அழித்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் கழித்து மிகச்சரியான வார்த்தைகளைக் கோர்த்து அறிக்கைக்குப் பதிலாகப் புத்தகத்தையே எழுதி இருக்கிறார். இதுவரை புத்தகத்தைப் படித்த வாசகர்கள் Goodreads தளத்தில் ஸ்னோடனை புரிந்துகொண்டதாக விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

"ஸ்னோடன்: ஹீரோவா...? துரோகியா..?" உங்கள் பார்வையில் ஸ்னோடன் யார்?

இந்தப் புத்தகம் உங்கள் கருத்தை வலுப்படுத்தலாம், அல்லது மாற்றமடையச் செய்யலாம்.

அடுத்த கட்டுரைக்கு