Election bannerElection banner
Published:Updated:

`70MM திரையில் விகடன் படிக்கிறேன்'- விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் பகிரும் வாசகர்! #MyVikatan

விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் பகிரும் வாசகர்
விர்ச்சுவல் ரியாலிட்டி அனுபவம் பகிரும் வாசகர்

நடக்க முடியாதவர்கள் கைலாய மலைக்குச் சென்ற அனுபவம் பெறலாம். மனிதத் திருமணங்கள் மறைந்துபோய் விர்ச்சுவலாக கணவன் மனைவியுடன் வாழும் காலம் வரலாம். உலகம் முழுவதையும் உங்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நான் சொல்லப்போவது பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். எனக்குப் பைத்தியம் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், மொத்த உலகையும் ஒரு தொழில்நுட்பம் விரைவில் ஆட்கொள்ளப் போகிறது. ஒவ்வொரு மனிதனையும் ஆக்கிரமிக்கப் போகிறது. இப்போது அந்தத் தொழில்நுட்பம் ஒன்றாம் வகுப்பு நிலையில் இருக்கிறது. சரி... அந்தத் தொழில்நுட்பம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு முன் சில விஷயங்களைக் கேளுங்களேன்!

Virtual intelligence
Virtual intelligence
Pixabay

ஒரு பிரமாண்டமான தியேட்டரில் நீங்கள் மட்டுமே அமர்ந்து தனியே தன்னந்தனியே விகடன் படிக்கலாம் - அதுவும் 70 MM திரையில். இந்தியாவில் இருக்கும் தாத்தா அமெரிக்காவில் இருக்கும் பேரனைத் தூக்கிக் கொஞ்சலாம். சென்னையில் இருக்கும் இளைஞன் மும்பையில் இருக்கும் காதலியுடன் ஹவாய் பீச்சில் உட்கார்ந்து கைகோத்தபடி காதல் பேசலாம். நீங்கள் உங்கள் வீட்டிலிருந்தபடி உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் உங்களுக்குப் பிடித்த ஒரு கற்பனை தியேட்டரில் அருகருகே அமர்ந்து அளவளாவியபடி ஒரே படத்தை ஒரே நேரத்தில் பார்க்கலாம். நீங்கள் வளரும் டாக்டராக இருந்தால் ஒரு கடினமான ஆபரேஷனை மீண்டும் மீண்டும் செய்து தேர்ச்சி பெறலாம். இன்னும் சிறிது காலத்தில் அம்மாக்கள் இங்கிருந்தபடி அமெரிக்காவில் இருக்கும் மகளுக்குச் சமையல் செய்து தரலாம்.

இப்படி முடிவில்லாத சாத்தியக்கூறுகள் கொண்ட இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் விர்ச்சுவல் ரியாலிட்டி. தமிழில் சொல்வதானால் 'மெய்நிகர் உலகம்'. சில ஆண்டுகளுக்கு முன் 2500 USD (1.88 லட்ச ரூபாய் தேவை என்று கேட்டு ஆரம்பித்த Oculus என்னும் ஒரு சிறு கம்பெனியை 200 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது என்றால் அந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் எப்படி என நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்!

விர்ச்சுவல் டிராவல்
விர்ச்சுவல் டிராவல்

அதென்ன விர்ச்சுவல் ரியாலிட்டி? முதலில் உங்களுக்கு ஒரு கேள்வி. உங்கள் அருகில் இருக்கும் நபர் இருக்கிறார் என்று எப்படித் தெரிந்து கொள்கிறீர்கள்? கண்ணால் பார்த்து. ஒரு வேளை இரவாகவும் கும்மிருட்டாகவும் அவர் பேசுவதை அல்லது மூச்சு விடும் சத்தத்தை அல்லது அவரிடமிருந்து வரும் வாசனையை அல்லது அவர் கை உங்களைத் தொட்டுக்கொண்டு இருப்பதால் அவரை நம்மால் உணர முடியும். இவை அனைத்தும் இல்லாத நிலையில் அருகில் ஒருவர் இருக்கிறார் என்று உங்களால் சொல்லவே முடியாது. அனைத்துமே ஐம்புலன்களால் உணரப்படுவதே. நம்மைத் தவிர பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் விஷயங்களை நம் ஐம்புலன்களால் தான் அறிந்துகொள்கிறோம். அதனால்தான் ஞானிகள் இதை `மாய உலகம்' என்கிறார்களோ?

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் இப்போது இந்த மாயத்தை கண், காது, தொடு உணர்ச்சி ஆகிய மூன்று புலன்களால் தரும் நிலையை அடைந்திருக்கிறது. விரைவில் வாசனை உணர்வும் 'olfactory' என்கிற சென்சார் மூலம் கிடைத்துவிடும். சுவை மட்டுமே பாக்கி நிற்கும்.

இந்தக் கருவி மூலம் நீங்கள் பார்க்கும் மனிதரை முப்பரிமாணத்தில் உங்கள் அருகிலிருப்பது போலவே உணரலாம். தொடு உணர்ச்சி Haptic feedback மூலம் துல்லியமாகக் கொடுக்க முயற்சி செய்துவருகிறார்கள். இது விரைவில் சாத்தியமாகும்.

இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் இப்போது கூகுள், மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக் என மூன்று டெக் ஜாம்பவான்கள் களத்தில் இருக்கிறார்கள். Microsoft Hololens, Google Magic leap, Facebook Oculus Rift / Oculus Go / Oculus quest ஆகிய போன்ற சாதனங்களில் தீவிர கவனம் செலுத்திவருகின்றன இந்த நிறுவனங்கள். இவற்றில் நடுத்தர மக்கள் வாங்கும் நிலையில் Oculus quest உள்ளது.

Oculus quest
Oculus quest

மொபைல் எப்படி நம் வாழ்க்கையை புரட்டிப் போட்டதோ அதுபோல இந்தக் கருவி சமூக வாழ்க்கைத் தளத்தில் பல நம்ப முடியாத மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது. நடக்க முடியாதவர்கள் கைலாய மலைக்குச் சென்ற அனுபவம் பெறலாம். மனிதத் திருமணங்கள் மறைந்துபோய் விர்ச்சுவலில் கணவன் மனைவியுடன் வாழும் காலம் வரலாம். உலகம் முழுவதையும் உங்கள் வீட்டிலிருந்தபடியே சுற்றலாம்.

இங்கே உண்மைக்கும் மாயத்தோற்றத்துக்குமான இடைவெளி நூலிழையில் ஊசலாடுகிறது. நம்ப முடியாதவர்கள் Upload என்னும் அமேசான் ப்ரைம் தொடரைப் பாருங்கள். நான் ஒரு கற்பனைத் திரையரங்கில் தனியாக உட்கார்ந்து விகடன் படிப்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதுவும் ஒரு மெய்நிகர் தோற்றமே!

- சுப்ரமணியன்.வி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு