Published:Updated:

`இந்த உண்மையைப் புரிந்து கொண்டால்!’- ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்க சில எளிய வழிகள் #MyVikatan

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

எப்போதும் ஸ்மார்ட்போனே கதி என்று கிடக்காமல் குடும்பம், புத்தக வாசிப்பு, சினிமா, தொலைக்காட்சி, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மடைமாற்றம் செய்துகொள்வது சிறந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``இணையத்தால் மிச்சப்படுத்தப்பட்ட நேரத்தை இணையத்திலேயே செலவிடுகிறோம்" என்பார்கள். இதை மெய்ப்பிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அதிலேயே ஒரு நாளின் பெரும்பங்கு நேரத்தைச் செலவிடுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் சமுதாயத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவாக Nomophobia எனும் no-mobile-phone-phobia இன்று மக்களிடம் அதிகரித்த வண்ணம் உள்ளது. சில மணி நேரங்கள் போனை பயன்படுத்தாவிட்டாலும் மனிதர்கள் படபடப்புக்கு உள்ளாகி விடுகின்றனர்.

``மூக்கணாங்கயிறுகளை மாற்றுவது மாடுகளுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியைத் தராது" எனும் ஹோ-சி- மினின் வரிகளையொட்டி தொழில்நுட்பமும், ஸ்மார்ட்போனும் நம்மை அடிமையாக்கினாலும் நமக்குப் பெயர் அடிமைகள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மனிதன் கண்டுபிடித்த ஒரு கருவியே அவனுக்கு எதிராக மாறுகிறது என்றால், அது அதன் பயன்பாட்டில் ஏற்படும் பிழையே அன்றி, கருவியில் பிழையில்லை.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள்
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள்

இன்றைய காலகட்டத்தில், இருந்த இடத்திலிருந்து உலகை ஆளும் வல்லமை கொண்ட அசுரனாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. அதை முறையாகப் பயன்படுத்தினால் உலகம் நம் கால்களுக்குக் கீழ்தான். ஆனால், இங்கு பெரிய பிரச்னை என்னவென்றால், ஸ்மார்ட்போனை எவ்வாறு முறையாகப் பயன்படுத்துவது என்று பெரும்பாலானோர் அறியாமல் இருப்பதுதான். குறைவான நேரத்தில் நிறைவாகப் பணிகளை முடிக்கும் திறனுடையோர் மட்டுமே ஸ்மார்ட்போன் மூலம் வெற்றிக்கு மேல் வெற்றிகளை ஈட்ட முடிகிறது.

நேரக்கள்வனாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்னைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆனால். எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் முறையாகப் பயன்படுத்தினால் அது மனிதனுக்கு நன்மை பயப்பதாகவே அமையும். பயன்படுத்தும் கால அளவு என்பது முக்கியமான விஷயமாக இருக்கின்றது. ``தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்பவனே உண்மையில் சுதந்திரமான மனிதன்" என்பது ஸ்மார்ட்போன் விஷயத்தில் உண்மையான வாக்காகவே உள்ளது. ``குறைவான நேரத்தில் நிறைவான பணி" என்பதே நமது செல்போன் பயன்பாட்டின் தாரக மந்திரமாக இருக்கவேண்டும்.

ஸ்மார்ட்போனைப் பயனுள்ள வகையிலும் முறையாகவும் பயன்படுத்த அடிப்படையான சில குறிப்புகள்:

1) நமது நேரத்தை விழுங்கி விடுவதுதான் ஸ்மார்ட்போனின் பெரும் பிரச்னை. நமது எண்ணங்களை, தகவல்களை மற்றும் செய்திகளை நாம் டைப் செய்ய நேரம் அதிகம் பிடிப்பதால், ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரம் அதிகமாகின்றது. அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் உள்ள ``வாய்ஸ் டைப்பிங்" வசதியைப் பயன்படுத்துவது இப்பிரச்னைக்கு சிறந்த தீர்வாக அமையும். 4 அல்லது 5 பக்கங்கள் உள்ள தகவல்களைக் கூட அதிகபட்சம் பத்து நிமிடங்களில் டைப் செய்து விட முடியும். (இந்தக் கட்டுரையை முழுமையாக டைப் செய்ய 15 நிமிடங்களே ஆனது!) நமது கைகளில் எழுதுவது போன்றே மொபைல் ஸ்கிரீனிலும் எழுதக்கூடிய வசதியை அளிக்கும் Google Handwriting input போன்ற Apps களை டைப் செய்வதற்குப் பயன்படுத்துவதும் சிறந்த உத்தியே.

2) நம்முடைய எண்ணங்களை பிளாக்குகளில் (Blog) சேமித்து வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்தலாம். Link ஆக பகிர்வது மிகவும் எளிது. காலாகாலத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே பிளாக் பயன்படுத்துவது ஒரு ஸ்மார்ட்டான உத்தி.

3) நம்முடைய முக்கியமான புகைப்படங்கள், வீடியோக்கள், தகவல்கள், லிங்குகள் மற்றும் நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவற்றை நமக்கே நமக்கு என்று, நாம் ஒருவர் மட்டுமே உள்ளவாறு ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கி அதில் சேமித்து வைக்கலாம். நமக்கே நமக்கென வாட்ஸ் அப் குழு உருவாக்குவது எப்படி என்றால், வழக்கமாக வாட்ஸ் அப் குழு உருவாக்குவது போன்றே, நமக்கு நெருக்கமான யாரேனும் ஒருவரை மட்டுமே குழுவில் இணைத்து, பின் அவரை குழுவிலிருந்து உடனடியாக நீக்கி விடலாம். இப்போது நமக்கே நமக்கான குழுவில் நாம் மட்டுமே இருப்போம்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

4) ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் அசிஸ்டன்ட் போன்ற விர்ச்சுவல் அசிஸ்டன்ட்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம் பெருமளவு மிச்சமாகும். பணியானது ஸ்மார்ட்டாகவும் அமையும். நாம் கட்டளையிடும் பெரும்பாலான பணிகளை கூகுள் அஸிஸ்டன்ட் போன்ற ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஆப்ஸ் விரைவாகச் செய்து முடித்து விடும்.

5) வாட்ஸ்அப் நம்முடைய நேரத்தை நிறைய சாப்பிடுகிறது. எனவே, தேவையற்ற குழுக்களிலிருந்து தயவு தாட்சண்யமின்றி வெளியேறிவிட வேண்டும். மறுபடியும் நம்மை அந்தக் குழுக்களில் இணைக்க முடியாதவாறு குரூப் செட்டிங்ஸில் மாற்றம் செய்துகொள்ளலாம். இவ்வாறு செய்து கொண்டால், நம் அனுமதியின்றி யாரும் நம்மை குழுக்களில் இணைக்க முடியாது. மேலும் நமக்கு வரக்கூடிய மெசேஜ்களை பார்வேர்டு செய்யக்கூடிய போஸ்ட்மேன் வேலையைச் செய்து கொண்டிருக்காமல் இருந்தாலே வாட்ஸ்அப்பில் பெரும்பாலான நேரம் மிச்சப்படுத்தப்பட்டு விடும்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

6) ஒரு புத்தகத்தில் அச்சிடப்பட்ட சொற்றொடர்கள் அல்லது போனில் ஒரு புகைப்படத்தில், இமேஜில் காணப்படும் சொற்கள், நமது போனில் டைப் செய்யப்பட்ட வடிவில் சில நேரங்களில் நமக்கு தேவைப்படும். கூகுள் லென்ஸ் பயன்படுத்துவதன் மூலம் நாம் இதை விரைவாக சாத்தியமாக்க முடியும்.

7) நமது அலுவலகம், நாம் வசிக்கும் இடம் அல்லது நமக்குத் தெரிந்த இடங்களின் முகவரி மற்றும் வழியினை யாராவது கேட்கும்போது நாம் தெளிவாகவே கூறினாலும், அதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே. இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வாக கூகுள் மேப்ஸ் அமைகிறது. கூகுள் மேப்ஸில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் இடங்களை நாமே Add a missing place Option மூலமாக Add செய்து வைத்துக்கொள்ள முடியும். நாம் Add செய்த Google Maps Link ஐ Share செய்தாலே மிக சுலபமாக மற்றவர்களுக்கு நம்மால் வழிகாட்டி விட முடியும்.

8) நாம் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நம்முடைய ஒரிஜினல் ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் கொண்டுசெல்ல Digilocker உதவுகிறது. நம்முடைய லைசன்ஸ், ஆதார் கார்டு, இன்ஷூரன்ஸ், ஆர்.சி புக் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை Digilocker-ல் சேமிப்பதன் மூலம், நம்முடைய ஒரிஜினல் டாக்குமென்ட்களை நாம் செல்லுமிடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது. Digilocker இல் உள்ள ஆவணங்கள் அனைத்துமே அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளாலுமே ஒரிஜினலாகவே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, Digilocker உபயோகப்படுத்துவது மேம்பட்ட ஒரு சிறந்த வழி.

9) நாம் முக்கியமாகச் சேமித்து வைக்கவேண்டிய சில தகவல்களை Gmail-ல் நமக்கு நாமே மெயில் அனுப்புவது மூலமாக சேமித்துக் கொள்ளலாம். அந்தத் தகவல் எந்தவித இணைய தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், Gmail draft இல் சேமித்து வைத்து, தேவைப்படும்போது உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.

10) வங்கிகள், விளம்பர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து வரக்கூடிய தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் நமக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்கும். இவற்றைத் தடுக்க Do not disturb (DND) சர்வீசை ஆக்டிவட் செய்து வைத்துக் கொள்வது சிறந்தது. இதனால் தேவையற்ற மற்றும் போலியான அழைப்புகளோ அல்லது செய்திகளோ நம்மை வந்தடைவது தடுக்கப்படும்.

11) நம்முடைய புகைப்படங்கள் வீடியோக்கள், பைல்கள் உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவ் உள்ளிட்ட Cloud Storage களில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளமுடியும். புகைப்படங்களை கூகுள் போட்டோசில் சேமித்துக்கொள்வது சிறந்த உத்தி. ஸ்மார்ட் போன் தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்து போனாலும் கூட, நம்முடைய இனிய நினைவுகள் மற்றும் தேவையான தகவல்கள் அனைத்தும் Cloud இல் பாதுகாக்கப்பட்டிருக்கும். அவ்வாறே நம்முடைய கான்டாக்ட்களை Cloud மற்றும் கூகுள் அக்கவுன்ட் உள்ளிட்டவற்றில் சேமித்துக்கொள்வதும் ஸ்மார்ட்டான ஒரு வழியாகும். எத்தனை முறை போனை மாற்றினாலும் நம்முடைய கான்டாக்ட்களை உடனுக்குடன் மீட்டு எடுத்துக்கொள்ளலாம்

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

12) டிஜிட்டல் வாலட்டுகள் நம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், நாம் ஸ்மார்ட்டாகப் பணியாற்றவும் உதவுகின்றன. எனவே, ஏதேனும் ஒரு சிறந்த டிஜிட்டல் வாலட் பயன்படுத்துவது சிறந்த செயல்பாடாக இருக்கும்.

13) மொபைல் போன் மற்றும் Apps களில் வரக்கூடிய அப்டேட்களை உதாசீனம் செய்யாமல் நமக்குத் தேவையான Apps களை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்வதும், போன் தயாரிப்பு நிறுவனம் அப்டேட் அளிக்கும் போதெல்லாம் மொபைல் போனை உடனுக்குடன் அப்டேட் செய்து கொள்வதும் நமது போன் வேகமாகச் செயல்பட உதவும்.

நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு ஒரு முறை ஸ்மார்ட் போனை Restart செய்து கொண்டால் போன் வேகமாக இயங்க வாய்ப்பு ஏற்படும். மேலும், தேவையற்ற வீடியோக்கள், வாட்ஸ்அப் இமேஜ்களை அவ்வப்போது கிளியர் செய்துவிட்டால் மொபைலின் ஸ்டோரேஜ் அதிகமாக கிடைக்கும். அதனால் போன் வேகமாக மற்றும் ஸ்மார்ட்டாக இயங்கும்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

14) சில Apps பயன்படுத்த எளிதாக, மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அதற்காக சிறிதளவு பணம் செலவிட வேண்டியது இருக்கும். அவ்வாறு சிறிது பணத்தைச் செலவிடுவது ஸ்மார்ட்டான ஒன்று. இதன் மூலமாக நம்முடைய பணிகள் எளிதாக, நிறைவாக முடியும். நேரமும் மிச்சப்படும்.

15) போனில் தேவையற்ற Appகளை நிரப்பி வைத்துக்கொண்டு அவற்றின் நோட்டிபிகேஷன்களைப் பார்த்துக்கொண்டிருப்பதால் நம்முடைய நேரம் தேவையின்றி வீணாகிறது. தேவையற்ற Apps களை உடனடியாக Uninstall செய்துவிடலாம். தேவைப்படும் போது அவற்றை Install செய்து கொள்ளலாம். அவ்வாறே நோட்டிபிகேஷன் தேவைப்படும் Apps களில் மட்டும் ஆன் செய்து விட்டு மற்றவற்றில் ஆப் செய்து கொள்ளலாம்.

16) பேருந்து, இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்த மாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம். இது நம்முடைய கண்களுக்கும் பயணத்திற்கும் பாதுகாப்பு. பயணம் இனிமையாகவும் ரசிக்கக்கூடியதாயும் அமையும். போன் பயன்படுத்தும் நேரத்தையும் குறைக்க முடியும்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

17) காலை எழுந்தவுடன் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் முகத்தில்தான் கண் விழிக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் காலை தூங்கி எழுந்ததிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு போனை கையில் எடுக்க மாட்டேன் எனப் பழகிக்கொள்ளலாம். அவ்வாறே இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே போன் உபயோகப்படுத்துவதை நிறுத்தி விடலாம். இது உடல் மற்றும் மனநலத்திற்கு ஆரோக்கியமான ஒன்றாக அமையும். போனைப் பயன்படுத்தும் நேரமும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

18) நிறைய பேர் Bathroom இல் கூட செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். Bathroom இல் ஸ்மார்ட்போன் உபயோகிப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. எனவே பாத்ரூமில் செல்போன் உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. என்ன அவசர வேலையாக இருந்தாலும் பாத்ரூமில் போன் உபயோகப்படுத்த மாட்டேன் என்று தீர்மானித்துக்கொள்ளலாம். அவ்வாறே படுக்கை அறையில் உறங்கச் செல்லும் முன், ஸ்மார்ட் போனை வேறு அறையில் வைத்து விட்டு உறங்கச் செல்லுதல் நலம் பயக்கும். இரவில் தூங்கும் அறையில் செல்போனை வைத்திருக்காமல் இருப்பது நம்முடைய உடல் மற்றும் மன நலனுக்கு ஆரோக்கியமானது.

19) பள்ளிகளில் புத்தகம் இல்லாத நாள் (Book free day)உள்ளது போல, நாமும் ஏதேனும் ஒரு விடுமுறை நாளை ஸ்மார்ட்போன் இல்லாத நாள் (Smart phone free day)என்று நமக்கு நாமே வரையறுத்துக் கொள்ளலாம். இது வாரம் ஒரு நாளாகவோ அல்லது மாதம் ஒரு நாளாகவோ இருக்கலாம். இதனால் பெரிதாக ஒன்றும் இழப்பு வந்துவிடப் போவதில்லை. குடும்பத்துடனான நமது அன்பை, உறவை இந்நாள் பலப்படுத்தும் என்பது உறுதி.

20) நாம் அனைத்தையும் அறிந்தது போல பேசாமல், நாம் உண்மையில் அறிந்ததை மட்டுமே உலகத்திற்குக் கூறுவோமேயானால் நம்முடைய பெரும்பாலான நேரம் மிச்சப்படுவது மட்டுமல்லாமல், நம்மைப் பற்றிய உயர் மதிப்பு மற்றவர்களுக்கு ஏற்படும். தேவையற்ற காப்பி-பேஸ்ட்களை தவிர்ப்பது இந்த விஷயத்தில் நமக்கு நலம் பயப்பதாய் அமையும்.

21) பெரும்பாலானோர் மொபைல் போனை அடிக்கடி எடுத்து நமக்கு ஏதாவது தகவல் வந்துள்ளதா? நம்முடைய பக்கத்தை யாராவது லைக் செய்யதுள்ளார்களா? கமென்ட் ஏதாவது வந்துள்ளதா? நோட்டிபிகேஷன் ஏதாவது உள்ளதா? என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் செய்யும் அன்றாடப் பணிகளில் ஒருவித சுணக்கம் ஏற்படுவதுடன், மனச்சோர்வும் ஏற்படும். இதைத் தடுக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே மொபைல் போனை எடுத்துப் பார்ப்பேன் எனத் தீர்மானித்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே மொபைல் போனில் பார்ப்பேன் என்ற தீர்மானம் மூலம் நம்முடைய பணித்திறன் அதிகமாகும்.

23) எப்போதும் ஸ்மார்ட்போனே கதி என்று கிடக்காமல், குடும்பம், புத்தக வாசிப்பு, சினிமா, தொலைக்காட்சி, நண்பர்கள் என்று நம்முடைய பொழுதுபோக்குகளை மடைமாற்றம் செய்து கொள்வது சிறந்தது.

24) ஸ்மார்ட்போனில் ஒரு நுட்பத்தை நாம் கற்றுக் கொள்கிறோம் என்றால் அதை நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நாம் கற்றுக் கொடுக்கலாம். அவ்வாறு கற்றுக்கொடுப்பதன் மூலம் அந்தத் தொழில்நுட்பம் நமக்கு மறந்து போகாமல் நீண்டநாள் நினைவிலிருக்கும். பிறருக்கும் பயன்படும்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

25) ஃபேஸ்புக்கில் 5,000 நண்பர்கள் கொண்ட, ட்விட்டரில் 50,000 நபர்களால் ஃபாலோ செய்யப்படும் ஒருவருக்கு ஏதேனும் பிரச்னை அல்லது சிக்கல் என்றால், அந்த மெய்நிகர் நண்பர்களை விட, அவரது குடும்பம், உறவினர்கள், சுற்றியுள்ளவர்கள், அவருடைய நேரடியான தொடர்பு கொண்ட நண்பர்களே அவருக்கு உடனடியாக உதவ, ஆறுதல் கூற, அன்புகாட்ட முடியும் என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டாலே, நாம் நமது ஸ்மார்ட்போனை குறைவான நேரத்தில் நிறைவாகப் பயன்படுத்தும் உத்திகளைத் தேடிப் பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம். மெய்நிகர் உலகத்தில் நாம் செலவிடும் நேரத்தையும், எனக்கு எதற்குமே நேரமில்லை எனும் நாகரிகப் புறக்கணிப்பைக் குறைத்து, மெய்யான உலகத்துடனான அன்புப் பரிமாற்றத்தை அதிகரிக்க ஆரம்பித்து விடுவோம்!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு