Published:Updated:

`நகர்ப்புறங்களைவிட 10% அதிகம்!’ - இணைய பயன்பாட்டில் முன்னணியில் நிற்கும் கிராமங்கள்

இணையம்
இணையம்

இணைய பயன்பாட்டுக்கு செல்போனே மிகவும் விரும்பப்படும் கருவியாக உள்ளது. இணைய சேவையைப் பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் நகர்ப்புறத்தில்தான் அதிகம், கிராமப்புறங்களில் குறைவு என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கும். ஆனால், இந்தியாவின் இணையம் மற்றும் அலைபேசி கூட்டமைப்பு மற்றும் நீல்சன்( Nielson) நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, இணைய வசதியை நகர்ப்புற மக்களைவிட கிராமப்புற மக்களே அதிகம் பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்திருக்கிறது.

அவர்கள் அளித்துள்ள தகவலின்படி கிராமப்புறங்களில், 227 மில்லியன் மக்கள் இணையத்தை ஆக்டிவ்வாகப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப்புறத்தில் 205 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் ஆக்டிவாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. நகரத்தைவிட 10 சதவிகிதம் அதிகம் பேர் அதிகமாக கிராமப்புறத்தில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். ஒருவர் ஒரு மாதத்தில் ஒரு தடவையேனும் இணையத்தைப் பயன்படுத்தினால் அவர் ஆக்டிவ் பயன்பாட்டாளர் என்று கருதப்படுகின்றனர்.

இணைய பயன்பாடு
இணைய பயன்பாடு

இணையத்தில் நேரம் செலவழிப்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், நகர்புற மக்களே கிராமப்புற மக்களைவிட அதிக நேரம் இணையத்தில் செலவிடுகின்றனர். அதேபோல் நகர்ப்புறத்தில் பத்தில் ஒன்பது பேர் மாதத்தில் ஒரு தடவையாவது இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

நவம்பர் 2019 புள்ளிவிவரப்படி இந்தியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட 504 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். கடந்த மார்ச் 2019-ல், 450 மில்லியன் மட்டுமே இருந்த எண்ணிக்கை, நவம்பர் மாதத்துக்குள் 53 மில்லியன் அதிகரித்திருக்கிறது.

சீனாவைத் தொடர்ந்து அதிகம் இணைய பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.

குறைந்த விலையில் இணையத்தைப் பயன்படுத்த உதவும் பொருள்கள் மற்றும் இணைய சேவைகள் கிடைப்பதும், இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகக் கருதப்படுகிறது.

இணைய பயன்பாட்டிற்கு செல்போனே மிகவும் விரும்பப்படும் கருவியாக உள்ளது. இணைய சேவையைப் பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். பெண் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 21%-மும் ஆண் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 9%-மும் அதிகரித்துள்ளது.

`நகர்ப்புறங்களைவிட 10% அதிகம்!’ - இணைய பயன்பாட்டில் முன்னணியில் நிற்கும் கிராமங்கள்
ndphotographer

இணைய ஊடுருவல் ( internet penetration) ஒரு நாட்டில் உள்ள மக்கள் தொகையில் எத்தனை பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது. இது அமெரிக்காவில் 88%, சீனாவில் 61%, இந்தியாவில் 40% என இருக்கிறது. இந்திய அளவில் internet penetration அதிகம் உள்ள மாநிலமாக டெல்லி உள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா, ஜம்மு காஷ்மீர், இமாசலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் 13 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் மும்பை முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் 11.3 மில்லியன், பெங்களூர் 6.6 மில்லியன், கொல்கத்தா 6.27 மில்லியன், சென்னை 6 மில்லியன் என்று உள்ளது.

நவம்பரில் கிடைத்த புள்ளிவிவரத்தைவிட தற்போது இணைய பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கிற்குப் பின்பு ஸ்மார்ட்போனில் சராசரியாக ஒரு நாளைக்கு 4.3 மணி நேரம் செலவிடுகின்றனர் என்று ஆப் ஆனி ஆப் ஆண்ட்ராய்டு நிறுவனம் கூறியுள்ளது. ஊரடங்கின் காரணமாக இணையத்தில் வேலை, படிப்பு, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று மக்கள் அதிக நேரம் செலவழிப்பதே அதிக இணைய பயன்பாட்டுக்கான காரணமாக உள்ளது. டிசம்பர் 2019-ல் 2.1 பில்லியன் மணிநேரமாக இருந்த வீடியோ பயன்பாட்டு நேரம், மார்ச் மாதத்தில் 2.9 பில்லியன் மணி நேரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு