Published:Updated:

ஊழியர்கள் பணிநீக்கம்... இந்தியாவில் நிரந்தமாகக் கடையை மூடுகிறதா டிக் டாக்?!

இந்தியாவில் நிரந்தமாகக் கடையை மூடும் டிக் டாக்...!
இந்தியாவில் நிரந்தமாகக் கடையை மூடும் டிக் டாக்...!

தேசியப் பாதுகாப்பு கருதி பல சீன செயலிகளைத் தடைசெய்தது இந்திய அரசு. அதில் மக்களிடையே மிகப்பிரபலமாக இருந்த குட்டி வீடியோக்கள் பகிரும் சேவையான டிக் டாக்கும் தடைசெய்யப்பட்டது.

கடந்த ஆண்டு இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த ராணுவ மோதல் என்பது நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலுக்குப் பின் இந்தியச் சீன உறவு என்பது ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு கருதிப் பல சீன செயலிகளைத் தடைசெய்தது இந்திய அரசு. அதில் பிரபல குட்டி வீடியோக்கள் பகிரும் சேவையான டிக் டாக்கும் தடைசெய்யப்பட்டது.

எப்படியும் இந்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஓகே சொன்னால் இந்த தடை நீங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தும் அது நடப்பதாக இல்லை. தடையை நீடிக்கவே செய்திருக்கிறது அரசு. சைபர் பாதுகாப்பு தொடர்பாக இந்நிறுவனங்கள் அளித்த விளக்கங்கள் திருப்தி அளிக்கவில்லை என்பதால் இச்செயலிகள் மீதான தடை தொடருவதாக மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்தது.

டிக் டாக்
டிக் டாக்

இதனால் நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேற முடிவுசெய்திருக்கிறது 'பைட் டான்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான டிக் டாக். இதன் விளைவாக இந்தியாவில் பணிபுரிந்து வரும் டிக் டாக் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையில், "மீண்டும் எப்போது இந்தியாவில் டிக் டாக்கை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து உறுதியாகக் கூற இயலாத இந்தச் சூழலில் இந்தியாவில் எங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. எந்த விதமான செயல்பாடும் இல்லாத போதும் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆதரவு அளித்து வந்துள்ளோம். மிக அவசியத் தேவை உள்ள ஊழியர்களை மட்டுமே தக்க வைக்க முடிவெடுத்துள்ளோம். இந்தியாவில் இருக்கும் கோடிக் கணக்கான பயனர்களுக்கு, கலைஞர்களுக்கு, கதைசொல்லிகளுக்கு, கல்வியாளர்களுக்கு மீண்டும் எங்களின் சேவையை வழங்கும் நாளை எதிர்நோக்கியுள்ளோம்" என பைட் டான்ஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

`டிக் டாக்-க்கு மாற்றாக வந்த இந்திய செயலி' -எப்படி இருக்கிறது மித்ரோன்?

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்படுவதற்கு முன்பு 20 கோடிக்கும் அதிகமான பயனர்கள் அதைப் பயன்படுத்தி வந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு