சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இனி தேவையில்லை ஜி.பி.எஸ்!

ஜி.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.பி.எஸ்

இந்தியாவின் இந்த சபதம் தற்போது நிறைவேறியுள்ளது.

1999-ம் ஆண்டு. கார்கிலில் சில முக்கியப் பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியிருந்த நேரம். அந்தப் பகுதிகளின் GPS தரவுகளைத் தந்து உதவுமாறு அமெரிக்காவிடம் கேட்டது இந்தியா. அமெரிக்கா தரவில்லை.

அந்த GPS தகவல்கள் மட்டும் கிடைத்திருந்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக அது அமைந்திருக்கும். கார்கில் போரின் விளைவுகள் மேலும் இந்தியாவுக்குச் சாதகமாகியிருக்கும். அந்த நிகழ்வுக்குப் பிறகுதான், ‘இனி அமெரிக்கா, ரஷ்யா தயவு வேண்டாம். நமக்கெனத் தனியாக ஒரு GPS உருவாக்குவோம்’ என சபதம் எடுத்தது இந்தியா. இந்தியாவின் இந்த சபதம் தற்போது நிறைவேறியுள்ளது.

ஆம், இந்தியாவின் சொந்த சாட்டிலைட் பொசிஷனிங் சிஸ்டம் இப்போது தயார். இதற்கு NavIC எனப் பெயரிட்டுள்ளனர்.

 GPS
GPS

NAVigation with Indian Constellation என்பதன் சுருக்கமே NavIC. இது இஸ்ரோவின் செயற்கைக்கோள்களின் உதவியுடன் இந்தியாவுக்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘இந்திய GPS’ எனலாம். 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் 2012-ம் ஆண்டே முழுச் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது தான் வருகிறது இது. NavIC மூலம் சொந்தமாக பொசிஷனிங் சிஸ்டம் வைத்திருக்கும் எலைட் பட்டியலில் அமெரிக்கா(GPS), ரஷ்யா (GLONASS), ஐரோப்பா(Gallileo), சீனா(BeiDou) ஆகியவற்றுடன் இணைகிறது இந்தியா.

இது எப்படிச் செயல்படுகிறது, இதற்கும் GPS-க்கும் என்ன வித்தியாசம்? இரண்டுமே ஏறத்தாழ ஒரே விதமான செயல்பாடு கொண்டவைதான். NavIC-க்கு முதுகெலும்பாக இருப்பது IRNSS(Indian Regional Navigation Satellite System) என்னும் செயற்கைக்கோள் அமைப்பு. இதில் தற்போது ஏழு செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இவற்றைக் கொண்டு இந்தியா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான்) மட்டும் தற்போது சேவை வழங்கும் NavIC. ஆனால், GPS-ல் மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. இவற்றில் மொத்த பூமிக்கும் சேவையளிக்க 24 செயற்கைக்கோள்கள் தேவை.

இனி தேவையில்லை ஜி.பி.எஸ்!

மீதமிருப்பவை துல்லியத்தைக் கூட்டுவதற்காக இருக்கும் செயற்கைக்கோள்கள். ஆனால், இத்தனை செயற்கைக்கோள்கள் இருந்தாலும் இந்தியாவைக் கவனிக்க மட்டும் ஏழு செயற்கைக்கோள்கள் கொண்டுள்ளதால் NavIC, இந்தியாவில் GPS-ஐ விடத் துல்லியமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்போதே ராணுவப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட NavIC 0.5 மீட்டர் அளவுக்குத் துல்லியமாக இருக்குமாம். பொதுப்பயன்பாட்டில் 5-20 மீட்டர் அளவில் இருக்கும். இஸ்ரோ, வருங்காலங்களில் கூடுதலாக இன்னும் சில செயற்கைக்கோள்கள் அனுப்பவும் திட்டமிட்டுள்ளதால் NavIC-ன் துல்லியம் காலம் செல்லச் செல்ல அதிகரிக்கவே செய்யும்.

நாம் தற்போது வைத்திருக்கும் ஸ்மார்ட்போனிலேயே NavIC-ஐப் பயன்படுத்த முடியாது. மென்பொருள் அளவில் மட்டும் மாற்றங்களைச் செய்வது போதாது. மொபைலின் சிப்செட் அளவிலேயே இதற்கு சப்போர்ட் இருக்கவேண்டும். இதற்காகத்தான் மொபைல் பிராசஸர் தயாரிக்கும் நிறுவனமான குவால்கம்முடன்(Qualcomm) கடந்த ஆண்டு கைகோத்தது இஸ்ரோ. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் இந்த நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் சிப்செட்களிலேயே இயங்குகின்றன.

 GPS
GPS

புதிய ஸ்னாப்டிராகன் 720G, 865, 765, 662, 460 சிப்செட்கள் அனைத்திலுமே NavIC சப்போர்ட் இருக்கும் என குவால்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இனி அறிமுகமாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் NavIC சப்போர்ட்டுடனே வெளிவரும். இதில் இந்த வருடத்தின் முக்கிய அறிமுகங்களான ரெட்மி நோட் 9 சீரிஸும் ரியல்மீ 6 சீரிஸும் அடங்கும். மற்ற முன்னணி சிப்செட் மற்றும் ஸ்மார்ட்போன் நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இந்தியாவில் இனி வெளிவரும் வாகனங்களிலும் NavIC ட்ராக்கர்களை மட்டுமே கட்டாயம் பயன்படுத்தவேண்டும். இதனால் இந்த வருடமே முழுவீச்சில் செயல்படத் தொடங்கிவிடும் NavIC.

இது சந்திரயான், மங்கல்யான் அளவுக்கு மாபெரும் தொழில்நுட்ப மைல்கல் இல்லைதான். ஆனால், இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் ‘லொகேஷன்’ சேவைக்கு இனி வேறு நாட்டின் தயவு வேண்டியதில்லை. ராணுவப் பயன்பாடு என்று இல்லாமல், இனி ஓலா, ஸ்விகி, கூகுள் மேப்ஸ் எனப் பொதுச் சேவைகள்கூட இனி நமது NavIC-ல் இயங்கப்போகின்றன. இந்த NavIC, உலக அரங்கில் தற்சார்பு நாடாகத் தன்னை நிலையாக நிறுத்திகொள்ள இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு முக்கிய ட்ரம்ப்கார்டு.