Published:Updated:

மோடியின் சோஷியல் மீடியா முயற்சி... அன்றே செய்துகாட்டிய ஸ்வீடன்... சுவாரஸ்யப் பின்னணி!

@Sweden கணக்கு
@Sweden கணக்கு

கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு செயல்படத் துவங்கிய சில காலங்களிலே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் அக்கவுன்ட்டை நாட்டிலுள்ள பெண்களுக்கு அளிக்கவுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுமாதிரியான சம்பவங்கள் புதிதல்ல. ஸ்வீடன் நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வு ஒன்று ஏற்கெனவே நடந்திருக்கிறது.

அங்கு 2011-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டுவரை மக்கள் பயன்பாட்டுக்காக பொது ட்விட்டர் கணக்குகள் திறக்கப்பட்டன. அந்தத் திட்டத்தின்படி @Sweden என்ற அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கைக் பயன்படுத்த ஸ்வீடன் குடியுரிமை பெற்ற யாராவது ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு அவர்கள்தான் ஸ்வீடன் கணக்கின் அட்மின். கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்குச் செயல்படத் தொடங்கிய சில நாள்களிலேயே நல்லவரவேற்பு கிடைத்தது.

@Sweden
@Sweden

ஆனால், இந்தக் கணக்கில் கருத்துகளைப் பதிவேற்றும்முன் சில விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். ஸ்வீடன் நாட்டுச் சட்டத்துக்குப் புறம்பான எதையும் பதிவிடக் கூடாது. வணிக விளம்பரங்களுக்காகக் கணக்கைப் பயன்படுத்தக் கூடாது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் எதையும் பதிவிடக் கூடாது, பொதுத்தளத்தில் பகிரக்கூடிய அளவுக்கு மொழிநடையைக் கருத்தில் கொண்டு பதிவிட வேண்டும், இனம், பாலினம் அல்லது தன்பால் ஈர்ப்பு போன்ற உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக எந்தவொரு கருத்துகளையும் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என மிக எளிமையான விதிகளே கொடுக்கப்பட்டிருந்தன. இந்த பதிவேற்றங்களைக் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் விதிகளுக்குப் புறம்பான ட்வீட்களை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற கருத்துகள் அனைத்தையும் பதிவிடுவர்.

இதனால் தொடக்கக் காலங்களில் வெறும் ஒரு லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டிருந்த இந்த கணக்கானது விரைவிலேயே உலக அளவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு நன்கு பிரபலமானது. இந்தக் கணக்கு பயன்பாட்டிலிருந்த காலங்களில் பல நகைச்சுவையான சம்பவங்கள் அரங்கேறின. இது மட்டுமல்லாமல் அந்நாட்டின் அரசாங்க செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களும் இந்த ட்வீட்களில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 15 வயது சிறுவர்கள் முதல் 81 வயது முதியவர் வரை அனைவரும் வயது வரம்பின்றி தங்களது கருத்துகளை இக்கணக்கின் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர். இக்கணக்கு பயன்பாட்டிலிருந்த 7 ஆண்டுகளில், 356 நபர்களால் மொத்தம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ட்வீட்கள் @sweden பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தக் கணக்கின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டது.

ஸ்வீடன் ட்விட்டர் கணக்கு!
ஸ்வீடன் ட்விட்டர் கணக்கு!

ஸ்வீடன் நாட்டினரைத் தவிர இக்கணக்கை பிரிட்டன், அமெரிக்கா, பின்லாந்து, உக்ரைன் போன்ற நாட்டில் வசிப்பவர்களும் பின்தொடர்வதால் சில நேரங்களில் இந்தக் கையாளுதல் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் இதை நிறுத்திவிட்டு ஸ்வீடன் அரசு தனது ஜனநாயகத் தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் நிலைநாட்ட விரிவான காண்ணோட்டம் கொண்ட தளங்களை உருவாக்க பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நீக்கப்பட்ட கணக்கிலிருந்த பதிவுகளை ஆன்லைன் ஆர்கைவ்களின் மூலமாக அணுகிக் கொள்ளலாம் என்று ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.

@sweden போன்ற ட்விட்டர் கணக்குகளின் துவக்கமானது ஸ்வீடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டு மக்களைத் தங்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பீடு செய்வதற்கு உந்துதலை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு, ஸ்வீடனின் @sweden உருவானதன் தொடர்ச்சியாக @Ukraine, @Peopleoffinlad போன்ற ட்விட்டர் கணக்குகளை அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடங்கினர். இதற்கு முன்பு ஜனநாயகத் தன்மையின் வெளிப்பாடாக 1766-ம் ஆண்டு தணிக்கை முறையை எதிர்த்து சட்டம் ஒன்றை நிறைவேற்றியது ஸ்வீடன். அச்சட்டத்தின் 250-ம் ஆண்டு நினைவாக ஸ்வீடன் குடிமக்களுக்கு தங்கள் நாட்டு நிலை குறித்து எழும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ள நேரடி தொலைத்தொடர்பு வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சேவையை எந்த நாட்டைச் சேர்ந்தவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படி ட்விட்டர் கணக்கு விஷயத்தில் மட்டுமன்றி, பல்வேறு முயற்சிகளை ஒரு ஜனநாயக நாடாக தொடர்ந்து எடுத்துவருகிறது ஸ்வீடன். தற்போது மோடி அரசின் இந்த முயற்சியும், ஜனநாயகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக ஒரு தரப்பினர் கூறினாலும் டெல்லி ஷஹீன்பாக் தொடங்கி, சென்னை வண்ணாரப்பேட்டை வரை நாடு முழுவதும் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்களைப் பெண்களும் முன்னெடுத்துள்ளனர். அவற்றைக் கண்டுகொள்ளாமல், இதுபோன்ற விளம்பர அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், `இதுபோன்ற போராட்டங்களை மறைக்கப்பார்க்கிறதா அரசு?' என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு