`கொரோனா பீர் வைரஸ்' - பீருக்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்? - ஒரு திடுக் அலசல் #GoogleTrends

கொரோனா வைரஸின் பெயரை மாற்ற பீர் நிறுவனம் முயற்சி செய்ததா..?
திரும்பும் திசையெல்லாம் கொரோனா வைரஸ் பற்றிய பேச்சுகளும் செய்திகளும்தான் நிரம்பியிருக்கின்றன. சீனாவின் வுகான் மாகாணத்தில் முதலில் மையம் கொண்ட வைரஸின் தாக்கத்தை இன்று உலக நாடுகள் அனைத்துமே உணர்கின்றன. இந்த நிலையில் கூகுளில் தேடப்பட்ட விஷயம் ஒன்று வைரலாகி வருகிறது. அது என்ன தேடல்? அந்தத் தேடலுக்குக் கிடைத்த பதில் என்ன? அந்த தேடலின் விளைவாக எழுந்த சர்வே என்ன? அந்த சர்வேக்குக்கும் ஒரு பீர் நிறுவனத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன... இப்படி பல விஷயங்களை விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம்.
பீரையும் வைரஸையும் ஒன்றிணைத்து கூகுளில் தேடக் காரணம் என்ன?
பீர் மற்றும் வைன் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான Constellation Brands என்ற நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் கொரோனா பீர் நிறுவனம். இது மெக்ஸிகோ நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பீர்களில் முதன்மையானது கொரோனா பீர். உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த கொரோனா பீர் இந்தியாவில் உள்ள எலைட் மதுபானக் கடைகளில் மட்டும் கிடைக்கிறது.
கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி வரும் காரணத்தால், அமெரிக்கர்கள் கொரோனா பீரோடு கொரோனா வைரஸைச் சேர்த்து வைத்து கூகுளிலில் தேடினர். இந்தத் தேடல் நாளுக்கு நாள் அதிகரித்தது. பல நாடுகளிலும் இந்தத் தேடல்தான் கூகுளில் இடம்பெற்றது. இந்தத் தேடலின் விளைவாக, அமெரிக்காவைச் சேர்ந்த 5W பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. சர்வேயில் அந்த நிறுவனம் அமெரிக்கர்களிடம் முன் வைத்த கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பின்னர் பார்க்கலாம். அதற்கு முன்பாக எந்தெந்த நாடுகளில் இந்தத் தேடல் இடம்பெற்றுள்ளது என்பதைப் பார்த்து விடலாம்.
இந்தியாவும் தேடியதா?
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் பரவத் தொடங்கியபோதே பலரும் கொரோனா என்ற வார்த்தையைக் கொண்டு கூகுளில் தேடினர். சீனாவிலிருந்து இத்தாலி, அமெரிக்கா என உலக நாடுகளில் பரவத் தொடங்கிய பின், `கொரோனா பீர் வைரஸ்', `பீர் கொரோனா வைரஸ்', `கொரோனா & வைரஸ்' என்றெல்லாம் தேடி கூகுளை டார்ச்சர் செய்துள்ளனர் அமெரிக்கர்கள். இவற்றுள் `கொரோனா பீர் வைரஸ்' என்பதுதான் அதிகம் தேடப்பட்டுள்ளது.

கடந்த 7 நாள்களில், `கொரோனா பீர் வைரஸ்' என்ற தேடல் அதிகம் இடம்பெற்ற நாடுகளுள் முறையே அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கனடா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இந்தத் தேடலை, இந்தியர்களும் விட்டு வைக்கவில்லை. அதன் விளைவாக இந்தப் பட்டியலில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம் 11.
இந்தியாவில், அதிக மதுக்கடைகள் இருக்கும் மாநிலமான கோவாதான் `கொரோனா பீர் வைரஸ்' என்ற தேடலை அதிகம் மேற்கொண்டுள்ளது. அதற்கடுத்த இடங்களில் தெலங்கானா, உத்தர்காண்ட் ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகள்!
இந்தத் தேடல்களை மூலதனமாகக் கொண்டு அமெரிக்கர்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது 5W பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனம். இந்தக் கருத்துக்கணிப்பில் 38 சதவிகித அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கொரோனா பீர் குடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளனர். ஏன் கொரோனா பீரை தவிர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 16 சதவிகிதம் பேர், "கொரோனா வைரஸுக்கும் இந்த பீருக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்ற தெளிவு எங்களிடம் இல்லை என்பதால் கொரோனா பீரைத் தவிர்க்கிறோம்" என்று கூறியுள்ளனர். மேலும், 14 சதவிகித அமெரிக்கர்கள் பொது இடங்களில் கொரோனா வாங்குவதைத் தவிர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதற்குக் காரணமாக 5W பப்ளிக் ரிலேஷன்ஸின் அறிக்கை குறிப்பிடுவது...
கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில், ஒரு பாரில் சென்று, `எனக்கு கொரோனா கொடுங்கள்?' என்றோ, `எனக்கு கொரோனா வேண்டும்' என்றோ கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதால்தான் பொது இடங்களில் கொரோனாவைத் தவிர்க்கிறோம்.5W பப்ளிக் ரிலேஷன்ஸின் அறிக்கை

"கொரோனா வைரஸுக்கும் கொரோனா பீருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற போதிலும், இரண்டுக்கும் ஒரே பெயர் இருப்பதே பிரச்னைதான்" என்று பிராண்டிங்கில் பெயருக்கான முக்கியத்துவம் குறித்துப் பேசியிருக்கிறார் 5W பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனர் ரான் டோரோசியன்.
கொரோனா வைரஸ் காரணமாக கொரோனா பீர் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!Ronn Torossian, 5W PR CEO
இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளை 5W பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டவுடன் அமெரிக்காவின் பல செய்தி நிறுவனங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டன. பலரும் #38%ofAmericans என்ற ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் இது தொடர்பான கருத்துகளைப் பதிவிட்டனர். சிலர் இது தொடர்பான மீம்களையும் வெளியிட்டனர். ஒரு சிலர், `பீருக்கும் வைரஸுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் முட்டாள்கள். எனவே, அமெரிக்கர்களில் 38 சதவிகிதம் பேர் முட்டாள்கள்தாம்' என்று ட்விட்டரில் தங்களின் கருத்துகளைக் கிண்டலாகப் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையில் கொரோனா வைரஸின் பெயரை மாற்றுவதற்காக கொரோனா பீர் நிறுவனம் 70 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை செலவு செய்யத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், கொரோனா பீர் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் பெயர்களை வைரஸுக்கு வைத்தால், மேலும் 30 கோடி ரூபாய் தருவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தியும் பரவத் தொடங்கியது. பின்னர் இது வெறும் வதந்திதான் என்பது தெரிய வந்தது.
பீர் நிறுவனத்தின் அறிக்கை!
இது அனைத்தையும் கவனித்துக்கொண்டு பொறுமையாக இருந்த கொரோனா பீரின் தாய் நிறுவனமான கன்ஸ்டலேஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ பில் நியூலேண்ட்ஸ், இறுதியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 5W பப்ளிக் ரிலேஷனின் கருத்துக்கணிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் அந்த அறிக்கையில், "கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்துகொள்கிறோம். மேலும், கடந்த சில நாள்களாக வைரஸோடு கொரோனா பீரை ஒப்பிட்டு பத்திரிகைகளிலும் சோஷியல் மீடியாவிலும் தவறான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதனால் எங்கள் வியாபாரத்துக்கு எந்தவித பாதிப்புமில்லை" என்று கூறியுள்ளார் நியூலேண்ட்ஸ். பின் வருமாறு சொல்லப்பட்டுள்ள டேட்டாவையும் இந்த அறிக்கையில் இணைத்திருந்தார் நியூலேண்ட்ஸ்.
சொல்லப்போனால், கடந்த 4 வாரங்களில், அமெரிக்காவில் கொரோனா பீரின் விற்பனை 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது!பில் நியூலேண்ட்ஸ், Constellation Brands CEO
பீருக்கும் வைரஸுக்குமான இந்தக் குழப்பத்தால் கொரோனா விற்பனையில் எந்தச் சரிவும் இல்லை என்று அந்நிறுவனத்தின் சி.இ.ஒ தெளிவுபடுத்தியிருந்தாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள பார்களில் விற்பனை குறைந்துள்ளதால் கொரோனா பீருடன் இலவசங்கள் வழங்கப்படுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பாரின் ஃபேஸ்புக் பக்கத்தில், கொரோனா வைரஸ் தீம் கொண்டு இந்த வாரம் பார்ட்டி நடத்தவுள்ளோம் என்று கூறி கொரோனா பீர் பாட்டிலுக்கு மாஸ்க் அணிந்த புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தனர். பல நாடுகளிலும் மாஸ்க் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பீர் வாங்குபவர்களுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்போவதாகவும் அந்த பார் விளம்பரம் செய்திருந்தது. நியூசிலாந்தில் உள்ள சில பார்களில் பீட்சா இலவசமாக வழங்கப்படுவதாகவும் சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி வருகின்றன.

`கொரோனா பீர் வைரஸ்' என்ற தேடல் பரபரப்பைக் கிளப்பியிருந்தாலும், கொரோனா பீருக்கும் கொரோனா வைரஸுக்கும் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறெந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் கூகுள் நமக்குத் தரும் விடை!