Published:Updated:

மணிக்கு 1200 கி.மீ வேகம், 20 நிமிடத்தில் சென்னை டு பெங்களூரு... சாத்தியப்படுமா ஹைப்பர்லூப்?!

ஹைப்பர்லூப்
News
ஹைப்பர்லூப்

2013-ல் இந்த யோசனை தனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. யார்வேண்டுமானாலும் என் உதவி இல்லாமல் இதை மெருகேற்றி நிஜ உலகிற்குக் கொண்டுவரலாம் எனத் தனது ஆய்வை பொதுவெளியில் 'ஓபன் சோர்ஸ்' ஆக்கினார் எலான் மஸ்க்.

உலக அளவில் வளர்ந்த நாடாகக் கருதப்படவேண்டும் என்றால் அதனிடம் அதிநவீன போக்குவரத்து கட்டமைப்புகள் இருக்க வேண்டும் எனச் சொல்வார்கள். இதனால்தான் அதிவேக புல்லட் ரயில், மெட்ரோ ரயில், அதிக உள்ளூர் விமான நிலையங்கள் இருக்கும் நாடுகளை வளர்ந்த நாடுகளாக எண்ணத்தோன்றும். இதுபோன்ற அதிநவீன போக்குவரத்து வசதிகள் வளர்ந்த நாடுகளின் அந்தஸ்தை உயர்த்தி நிறுத்தும் வேற்று பிம்பங்கள்தானே, அதனால் உண்மையில் என்ன பயன் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். உண்மையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் தழைக்க அந்நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பு வலுவானதாக இருப்பது மிகவும் அவசியமானது.
ஜப்பான் புல்லட் ரயில்
ஜப்பான் புல்லட் ரயில்
Wikimedia Commons

இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். இரு நகரங்களுக்கிடையே நல்ல சாலை ஒன்று அமைக்கப்பட்டாலே இரு நகரங்களுக்கிடையே சரக்குகள் கைமாற்றப்படும். ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கு வேலைக்குச் செல்பவர்கள் அதிகரிப்பார்கள். பொருளாதாரம் தானாக வளரும். இந்தப் போக்குவரத்து வேகமெடுக்க வேகமெடுக்கப் பொருளாதாரமும் வேகமெடுத்து வளரும். இதனால்தான் பெருநகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் போன்ற போக்குவரத்து கட்டமைப்புகள் ஒரு நாடு வளர்ந்திருக்கிறதா இல்லையா என்பதைக் காட்டும் அளவுகோல்களாக பார்க்கப்படுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இப்படியான அதிவேக போக்குவரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல ஒரு புதிய தொழில்நுட்பம் பரபரவென தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதுதான் ஹைப்பர்லூப்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய தொழில்நுட்ப சிந்தனையாளர்களுள் ஒருவராக அறியப்படும் எலான் மஸ்க்கின் மற்றுமொரு கனவு தொழில்நுட்பமே இந்த ஹைப்பர்லூப். மஸ்க்கின் மற்ற யோசனைகளைப் போல இதுவும் கேட்பதற்கு சாத்தியமற்றதாக தோன்றும். தரைவழி பயணத்தில் வேகத்துக்குத் தடையாக இருப்பது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று உராய்வு (Friction), மற்றொன்று காற்றுத்தடை (Air Resistance). இதை இரண்டையும் நீக்குவதன் மூலம் இதுவரை நாம் நினைத்துப் பார்த்திடாத வேகத்தைத் தரைவழி பயணங்களிலேயே எட்டமுடியும் என்பதே மஸ்க்கின் அந்த யோசனை.

இதில் உராய்வை நீக்க ஏற்கெனவே 'காந்த மிதத்தல்' (magnetic levitation) என்ற தொழில்நுட்பம் சில நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. இதை 'மேக்லெவ்' (Maglev) என அழைப்பர். இதைப் பயன்படுத்தும் அதிவேக ரயில்கள் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் செயல்படுகின்றன. இத்துடன் காற்றுத்தடையையும் எப்படி நீக்கலாம் என ஒரு மாதிரியை வடிவமைத்துக் காட்டினார் எலான் மஸ்க். ஒரு பெரிய குழாய் ஒன்று அமைத்து அதிலிருந்து முடிந்தளவு காற்று வெளியேற்றப்பட வேண்டும். இதனால் அந்தக் குழாயினுள் காற்றின் அழுத்தம் மொத்தமாகக் குறைந்துவிடும். கிட்டத்தட்ட விண்வெளியில் இருப்பது போல வெற்றிடமே (Vaccum) மிஞ்சும். இதனுள் 'மேக்லெவ்' தொழில்நுட்பம் மூலம் சிறிய பயணியர் கூடங்களை (Traveler Pod) செலுத்தும்போது விமானத்திற்கு நிகரான வேகத்தை இதில் பெறலாம் என்றார் அவர். இதை 'Fifth mode of Transport' என்றும் அழைத்தார்.

Elon Musk
Elon Musk
James Duncan Davidson
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலிருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்று இவர் சொன்னதும் அனைவருமே வியந்துபோய் பார்த்தனர். அடுத்த சில நொடிகளிலேயே இது மஸ்க்கின் மற்றுமொரு சாத்தியமற்ற கனவு எனக் கடந்தும் போனார்கள்.

2013-ல் இந்த யோசனை தனக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. யார்வேண்டுமானாலும் என் உதவி இல்லாமல் இதை மெருகேற்றி நிஜ உலகிற்குக் கொண்டுவரலாம் எனத் தனது ஆய்வை பொதுவெளியில் 'ஓபன் சோர்ஸ்' ஆக்கினார் எலான் மஸ்க். அதன்பின் ஸ்டார்ட்-அப்கள், மாணவக் குழுக்களும் மஸ்க்கின் கனவை தங்களது கனவாக மாற்றி முன்னேற்றங்கள் காணத்தொடங்கின. 2015-க்கு பிறகு சில பெரிய நிறுவனங்களின் முதலீடுகளும் ஹைப்பர்லூப் ஆராய்ச்சிகளுக்குக் கிடைக்கத்தொடங்கின. பல நிறுவனங்களும் உலகின் முதல் ஹைப்பர்லூப்பை கொண்டுவருவதில் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முன்னணியில் இருப்பது 'விர்ஜின் ஹைப்பர்லூப்' என்னும் நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2014-ல் 'ஹைப்பர்லூப் டெக்னாலஜிஸ்' என்ற சிறிய நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இதை 2016-ல் இங்கிலாந்தின் விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் வாங்கினார். அப்படித்தான் இது 'விர்ஜின் ஹைப்பர்லூப்' என்றானது. உலகின் முதல் ஹைப்பர்லூப்பை வடிவமைக்கும் போட்டியில் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம் என்பதை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப். மனித பயணிகளுடனான முதல் சோதனையோட்டத்தை நிகழ்த்தியிருக்கிறது இந்த நிறுவனம். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் பாலைவனம் ஒன்றில் சோதனைத்தளம் அமைத்து சில வருடங்களாக சோதனைகளை மேற்கொண்டுவருகிறது விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம்.

400-க்கும் அதிகமான சோதனைகளுக்குப் பிறகு மனிதர்களை வைத்து சோதனை செய்துபார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் நிறுவனர்களுள் ஒருவரும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ஜோஷ் கெய்கலும், பயணியர் அனுபவத்தை மேற்பார்வையிடும் தலைவர் சாரா லூச்சியனும் XP-2 என்னும் ஒரு குட்டி ஹைப்பர்லூப் பயணியர் கூடத்தில் (இதை Pegasus Pod என அழைக்கின்றனர்) உலகின் முதல் ஹைப்பர்லூப் பயணத்தை கடந்த மாதம் மேற்கொண்டனர். இது ஹைப்பர்லூப் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Hyperloop Test
Hyperloop Test

ஆனால், இது சின்ன ட்ரிப்தான். சோதனை தடத்தின் நீளமே 500 மீட்டர்கள்தான். 3.3 மீட்டர் விட்டம் கொண்ட குழாயில் இந்த சோதனை நடத்தப்பட்டது. மணிக்கு 1,223 கிலோமீட்டர் வேகத்தை ஹைப்பர்லூப்பில் எட்டமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை மட்டுமே இந்த சோதனையில் தொட்டிருக்கிறார்கள். அடுத்தடுத்து சோதனைகளை விரிவுபடுத்தினால் இன்னும் அசாத்திய முடிவுகளைக் காட்டமுடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப் குழு. "இதற்கு முன்பு யாரும் செய்யாததைச் சாதித்துவிட்டோம்" என்றிருக்கிறார் அந்நிறுவனத்தின் CEO ஜே வால்டர்.

இவர்கள் சென்றது பெரிய பயணியர் கூடத்தின் குட்டி வெர்ஷன்தான். பெரிய பயணியர் கூடம் 15-18 அடி நீளமாக இருக்கும் என்றும் மொத்தம் 23 பேர் வரை அதில் செல்ல முடியும் என்றும் எவ்வளவு வேகத்தில் பயணித்தாலும் உராய்வு இருக்காதென்பதால் உள்ளே பயணிப்பவர்கள் எந்த சலனத்தையும் உணர மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். வேகமெடுக்கும் முதல் சில விநாடிகள் மட்டும் விமான டேக் ஆஃப் போல இருக்குமாம்.

இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் பயன்கள் ஏராளம். விர்ஜின் ஹைப்பர்லூப்பின் கணிப்பின்படி மும்பையிலிருந்து டெல்லிக்கு வெறும் 80 நிமிடங்களில் பயணிக்கலாம். சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடங்களே ஆகும். விமான பயணத்திற்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசங்கள் பல. அதில் முக்கியமானது இதற்கு விமான நிலையங்கள் போன்ற பெரிய இடம் தேவைப்படாது. ஊரின் நடுவில் ஏற்கெனவே இருக்கும் முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகில் கூட ஹைப்பர்லூப் நிலையம் ஒன்றை அமைக்கலாம். இதனால் சென்னை டு பெங்களூரு என்றால் விமானங்களைப் போல 'பெங்களூருக்கு மிக அருகில்' என ஊருக்கு வெளியில் இறக்கிவிடமாட்டார்கள். செக்-இன் நடைமுறையும் விமானப்பயணம் போல நேரமெடுப்பதாக இருக்காது. தினமும் வேலைக்கு வந்துவிட்டுப் போகும் அளவுக்கு எளிமையாகவே பயணம் இருக்கும் என்கிறார்கள். விலையும் விமானங்களை விட நிச்சயம் குறைவாகத்தான் இருக்குமாம். மொத்தமாக மின்சாரத்தில் இயங்குவதால் சுற்றுச்சுழல் மாசும் தவிர்க்கப்படும். விமானம் போலக் காத்திருக்கவும் வேண்டாம். நிமிடத்துக்கு ஒரு பயணியர் கூடம் கூட இயக்கமுடியும் என்கிறார்கள்.

உடனே கனவு காணத் தொடங்கிவிடாதீர்கள். ஹைப்பர்லூப் நடைமுறைக்கு வருவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் பணம்தான். அதிவேக ரயில் பாதை அமைப்பதை விட ஹைப்பர்லூப் அமைப்பதற்குச் செலவு அதிகம். இதுவரை கசிந்திருக்கும் தகவல்களின்படி ஒரு மைல் தூரத்துக்கே பல நூறு கோடி ரூபாய் செலவு வைக்கும் ஹைப்பர்லூப் எனத் தெரிகிறது. ஹைப்பர்லூப் வேகத்தில் ஒரு 90 டிகிரி கட் அடிக்க சுமார் 10 கிலோமீட்டர் வளைவு தேவைப்படுமாம். இப்படியான தகவல்களையெல்லாம் பார்த்தால் 'இது சாத்தியப்படுமா' என்ற கேள்வி எழாமல் இல்லை. இது அனைத்துக்கும் முன் முறையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தி முடிக்கப்படவேண்டும். பல நூறு கிலோமீட்டர் தூரத்துக்குத் தொடர்ந்து வெற்றிடத்தை (vaccum) குழாயினுள் சராசரியாக வைத்திருப்பது சவாலாகத்தான் இருக்கப்போகிறது. மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் போது ஆபத்தும் இன்னும் அதிகமாகவே இருக்கும். நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் வந்தால் என்ன நடக்கும், காற்றை வெளியேற்றாமல் விட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கின்றன. அனைத்துக்கும் முறையான பதில்கள் இருந்தால் மட்டுமே ஹைப்பர்லூப் சாத்தியப்படும்.

ஆச்சர்யப்படும் விதமாக ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கு முதலில் பச்சைக்கொடி காட்டியிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகின் முதல் ஹைப்பர்லூப் இந்தியாவில் அமைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. புல்லட் ரயிலே இங்குச் சாத்தியப்படவில்லை என்றாலும் 'நடிச்சா ஸ்ட்ரெய்ட்டா ஹீரோதான்' என மும்பை-புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் அமைக்க விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்துடன் 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டது மகாராஷ்டிரா அரசு.

மூன்றரை மணிநேர பயணத்தை இது 25 நிமிடங்களாகக் குறைக்கும். இதே போல பெங்களூரு விமான நிலையத்தையும் புறநகரையும் 10 நிமிடங்களில் இணைக்கும் திட்டம் ஒன்றுக்கும் ஒப்புதல் வாங்கியிருக்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப். இந்தியாவில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டும் விதமாக இரண்டாவது சோதனையோட்டத்தில் இந்தியாவை சேர்ந்த தானே மஞ்சரேக்கர் என்ற தங்களது பொறியாளரை ஹைப்பர்லூப்பில் பயணிக்க வைத்தது விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனம்.

Hyperloop
Hyperloop
Kyle Cothern | Virgin Hyperloop

இது இல்லாமல் சென்னை - பெங்களூருவை இணைக்கிறோம் என ஹைப்பர்லூப் டிரான்ஸ்போர்ட்டேஷன் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் அரசுடன் சில வருடங்களாகப் பேசி வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடந்த ஆட்சி மாற்றத்தால் அங்கு ஹைப்பர்லூப் திட்டத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. "முதலில் வேறு எங்காவது செய்துகாட்டுங்கள்" எனக் கேட்கிறது தற்போதைய உத்தவ் தாக்கரே அரசு. மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம் தொட்டதும் தங்களுக்கு பெரும் பின்னடைவு எனத் தெரிவித்திருக்கிறது விர்ஜின் ஹைப்பர்லூப். நிலங்களைக் கையகப்படுத்தும் வேலைகள் இதனால் தடைப்பட்டுள்ளதாம். இப்போது முதல் சோதனை வெற்றி பெற்றிருப்பதால் இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை நிதி ஆயோக் அமைத்திருக்கிறது. எது எப்படியோ, ஹைப்பர்லூப் மக்கள் பயன்பாட்டுக்கு வர குறைந்தது 2030 ஆகிவிடும்.

அதனால் இப்போதைக்கு தீபாவளி, பொங்கல் பயணங்களுக்கு இந்தியன் ரயில்வேஸ் மட்டுமே துணை!