காஷ்மீரில் கெடுபிடியாகும் இணையச் சுதந்திரம் - `இன்டர்நெட் ஃபயர்வால்' என்றால் என்ன?
153 வலைதளங்கள் அடங்கிய ஃபயர்வால் பட்டியலை மத்திய அரசு ஜனவரி 14 அன்று வெளியிட்டது. இதன்படி குறிப்பிட்ட 153 வலைதளங்களை மட்டுமே இனி காஷ்மீர் மக்களால் அணுகமுடியும்.
பிரதமர் மோடி 2014ல் முதன்முறையாகப் பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகியிருந்த சூழலில், சீனாவுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்தார். அப்போது சீன அதிபர் லீ க்வாங்குடன் எடுத்துக்கொண்டு அவர் ட்விட்டரில் பதிவு செய்த செல்ஃபி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. காரணம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் சீனாவில் தடைசெய்யப்பட்டவை. சொல்லப்போனால் கூகுள் தேடல் பக்கமே அங்கே தடைசெய்யப்பட்டுள்ளது. `Baidu' என்கிற சர்ச் என்ஜின்தான் அங்கே செயல்பாட்டில் இருக்கிறது. அப்படியிருக்க மோடி எப்படி அங்கிருந்து செல்ஃபியைப் பதிவேற்றியிருக்க முடியும். நிச்சயம் ஏதேனும் ஒரு வி.பி.என் (VPN) வழியாகத்தான் பதிவேற்றியிருப்பார் என விவாதிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த இரண்டு வருடங்களிலேயே பெரும் ஜனநாயக நாடான இந்தியா அடுத்தடுத்து இன்டர்நெட் தடையைச் சந்தித்தது. 2017-ல் மட்டும் 8 மாதங்களுக்குள் 42 முறை இன்டர்நெட் ஷட்டவுன்கள் இந்தியாவில் நிகழ்ந்தன. குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியா முழுக்கப் போராட்டம் வெடித்த நிலையில் ``அசாமில் இருக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என நான் வாக்குறுதி அளிக்கிறேன்" எனப் பிரதமர் மோடி ட்வீட் செய்தார்.

ஆனால், அந்த ட்வீட்டைப் பார்ப்பதற்குதான் அசாம் மக்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தால் அங்கே இன்டர்நெட் ஷட்டவுனில் இருந்தது. இந்த ஆண்டில் மட்டும் 95 முறை இன்டர்நெட் ஷட்டவுன் நிகழ்ந்து, சைபர் கெடுபிடி நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இத்தனை கெடுபிடிகளின் நீட்சியாகத் தற்போது காஷ்மீரில் ஃபயர்வால் (Firewall) அறிமுகப்படுத்தியிருக்கிறது அரசு. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை முடக்க மத்திய அரசு முடிவெடுத்த நிலையில், இந்தியாவின் மற்ற எந்த மாநிலங்களிலிருந்தும் அது முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.
தொலைபேசி வசதி, இன்டர்நெட் சேவை உள்ளிட்டவை கடந்த ஆகஸ்ட் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அக்டோபரில் தரைவழித் தொலைபேசிச் சேவைகள் மீண்டும் கொடுக்கப்பட்ட நிலையில், ஜனவரியில் இன்டர்நெட் 2ஜி சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன. இதற்கு நடுவேதான் 153 வலைதளங்கள் அடங்கிய ஃபயர்வால் பட்டியலை மத்திய அரசு ஜனவரி 14 அன்று வெளியிட்டது. இதன்படி குறிப்பிட்ட 153 வலைதளங்களை மட்டுமே இனி காஷ்மீர் மக்களால் அணுகமுடியும்.
ஃபயர்வால் என்றால் என்ன?
ஃபயர்வால் என்பது உங்கள் கம்ப்யூட்டருக்கான அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை மட்டும் அனுமதித்து அங்கீகரிக்கப்படாத தொடர்புகளைத் தடுக்கும்/ கண்காணிக்கும் இன்டர்நெட் உள்கட்டமைப்பு. இதில் தனிப்பட்ட நெட்வொர்க்குகளுக்கான ஃபயர்வால், பயனரின் கணினிக்கான தனி ஃபயர்வால் என இரண்டு வகை உண்டு. நெட்வொர்க் சார்ந்த ஃபயர்வால்கள் குறிப்பிட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களின் கணினிக்குச் செல்லும் இணைய வலைதளங்களைக் கட்டுப்படுத்தும். கணினிக்கான ஃபயர்வால்கள் தனிநபரின் கணினியை வெளிநபர்கள் தங்களது கணினி வழியாக அணுகமுடியாத வகையில் பாதுகாக்கும்.
இதில் நெட்வொர்க் ஃபயர்வால் வகையறாவைத்தான் தற்போது அரசு காஷ்மீரில் அமல்படுத்தியிருக்கிறது. காஷ்மிர் அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை கடந்த ஜனவரி 14 அன்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. இதை பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் நெட்வொர்க் சேவை நிறுவனங்கள் காஷ்மீரில் இனி நடைமுறைப்படுத்தும்.

இதன்படி அங்கே நான்கு இ-மெயில் சேவை நிறுவனங்கள், 15 வங்கி இணையதளங்கள், 3 வேலைவாய்ப்பு இணையதளங்கள், 35 கல்வி சார்ந்த வலைதளங்கள் உள்ளிட்டவை செயல்பாட்டில் இருக்கும். ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளப் பயன்பாடுகள் தடைசெய்யப்படடிருக்கும். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்டவை அரசின் பட்டியலில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் முக்கிய மற்றும் முன்னணிச் செய்தி ஊடக வலைதளங்கள் எதுவுமே 153 வலைதளங்கள் அடங்கிய அந்தப் பட்டியலில் இல்லை.

Also Read
இணைய முடக்கம்... இந்தியா நம்பர் ஒன்!
டிசம்பர் 2019-ல் ரஷ்ய அரசு இதுபோன்று ரூநெட்(Runet) என்கிற சைபர் கட்டுப்பாட்டு விதிமுறையைக் கொண்டு வந்தது. ஈரான், சீனா, ரஷ்யாவின் வரிசையில் தற்போது இந்திய அரசும் இணையச் சுதந்திரக் கெடுபிடிகளை அதிகாரபூர்வமாகக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.