Published:Updated:

மிஷன் NATGRID... பாதுகாப்பா... அச்சுறுத்தலா?

அரசு மக்களைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு வழியா NATGRID?

எப்படி அமெரிக்காவிற்குச் செப்டம்பர் 11, 2001 மறக்கவே முடியாத தினமோ, அதேபோல இந்தியாவுக்கு 26, நவம்பர், 2008. நாட்டின் பொருளாதாரத் தலைநகரான மும்பையை நான்கு நாட்கள் திணறடித்த இந்த தீவிரவாதத் தாக்குதல், நம் நாட்டின் பாதுகாப்பில் எந்தளவுக்குக் கோளாறும் குளறுபடிகளும் உள்ளன என்பதை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு அடுத்து, இந்தியாவில் நடந்த மிகப்பெரும் தீவிரவாதத் தாக்குதல் இதுதான். இதையடுத்து பயங்கரவாதத்தைத் தடுக்கும் முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தியது இந்திய அரசு. நிர்வாக ரீதியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட என்.ஐ.ஏ., மறுசீரமைப்பு செய்யப்பட்ட என்.எஸ்.ஜி., பயங்கரவாதிகளின் தகவல்களை ஒருங்கிணைப்பதற்கான டேட்டாபேஸ், பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அத்தனையையும் விசாரிக்க ஒருங்கிணைந்த ஓர் அமைப்பு என அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்தன.

NATGRID
NATGRID

பயங்கரவாதத்தை இந்தியா கையாளும் விதத்தையே மொத்தமாக மாற்றியமைத்தது இந்த 26/11 சம்பவம். இந்த நடவடிக்கைகளில் சில விஷயங்கள் உடனே செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்தன. சில விஷயங்கள் அப்படியே முடங்கிப்போயின. அப்படி ஓரங்கட்டப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் அந்த பயங்கரவாதிகளின் தகவல்கள் அடங்கிய டேட்டாபேஸ். அதன்பெயர்தான் NATGRID (National Intelligence Grid). 2008-ல் திட்டமிடப்பட்ட NATGRID, இன்று 2019 வரையிலும் இன்னும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஏன் இந்த தாமதம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, இந்த NATGRID-டால் அரசுக்கு என்ன நன்மை எனப் பார்த்துவிடுவோம்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியப் புள்ளியாகச் செயல்பட்டவர் டேவிட் ஹெட்லி. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்குப் பல மாதங்கள் முன்பே மும்பை வந்து அதற்கான தகவல்களைச் சேகரித்தது, தாக்குதல் நடத்துவதற்கான இடங்களைத் தேர்வுசெய்தது எனத் தாக்குதலுக்கான அடிப்படைத் தகவல்கள் அத்தனையையும் ஹெட்லிதான் சேகரித்தார். இந்தப் பணிகளுக்காக 2006-லிருந்து 2008 வரைக்கும் பலமுறை எந்தவிதப் பிரச்னைகளுமின்றி இந்தியா வந்து சென்றிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து விசா வாங்கியது, இங்கே வந்து தகவல் சேகரித்தது என எந்த இடத்திலும் அரசின் கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்கவில்லை. இத்தனைக்கும் ஏற்கெனவே குற்றப்பின்னணி உடையவர்தான் ஹெட்லி. மேலும் அதிர்ச்சியான இன்னொரு சம்பவம் 2008 தாக்குதலுக்குப் பிறகான விசாரணையில் ஹெட்லியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் முன்புவரைக்கும் பல்வேறு உளவு அமைப்புகளுக்கு அவர் பெயர்கூடத் தெரியாது. இந்த எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணமாக அப்போது கண்டறியப்பட்டது, இந்தியாவின் விசாரணை அமைப்புகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே. காவல்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, உளவுத்துறை என ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு கோணத்தில் தகவல்கள் சேகரிக்கின்றன. ஒரு குற்றவாளியின் பின்புலத்தைப் புரிந்துகொள்ள இந்த அத்தனை தகவல்களுமே அவசியம். ஆனால், அவை இப்படி பல்வேறு இடங்களில் சிதறிக்கிடப்பதால் பயங்கரவாதச் செயல்கள் போன்ற பெரிய குற்றங்களைச் சரியான நேரத்தில் தடுக்கமுடியாமல் போகின்றன எனக் காரணம் சொன்னது உள்துறை அமைச்சகம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். எனவே குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் அத்தனை தகவல்களையும் ஓரிடத்தில் தொகுத்து, அவற்றை அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பயன்படுத்தும் விதத்தை மாற்றவேண்டும் என்பதற்காக உருவான யோசனைதான் NATGRID.

NATGRID
NATGRID

ஆரம்பத்தில் இதன் இலக்கு என்பது ஒரு தனிநபரின் 21 வகையான தகவல்களை ஒருங்கிணைத்து உளவுத்துறை, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ., உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு அதனைப் பயன்படுத்தும் அதிகாரத்தைத் தருவது என்பதுதான். உதாரணமாக சி.பி.ஐ ஒரு நபர் குறித்து விசாரிக்க வேண்டுமென்றால் அந்த நபரின் வங்கி தகவல்கள், விமான பயண விவரங்கள், தொலைபேசி விவரங்கள், வருமான வரித்துறை விவரங்கள் உள்ளிட்ட 21 விவரங்களை உடனடியாகப் பெறமுடியும். இதுதவிர அவரின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் ஏதேனும் அரசு துறைகளிடம் இருப்பின் அவையும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும். மொத்தத்தில் விசாரணைக்காக உங்களின் தகவல்கள் ஏதேனும் அமைப்புக்குத் தேவைப்படும் பட்சத்தில் ஒரே நிமிடத்தில் அத்தனையும் அவர்களுக்கு கிடைத்துவிடும். அவ்வளவுதான். இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 2011-ல் 3,400 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், பின்னர் ப.சிதம்பரம் உள்துறையிலிருந்து நிதித்துறைக்கு செல்லவே, இந்தத் திட்டம் சுணக்கம் கண்டது. அதற்கடுத்து ஆட்சியும் மாற, திட்டம் பெரியளவில் சோபிக்கவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. அதற்குப் பல்வேறு காரணங்களைச் சொன்னது அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலாவது, இப்படியொரு திட்டத்தைச் செயல்படுத்துவதில் இருக்கும் சட்டச் சிக்கல்கள். ஒவ்வொரு தனிநபரின் தகவல்களையும் இப்படி ஓரிடத்தில் வைத்து கையாள்வது என்பது நேரடியாகத் தனிநபரின் பிரைவசியில் தலையிடும் விஷயம். எனவே இதற்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு தேவை. மேலும், இவ்வளவு பெரிய டேட்டாபேஸை மிகுந்த பாதுகாப்பு வசதிகளோடு உருவாக்கவேண்டியது மிக மிக அவசியம். அதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள், உள்கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். அடுத்தது, எந்தவொரு விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் இந்தத் தகவல்களைப் பயன்படுத்தலாம் என்பது தேசத்தின் பாதுகாப்பு கருதி எடுக்கப்படும் நடவடிக்கை என்றாலும், இது தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதைத் தடுப்பதற்கான வழிகளையும் கண்டறியவேண்டும். இப்படி இத்தனை சவால்கள் அரசின் முன் இருந்தன. இதில் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதற்கான உள்கட்டமைப்பு பணிகள் மட்டும் மெதுவாக நடந்துவந்தன. பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. இந்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த ஆண்டு இறுதிக்குள் இதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதில் தீவிரமாக இருக்கிறார் என்ற தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தமுறை சொன்னபடி நடந்தால் இந்த ஆண்டு டிசம்பரிலேயே NATGRID ஆக்டிவ் ஆகிவிடும்.

NATGRID
NATGRID

உண்மையில் NATGRID-ல் அரசுக்கு இருக்கும் சிக்கல்களை விடவும், குடிமகன்களுக்கே அதிக சிக்கல்கள் இருக்கின்றன. அதுவும் பிரைவசி மற்றும் டேட்டா பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வரும் காலத்தில் இப்படியொரு பிரமாண்ட டேட்டாபேஸை கொண்டுவருவது என்பது இன்னும் அச்சுறுத்தலுக்கே வழிவகுக்கும். மேலும், ஏற்கெனவே சொன்னபடி இந்தத் தகவல்கள் அனைத்தும் தவறான முறையில் பயன்படுத்தப்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவில் இதுவரைக்கும் Data Protection Law என ஒன்று இல்லவே இல்லை என்பதையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

இதுதவிர இன்னொரு சந்தேகம் NATGRID-ன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது. இப்போது வரைக்கும் NATGRID குறித்துச் சொல்லப்படுவது என்னவென்றால், NATGRID என்பது தனி டேட்டாபேஸ் கிடையாது. மாறாக வங்கி, வருமான வரித்துறை உள்ளிட்ட 21 அமைப்புகளின் டேட்டாபேஸை ஒருங்கிணைக்கும் ஓர் இடம் மட்டுமே. எனவே அதிலிருந்து தேவையான தகவல்கள் மட்டுமே எடுக்கப்படும். அதாவது குற்றவாளிகள் குறித்துத் தேடுவதற்கான கூகுள் மட்டுமே இது என்கிறார் இதன் முன்னாள் சி.இ.ஓ ரகுராமன். இதில் நம்முடைய தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் யாரிடம் முறையிடுவது, வங்கிகள் உள்ளிட்ட தனியார் அமைப்புகள் நம்முடைய தகவல்களை நம் அனுமதியின்றி இப்படி பிறரிடம் பகிர்ந்துகொள்ளச் சட்டம் இடம்தருகிறதா, இந்த NATGRID-ல் ஆதாரின் பங்கு என்ன, இந்த 10 விசாரணை அமைப்புகள் மட்டுமன்றி எதிர்காலத்தில் இன்னும் நிறைய அமைப்புகள் NATGRID-ல் பங்குபெறும் பட்சத்தில் அதன் பாதுகாப்பு என்னாகும் என எத்தனையோ கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றன.

IMEI மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா அரசு?

இவற்றிற்கெல்லாம் விடை தெரியாமல் வெறுமனே அரசின் அறிவிப்பின் உதவியோடு மட்டும் இந்த NATGRID இயங்கினால், 'அரசு மக்களைக் கண்காணிப்பதற்கான மற்றுமொரு வழிதான் NATGRID' என்ற வாதம் வலுப்பெறவே செய்யும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு