Published:Updated:

இன்ஸ்டாகிராம் `பக்'கை கண்டுபிடித்தது எப்படி?- 20 லட்சம் வென்ற தமிழக இளைஞரின் சூப்பர் பதில்

மலையரசு

இன்ஸ்டாகிராம் செயலியில் மறந்துபோன பாஸ்வேர்டுகளைத் திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு கன்ஃபர்மேஷன் மெசேஜ் அனுப்பப்படும். அந்த அமைப்பில்தான் தொழில்நுட்பப் பிழை உள்ளது.

லக்ஷ்மண் முத்தையா
லக்ஷ்மண் முத்தையா

சமூக வலைதளங்கள் பலவும் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பது நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபரில்தான், ஃபேஸ்புக்கில் இருந்த ஒரு சிறிய கோளாறால் கிட்டத்தட்ட 5 கோடி மக்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாயின. இதேபோல், மற்ற சமூக தளங்களிலும் இருக்கும் குறைகளால் பயனர்களின் டேட்டாக்கள் வெளியே கசியலாம் என்ற அச்சமும் நிலவிவந்தது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் தளத்திலும் ஒரு கோளாறு இருந்ததை தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

``இன்ஸ்டாகிராம் செயலியில், மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு கன்ஃபர்மேஷன் மெசேஜ் அனுப்பப்படும். அந்த அமைப்பில்தான் தொழில்நுட்பப் பிழை உள்ளது. அதன்மூலம், பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யமுடியும்.'' இந்தத் தவற்றை இன்ஸ்டாகிராமுக்கு சுட்டிக்காட்டிய லக்ஷ்மண் முத்தையா, அந்நிறுவனத்தின் 20 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச்சென்றுள்ளார். இது தொடர்பாக அவரிடம் பேசினோம். ``சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை. திருவள்ளூரில் தான் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டேன். CSE மாணவரான எனக்கு, ஆரம்பம் முதலே தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால், கல்லூரிக் காலத்தில் இருந்தே இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வேன். எனக்கு இது புதிது ஒன்றும் கிடையாது. 2013-ல் இருந்தே இதுபோன்று சோஷியல் நெட்வொர்க் ஆப்களில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்துவருகிறேன்.

இதற்கு முன், 2015-ல் ஃபேஸ்புக்கில் உள்ள பக் (bug)கை கண்டுபிடித்தேன். அதற்கும் சன்மானம் வழங்கினர். இன்ஸ்டாகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்கு, பயனர்களின் மொபைல் எண்ணுக்கு 6 டிஜிட் எண்கள் அனுப்புவார்கள். இதைப் பதிவிட்டால்தான் பாஸ்வேர்டுகளை மாற்ற முடியும். இந்த 6 டிஜிட் எண்கள் மொத்தம் 10 லட்சம் வரை இருக்கும். இந்த 10 லட்சம் எண்களையும் பல்வேறு ஐபி (internet protocal)-ஐ பயன்படுத்தி எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இந்தக் குறைபாட்டைத்தான் நான் கண்டுபிடித்தேன். அதனை வீடியோவாகப் பதிவுசெய்து அவர்களுக்கு அனுப்பினேன். இப்படி ஒரு பக் இருப்பதைப் புரிந்துகொண்ட பின், இன்ஸ்டாகிராம் எனக்கு பரிசு அறிவித்தது. எதிர்காலத்திலும் இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்வேன்" என்றார்.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கிய பிறகு, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 2010-ல் தொடங்கப்பட்டபோது, ஒரு மில்லியன் பயனாளர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், 2019 மே மாத கணக்குப்படி ஒரு பில்லியன் பயனீட்டாளர்கள் இருக்கின்றனர். தினமும் 500 மில்லியன் பயனாளர்கள் அதனைப் பயன்படுத்திவருகின்றனர். இதனால் புதுப்புது வசதிகளை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்திவருகிறது. ஆனால், சில பாதுகாப்பு குறைபாடுகளும் இருப்பதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் புகார் கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது.