Published:Updated:

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம்... பின் ஏன் அணுசக்தி? #MustRead

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ( Pixabay )

சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், குறைவான செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்த வருடமும் இந்தியா முதல் இடத்தில் வந்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலக அளவில் இந்தியாதான் முதலிடம்... பின் ஏன் அணுசக்தி? #MustRead

சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், குறைவான செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்த வருடமும் இந்தியா முதல் இடத்தில் வந்துள்ளது.

Published:Updated:
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ( Pixabay )

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நோக்கிய பயணத்தில், உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் மிக வேகமாக சூரிய சக்தியையும் காற்றாலைகளையும், இன்ன பிற மரபுசாரா சக்தியையும் நோக்கி நகர்கின்றன. அந்த வகையில், 2017-ம் வருடத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திமூலம் குறைவான செலவில் மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா முதல் முறையாக முதல் இடத்திற்கு வந்ததையும், அதற்கு முன்னுதாரணமாக தமிழகம் எவ்வாறு உள்ளது என்பதையும் "சீனாவை முந்திய தமிழகம்" என்கிற கட்டுரையில் கடந்த வருடம் வெளியிட்டோம்.

IRENA (International Renewable Energy Agency) என்கிற சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்தின் 2018-ம் ஆண்டுக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், குறைவான செலவில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்த வருடமும் இந்தியா முதல் இடத்தில் வந்துள்ளது. இது, கடந்த வருடத்தின் விலையைவிட 27 சதவிகிதம் குறைவானதாகும் என்பது கூடுதல் உவகை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காற்றையும் நீரையும் மாசுபடுத்தி, நிலக்கரிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவைவிட, புதுப்பிக்கத்தக்க சக்திகள்மூலம் உற்பத்திசெய்யும் மின்சாரம் விலை குறைவாக உள்ளது என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு புதிய செய்தி அல்ல என்பதையும் "கூடங்குளம் கவனிக்கவேண்டிய ரூ 1.50 கணக்கு" என்கிற கட்டுரையில் பார்த்தோம்.

சோலார் எனர்ஜி
சோலார் எனர்ஜி
IRENA Website 2018 report on Renewables

உலக அளவில் 2020-க்குள் நிர்மானிக்கப்போகும் காற்றாலைத் திட்டங்களும் சூரிய ஒளித்திட்டங்களும் நிலக்கரி சார்ந்த திட்டங்களைவிட விலை குறைவானதாக இருக்கின்றன என்கிற செய்தி, இயற்கையை விரும்பும் ஒவ்வொரு மனிதருக்கும் இனிமையான செய்தியாக இந்த அறிக்கையில் வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு கிலோவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்திசெய்ய இந்தியாவில் சுமார் 793 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. இரண்டாம் இடத்தில் இருக்கும் இத்தாலியில், 870 டாலர்களும் மூன்றாம் இடத்தில் இருக்கும் சீனாவில், 879 டாலர்களும் ஆகின்றன. புகுஷிமா விபத்திற்குப் பிறகு, அணுசக்தியை விட்டு விலகிச் செல்லும் ஜப்பானில் 2101 டாலர்கள் ஆகின்றன. பட்டியலில் 17-வது இடத்தில் இருந்தாலும், உறுதியுடன் புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில், சூரிய ஒளி மற்றும் காற்றாலை திட்டங்கள் 13 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. உயிரி சக்தி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்வது 14 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. நீர் மின் திட்டங்கள் 11சதவிகிதம் விலை குறைந்துள்ளது. கடலில் நிறுவும் காற்றாலைகள் , புவிவெப்ப சக்தி போன்ற துறைகளில் பெரும் முன்னேற்றம் எதுவும் இல்லை.

இத்துறையில் உள்ளவர்களை இப்போது கிளர்ச்சியூட்டக்கூடிய ஒரு தொழில்நுட்பம் எனில், அது செரிவூட்டப்பட்ட சூரிய ஒளித்திட்டம்(Concentrated Solar Power) ஆகும். அதாவது, நாம் சிறுவயதில் விளையாடும்போது சூரிய ஒளியை ஒரு கண்ணாடி வில்லை (லென்ஸ்) மூலம் குவித்து, ஒரு சிறிய துண்டுக் காகிதத்தை நெருப்பூட்ட முயற்சிசெய்வோம் அல்லவா, அது போன்ற ஒரு தொழில்நுட்பம்தான் இது. சீனா, இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இந்தியா இன்னும் இதில் இறங்கவில்லை. தமிழக மின் திட்டப் பொறியாளர்கள் இந்தத் திட்டத்தை கவனத்தில்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சாதனைகளை சாத்தியப்படுத்துவது நம் மண்ணின் மனிதவளம் என்பதுதான் உண்மை. இதை உண்மையாக உள்வாங்கிக்கொண்டு அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டியது அரசின் கடமை.

மின்சக்திக்கு ஆகும் செலவு
மின்சக்திக்கு ஆகும் செலவு
IRENA Website 2018 report on Renewables

அரசு சரியான திசையில் செல்கிறது என்றால், புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் திட்டங்களை அதிகமாகச் செயல்படுத்திய நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றிருக்கும். மாறாக, அந்த விஷயத்தில் சீனாவைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது இந்தியா.

ஏறத்தாழ சீனாவின் மக்கள் தொகையைக்கொண்டது இந்திய நாடு என்பதை அறிவோம். 2018-ம் ஆண்டு முடிவில், சீனாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் கொள்ளளவு 695 கிகா வாட் (GW), இந்தியாவின் அளவு 117 கிகா வாட் (GW). இந்தியாவைவிட ஆறு மடங்கு சீனா முன்னணியில் உள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிக்கொண்டு சூரிய உற்பத்தியை அதிகரிக்கிறது. மாறாக, இந்திய அரசு மக்கள் விருப்பத்திற்கு எதிராக அணு உலைகளை நிறுவுவது மட்டும் இல்லாமல், அடர்ந்த மக்கள் தொகைகொண்ட நம் ஊர்களில் அணுக்கழிவுகளைச் சேகரிக்கவும் முயற்சி எடுக்கிறது. அணுக்கழிவுகளைச் சேமிக்கும் சரியான தொழில்நுட்பம் இல்லாதபோது ஏன் அணுஉலைகள் நிறுவ வேண்டும் என்ற இயல்பான கேள்விக்குக் கூட பதில் இல்லை.

தமிழகம் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித் துறையில், இந்திய மாநிலங்களில் முன்னோடி என்பதைத் தாண்டி, உலகில் இந்தத் துறையில் கோலோச்சும் தெற்கு ஆஸ்திரேலியா, டென்மார்க், ஜெர்மனி, டெக்சாஸ் போன்ற பெரிய மாநிலங்களோடும் நாடுகளோடும் சேர்ந்து போட்டி போட்டுப் பயணிக்க வேண்டும்.

இந்தியாவின் அணுக்கழிவு குப்பைத்தொட்டியாகவோ சவப்பெட்டியாகவோ தமிழகம் ஆவதை உடனடியாக தவிர்த்தல் வேண்டும்.

இது மத்திய மாநில அதிகாரத்திற்கு அரசுகளுக்கு உட்பட்டது என்று விலகிச்செல்லாமல், நம் ஊரின் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சார்பாக கூட்டுறவு முறையில் சூரிய ஒளி, காற்றாலை பூங்காக்களை உருவாக்கி, தற்சார்பு அடைய முயற்சிகள் வேண்டும். இதைப் போன்ற ஒரு சாதனையை நிகழ்த்த விழுப்புரம் மாவட்டம் இரும்பை கிராமத்தால் முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது என செயலில் இறங்க வேண்டும்.

நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே உருவாக்கி, தற்சார்பு நிலைபெற வேண்டும். இதை நாம் இன்று செய்யத் தவறினால், தண்ணீர் அரசியல் நம்மை எப்படி திரிசங்கு நிலையில் விட்டுள்ளதோ, அதே நிலையில் மின்சார அரசியலும் விட்டு விடும். விழித்துக்கொள்பவர்களே பிழைத்துக்கொள்கிறார்கள்.

நம் மண்ணையும் வளத்தையும் காத்துக்கொள்ள வேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் செயலில் இறங்கி தீர்வை நோக்கிப் பயணித்தல் அவசியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism