Published:Updated:

ராக்கெட்டுகள் மீதான காதல்! - வாசகரின் சுவாரஸ்யப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : ISRO website )

சிறுவயதில் ராக்கெட்டை டிவி-யில் பார்த்திருப்போம். கவுன்டவுன் சொன்னவுடன் ஆச்சர்யமாய் என்ன ஏதென்றே தெரியாமல் பார்த்த காலம்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்;

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்;

சந்திரமண்டலத்து இயல் கண்டு தெளிவோம்;

என்றார் பாரதி.

சிறுவயதில் ராக்கெட்டை டிவி-யில் பார்த்திருப்போம். கவுன்டவுன் சொன்னவுடன் ஆச்சர்யமாய் என்ன ஏதென்றே தெரியாமல் பார்த்த காலம். அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை எளிதாய் விளக்குவார்.. ``ஒருவன் நின்ற இடத்திலேயே சிறு கல்லை எடுத்து வீசினால் சிறிது தொலைவிலேயே விழுந்துவிடும். அதுவே ஒரு மாடியின் மீதிருந்து வீசினால் இன்னும் கொஞ்சம் தூரம் சென்று விழும். அதுவே பெரிய கல்லை பெரிய தூரதுக்கு வீச இன்னும் உயரம் செல்ல வேண்டும் என எளிமையாய் விளக்குவார். அதுதான் ராக்கெட்டின் பணியும் என்பார். அப்போதுதான் கொஞ்சம் எளிமையாய் புரிந்தது.

Representational Image
Representational Image

#ராக்கெட்டுகள் பலவிதம்

ராக்கெட் என்பது செயற்கைகோளை உயரே எடுத்துச் செல்வதற்கான ஒரு வாகனம்.1ஜி, 2ஜி எனும் தலைமுறை தொழில்நுட்பம் போல..

ஆரம்பத்தில் 25 கிலோவிலிருந்து 30 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்த எஸ் எல் வி எனப்படும் (satellite launch vehicle) முதலில் இந்தியா உருவாக்கியது. இதுதான் இந்தியாவுக்கு பிள்ளையார் சுழி. அதைத்தொடர்ந்து அதற்கு அடுத்ததாக ஏ எஸ் எல் வி (augumented satellite launch vehicle).ASLV இது பல முறை தோல்வி கண்டதால் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அதற்குபிறகு எடை அதிகம் கொண்ட செயற்கைக் கோளை பிற நாட்டினரிடம் சென்று செலுத்திக்கொண்டிருந்தோம். பிறகு நாமே நம்நாட்டில் முழுக்க முழுக்க தயாரிக்க ஆரம்பித்தோம்.

அத்துடன் இன்னும் கொஞ்சம் கூடுதல் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்ல பிஎஸ்எல்வி ராக்கெட்,(Polar satellite launch vehicle) சோதித்துப் பார்த்து வெற்றியடையவே இந்தியா அதை நன்கு பயன்படுத்திக் கொண்டது.PSLV மூலம் அனுப்பிய பல ஏவுதல்கள் வெற்றி அடைந்துள்ளது. இதன் மூலம் சந்திரயான் மற்றும் மங்கள்யான் ஆராய இந்த ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்ததாக தற்போது ஜிஎஸ்எல்வி (Geosynchronous satellite launch vehicle) எனும் ராட்சஸ ராக்கெட் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்எல்வி ராக்கெட்டை விட சக்தி வாய்ந்தது. அதாவது நான்கு முதல் பத்து டன் வரையிலான எடை கொண்ட செயற்கைக்கோள்களை செலுத்த இது உதவும்.

நேர்கொண்ட உயரப் பார்வை ராக்கெட்டுகள் எப்போதும் நேராகவும் விரைவாகவும் செல்லும் வகையில் நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் செல்வதாய் படித்திருப்போம். பூமியின் ஈர்ப்பு விசைக்கு எதிராக நேராகவும் விரைவாகவும் வளிமண்டலத்தை அடையும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பூமியிலிருந்து ராக்கெட்டின் விடுபடு திசைவேகம் 11.2 கி.மீ வேகத்தில் சென்று ஒவ்வொரு பொருளாய் பிரிய எடையிழந்து இறுதியில் செயற்கைக் கோள் வளிமண்டலத்தில் நிலைநிறுத்தப் பட்டு தன் பணியை செய்கிறது. ஒரு வேளை படுகிடையாய் விமானம் போல் செலுத்தினால் நேர விரயமாகும். எரிபொருள் அதிகம் தேவைப்படும்.

Representational Image
Representational Image

#கிரையோஜெனிக்

கிரையோ என்றால் கிரேக்க மொழியில் கடும் குளிர்நிலை என்று பொருள். ஹைட்ரஜன், ஆக்சிஜனுடன் சேர்ந்து எரியும்போது மிக அதிக அளவிலான வெப்பம் வெளிப்படும். இரண்டும் இணைந்து நீராவி ஆகும். வெப்பத்தில் இந்த நீராவி நன்கு விரிவடையும். இந்த நீராவியை திரவமாக்கவே குளிர்விக்கிறார்கள்.

ஆக்சிஜனை 183 டிகிரியும், ஹைட்ரஜனை 253 டிகிரி குளிர்வித்தால் திரவ வடிவைப் பெறும்.இவை திரவமாக இல்லாமல் வாயுவாக இருந்தால் பெரும் இடத்தை அடைத்துக்கொள்ளும். ஆதலால் திரவமாக மாற்றி குளிர வைக்கிறோம். இவைகளைக் கடும் குளிர்ந்த நிலையிலேயே வைத்திருக்கவில்லையெனில் வாயுவாக மாறிவிடும்.. இத்தகைய கிரையோஜெனிக் எரிபொருளை தனித்தனி டாங்கியில் நிரப்பி ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகிறது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை ஏவப் பயன்படுகிறது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 36,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் செல்லக் கூடியது. கனமான செயற்கைக்கோளை உயரமான இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் ராக்கெட்டை அதிக அழுத்தம் கொடுத்துச் செலுத்தும் இன்ஜின் வேண்டும். அதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.

#ஜி.எஸ்.எல்.வி F-10

அதிக எடை கொண்ட பொருள்களை, அதிக உயரத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் நம் ஜி.எஸ்.எல்.வி-க்கு உண்டு.

சமீபத்தில் சதீஷ் தவான் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட இந்த செயற்கைகோள் பூமியிலிருந்து புறப்பட்ட 18-வது நிமிடத்தில் 170 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டபாதையில் நிலைநிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜியோ இமேஜிங் என்று அழைக்கப்படும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோளாகும். 2020-ம் ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரேயோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட 8-வது ராக்கெட் என்ற பெருமையும் பெற்றது.

ஜி.எஸ்.எல்.வி F-10
ஜி.எஸ்.எல்.வி F-10

*இஸ்ரோ அனுப்பிய 76 ராக்கெட்டுகளில் இதுவே அதிக எடை கொண்டது. இதன் எடை 2,268 கிலோ

*இதன் உயரம் 49 மீட்டர் (160 அடி) ஏறக்குறைய 16 மாடி கட்டட உயரம்

*இஸ்ரோவின் சார்பில் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வரிசையில் 14-வது இது.

*பேரிடர் மேலாண்மைக் காலத்தில் முன்கூட்டியே புகைப்படம் அனுப்புவது, கனிமவளம் கண்டறிதல், காடுகளைத் துல்லியமாய் காணுதல் போன்ற பயனுள்ள அம்சங்கள் இதிலுள்ளன.

#ஏன் ஸ்ரீஹரி கோட்டா?

ஸ்ரீஹரி கோட்டா ஆந்திராவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்த தீவாகும். 1969-ம் ஆண்டு இவ்விடம் செயற்கைக்கோள் ஏவ தேர்வு செய்யப்பட்டு பயன்பட்டு வருகிறது. இவ்விடத்தில்தான் தெளிவான வானிலை, பூமி சுழற்சிக்கு ஏற்பவும், நிலநடுக்கோட்டுக்கு ஏற்பவும், 0.4km/s கூடுதல் திசை வேகத்துடனும் செல்வதாலும், பெரும்பாலும் கிழக்கு நோக்கி ராக்கெட் அனுப்பப்படுவதாலும் இவ்விடம் உபயோகமாய் உள்ளது.

ஸ்ரீஹரி கோட்டா
ஸ்ரீஹரி கோட்டா

ஏவுகணைகளை எதிர்ப்புக்குப் பயன்படுத்தாமல் ஆக்கபூர்வமான விஷயங்களைப் பயன்படுத்துவதை வரவேற்போம். பேரிடர்களை முன்கூட்டியே அறிவித்தால் அது உயிர்ச்சேதத்தையும் பொருள் சேதத்தையும் பெருமளவு தவிர்க்கலாம். இத்தனை கோடி ரூபாய் வானில் பறக்கிறதே என எதிர்மறையாய் எண்ணாமல், இந்தியர்களின் உழைப்பு இத்தனை கோடி மக்கள் பார்க்கவும், பிற நாட்டினர் வியக்கவும் வைத்துள்ளதே என பெருமிதம் கொள்வோம். வானை அளப்போம் என பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்கும் இஸ்ரோவைப் பாராட்டுவோம்

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு