Published:Updated:

'அப்பாலே போ ஆண்ட்ராய்டே!' - சொன்னதைச் செய்துகாட்டிய வாவே

யூ செங்டாங் (Yu Chengdong).
யூ செங்டாங் (Yu Chengdong).

வாவே-வின் புதிய இயங்குதளமான ஹார்மனி ஆண்ட்ராய்டுக்கு பெரும் சவாலாக மாறலாம்.

எந்த இடமாக இருந்தாலும் அதிகாரம் என்பது ஒற்றைப் புள்ளியில் குவியும்போது, அங்கே சிக்கல் எழுவது இயல்பான விஷயம். ஸ்மார்ட்போன் உலகைப் பொறுத்தவரை அந்த ஒற்றைப் புள்ளி ஆண்ட்ராய்டுதான்.

ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டு

கூகுளின் கையில் இருக்கும் ஆண்ட்ராய்டுதான் இன்றைக்கு உலகில் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் இயங்குதளம். சந்தைக்குள் நுழைந்து பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட ஆண்ட்ராய்டு, இத்தனை வருடங்களில் அதன் போட்டியாளர்கள் அனைவரையும் ஓரம் கட்டியிருக்கிறது.

ஸ்மார்ட்போன்களை எடுத்துக்கொண்டால், இரண்டு இயங்குதளங்கள்தாம் பிரதானமாக இருக்கின்றன. ஒன்று, கூகுளுக்குச் சொந்தமான ஆண்ட்ராய்டு , மற்றொன்று ஆப்பிளுக்குச் சொந்தமான ஐஓஎஸ். ஆண்ட்ராய்டு, ஒப்பன் சோர்ஸ் இயங்குதளமாக இருப்பதால், ஆப்பிள் தவிர்த்து அனைத்து மொபைல் நிறுவனங்களும் அதைத்தான் பயன்படுத்தி வருகின்றன. அந்த நிறுவனங்களில் ஒன்றுதான் சீனாவைச் சேர்ந்த வாவே.

டிரம்ப்- ஜி ஜின்பிங்
டிரம்ப்- ஜி ஜின்பிங்

இரண்டு மாதங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டு நிறுவனங்கள் சீனாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்குத் தடை விதித்தார். ஏற்கெனவே உளவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுவந்த வாவே-வுக்கு, இந்தத் தடை பெரும் பின்னடைவைக் கொடுத்தது. கூகுள், ஒரு அமெரிக்க நிறுவனம்; அதன் தயாரிப்புதான் ஆண்ட்ராய்டு என்பதால், வாவே-வுக்கு அதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவானது.

அப்படித்தான், அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரில் ஆண்ட்ராய்டின் பெயர் அடிபடத் தொடங்கியது. அமெரிக்காவின் தயாரிப்புகள் எதுவும் சீனாவுக்கு செல்லக்கூடாது என்பதால், கூகுளுக்கும் வேறு வழியில்லை. உலகச் சந்தையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது வாவே. தீர்மானம் எடுக்கப்பட்ட நொடியில், அதன் தொழிற்சாலைகளில் நொடிக்கு ஆயிரக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அவற்றுக்கு உயிரூட்டப்போவது, கூகுளின் ஆண்ட்ராய்டுதான். அப்படியிருக்கும்போது, அமெரிக்கா திடீரென எடுத்த இந்த முடிவால் முதலில் திகைத்துப்போனது வாவே.

வாவே
வாவே

ஆனாலும் இந்தப் பிரச்னையைப் பொறுமையாகக் கையாண்டது. பணம் இருக்கிறது, அதையெல்லாம்விட திறமை இருக்கிறது. பிறகு எதற்காகக் கவலைப்பட வேண்டும். தனக்கென ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்க முடிவுசெய்தது. அதற்கேற்றவாறு கூகுளும் சில காலத்துக்கு ஆண்ட்ராய்டைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தது. புதிய இயங்குதளத்தை உருவாக்கியே ஆக வேண்டிய கட்டாயத்தில் அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்கியது. ஆனால் திடீரென யாருமே எதிர்பாராத வகையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது.

ஜப்பானில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற G-20 மாநாட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார் ட்ரம்ப். அமெரிக்க நிறுவனங்கள், அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்துகொள்ளலாம் என அவர் தெரிவித்ததால், வாவேவுக்கு மீண்டும் கூகுளின் தொடர்பு கிடைக்கும் வாய்ப்பு உருவானது.

வாவே
வாவே

அதே நேரம், புதிய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியிலிருந்து வாவே பின்வாங்கவில்லை. கடந்த மாதம், அந்த இயங்குதளம் HongmengOS என்ற பெயரில் அழைக்கப்படலாம் என்பது போன்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இந்நிலையில், சீனாவின் Dongguan நகரத்தில் நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில் தனது புதிய இயங்குதளத்தை அறிமுகம் செய்திருக்கிறது வாவே.

ஆண்ட்ராய்டின் பாதையில் ஹார்மனி

இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் புதிய இயங்குதளம் ஒன்றை உருவாக்கி சாதித்திருக்கிறது, வாவே. இதற்கு, பொதுவான பெயராக ஹார்மனி (HarmonyOS) என்ற பெயரையும் சூட்டியிருக்கிறது. அதே வேளையில், இது சீனாவில் HongmengOS என்ற பெயரிலேயே வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வாவே, போன்களுக்கு மட்டுமல்ல தற்போது ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தி வரும் அனைத்து போன்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

ஹார்மனி இயங்குதளம்  (HarmonyOS
ஹார்மனி இயங்குதளம் (HarmonyOS

'தடையற்ற, மென்மையான, பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த அனுபவத்தை ஹார்மனி கொடுக்கும் என வாவே-வின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் IoT எனப்படும் தொழில்நுட்பத்தை கருத்தில்கொண்டு, இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்சுகள், டி.வி-க்கள் மற்றும் வாகனங்கள் என அனைத்து விதமான ஸ்மார்ட் கேட்ஜெட்களிலும் இதைப் பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டைப் போலவே இதுவும் ஓப்பன் சோர்ஸ் இயங்குதளம் என்பதால், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

" ஒரு வேளை ஆண்ட்ராய்டைப் பயன்படுத்துவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஹார்மனிக்கு மிக எளிதாக நாங்கள் மாறிக்கொள்வோம். ஒன்று அல்லது இரண்டு தினங்களில் அதைச் சுலபமாகச் செய்துவிட முடியும்" என தெரிவித்திருக்கிறார், வாவே நுகர்வோர் வணிகக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூ செங்டாங் (Yu Chengdong).
யூ செங்டாங் (Yu Chengdong).
யூ செங்டாங் (Yu Chengdong).

முன்பு ஏற்பட்டதைப் போல ஒரு நிலைமை வந்தால், நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆண்ட்ராய்டை மட்டுமே நம்பி நாங்கள் இல்லையென்பதுதான் அவர் சொல்லவரும் விஷயம். ஆண்ட்ராய்டுக்கு எதிராக இருந்துவந்த இயங்குதளங்கள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. வேறு எதுவும் போட்டிக்கு இல்லாத காரணத்தால், கூகுள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது, ஹார்மனியின் மூலமாக அந்த நிலை மாறக்கூடும்.

HTML5, லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய தளங்களில் உருவாக்கப்படும் ஆப்களை ஹார்மனி ஏற்றுக்கொள்ளும். முதலில் சீனாவிலும் அதன் பின்னர் உலக நாடுகளிலும் இதை வெளியிட வாவே திட்டமிட்டுள்ளது. அதேநேரம், தற்போது அதன் போன்களில் ஆண்ட்ராய்டுக்கே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்திருக்கிறது வாவே. ஆனால், அடுத்த முறை அமெரிக்கா ஏதாவது பிரச்னை செய்தால், தயங்காமல் ஹார்மனிக்கு மாறும்.

ஹார்மனி இயங்குதளம்  (HarmonyOS
ஹார்மனி இயங்குதளம் (HarmonyOS

இன்றைக்கு மொபைல் சந்தையில் பெரும் பங்களிப்பு, சீன நிறுவனங்களுடையதுதான். அவர்கள் அனைவருமே ஆண்ட்ராய்டையே பயன்படுத்திவருகிறார்கள். திடீரென என்றாவது சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக ஹார்மனியைப் பயன்படுத்த முடிவுசெய்தால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறும். சந்தையில் ஹார்மனியின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கும். தொழில்நுட்ப உலகில், குறுகிய காலத்துக்குள் மாற்றம் நடைபெற்றுவிடும். அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத்தான் இப்போது காத்துக்கொண்டிருக்கிறது, வாவேவின் ஹார்மனி.

அடுத்த கட்டுரைக்கு