`மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா இந்தியா?!’- Razorpay அறிக்கை சொல்வது என்ன?

UPI பணப்பரிவர்த்தனை முறை அறிமுகமான பிறகு, கார்டு மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், "The Era of Rising Fintech" என்ற தலைப்பில் இந்தியா எவ்வாறு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை பின்பற்றுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டிருந்தது பிரபல பண பரிவர்த்தனை சேவையான ரேஸர்பே (Razorpay). அது இந்தியாவில் டிஜிட்டல் பண பணப் பரிவர்த்தனைகள் எப்படி வளர்ச்சி கண்டுவருகிறது என தெளிவாக எடுத்துகாட்டியது.
தற்போது மீண்டும் "How India makes and accepts payments" என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது ரேஸர்பே. இந்த அறிக்கையில் பணமில்லா பரிவர்த்தனை முறைகளை மக்கள் எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனர் என்றும், எவ்வளவு வேகமாக இந்தியா அந்தப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது புள்ளிவிவரங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
பர்ஸை மறந்து வீட்டில் வைத்துச் சென்றாலும், மொபைலை எடுத்துச் செல்ல மறப்பதில்லை நாம். நம் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மொபைலே பயன்படும் என்றால் இன்னும் வசதிதானே? அதனாலேயே UPI பணப்பரிவர்த்தனை முறையை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

UPI பணப்பரிவர்த்தனை செயலிகளில் `கூகுள் பே' தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டுகளைவிடவும் கூகுள் பே மூலம் செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனைகளானது ஏழு மடங்கு வளர்ச்சி கண்டு முதல் இடத்தில் உள்ளது. 62% பரிவர்த்தனைகள் கூகுள் பேவில்தான் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து போன்பே இரண்டாம் இடத்தையும் பேடிஎம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தியாவில் எந்தெந்த நகரங்கள் அதிகளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றன எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 23.31 சதவிகிதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையுடன் பெங்களூரூ முதலிடத்திலும் 10.44 மற்றும் 7.61 சதவிகித டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுடன் டெல்லி, ஹைதராபாத் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மாநிலங்கள் அளவில் 26.64 சதவிகிதத்துடன் கர்நாடகா முதலிடத்திலும் 15.92 சதவிகிதத்துடன் மகாராஷ்ட்ரா இரண்டாம் இடத்திலும், 13.01 சதவிகிதத்துடன் டெல்லி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகளவில் பயன்படுத்தப்படும் துறைகளாக உணவு மற்றும் உணவு சார்ந்த விற்பனை, நிதிச் சேவைகள் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் உள்ளன. UPI பணப்பரிவர்த்தனை முறை அறிமுகமான பிறகு, கார்டு மற்றும் நெட் பேங்கிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019-ல் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது 10 சதவிகிதமும், நெட் பேங்கிங் 12 சதவிகிதமும் குறைந்துள்ளது.

இந்த அறிக்கையே இந்தியா எந்தளவு விரைவாகப் பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் மற்ற முறைகளைவிட UPI பரிவர்த்தனை முறை மிக வேகமாக மக்களிடம் ஆதரவைப் பெற்றுவருகிறது. நண்பர்களுக்கிடையில் மட்டுமல்லாது வணிகத்துக்கும் UPI பரிவர்த்தனையைப் பயன்படுத்த மக்கள் விரும்புகிறார்கள் என ரேஸர்பேயின் தலைமைச் செயல் அதிகாரியான ஹர்ஷில் மாத்தூர் தெரிவித்துள்ளார்.