மீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா? #DoubtofCommonMan

இந்தியர்கள் பலரும் கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் ஆப்பிற்கு 1 ஸ்டார் ரேட்டிங் அளித்துவருகின்றனர். இதனால் 4.5 ஸ்டார்களிலிருந்து 1.3 ஸ்டார்களுக்கு இறங்கியிருக்கிறது டிக்டாக்கின் ரேட்டிங். என்ன பிரச்னை?
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் ரஹ்மான் ஷா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். ``தொடர்ந்து டிக்டாக்கை தடைசெய்ய வேண்டும் என்ற குரல் எழுந்துகொண்டே இருக்கிறதே, டிக்டாக்கில் என்னதான் பிரச்னை, அது பாதுகாப்பானதுதானா?" என்பதே அவரது கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலை இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

பிரச்னைக்குள் செல்வதற்கு முன் கொஞ்சம் வரலாறு பார்ப்போமா...! 2014-ம் ஆண்டு ஜெர்மனியில் டப்ஸ்மாஷ் என்னும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆப் பயன்படுத்தி ஒரு பாட்டிற்கோ, சினிமா வசனத்திற்கோ நம்மால் நடித்து வீடியோ பதிவிட முடியும். இதை எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் பொதுவாக வீடியோவுக்கு ஆடியோ டப்பிங் செய்வர். இதில் ஆடியோவிற்கு வீடியோவை டப்பிங் செய்யலாம். இந்த டப்ஸ்மாஷ் அப்போது செம பிரபலம். ஸ்மார்ட்போன் வைத்திருந்த பெரும்பாலான இந்தியர்கள் அப்போது ஒரு முறையாவது இந்த ஆப்பைப் பயன்படுத்தியிருப்பர். இதனால் 2016-ல் இந்தியாவில் இதுபோன்ற ஆப்களுக்கு மிகப்பெரிய சந்தை உருவானது. இதே நேரத்தில் (2014) சீனாவின் `மியூசிக்கலி' (musical.ly) ஆப்பும் பிரபலமாகத் தொடங்கியது. இதுவும் டப்ஸ்மாஷ் போன்ற செயல்பாட்டைக் கொண்டதுதான். இது 2017-ல் 20 கோடிக்கும் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்பட்டுவந்தது. இதன் அசுர வேக வளர்ச்சியைக் கண்டு நவம்பர் 2017-ல் சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் (Bytedance) நிறுவனம் இதை விலைக்கு வாங்கியது. இது சீனாவின் முன்னணி டெக் நிறுவனம். இதற்குப் பின் ஆகஸ்டு 2, 2018 அன்று இது `டிக்டாக்' என்று பெயர் மாற்றப்பட்டது. இதில் புதிய அம்சமாக நமது திறமைகளை வெளிப்படுத்த நாமே ஒரு நிமிடத்திற்கான வீடியோக்களை உருவாக்கலாம். அதற்கேற்ற இசையையும், ஒலிகளையும் சேர்க்கலாம். இது பட்டிதொட்டி எங்கும் வைரலானது. கடந்த ஏப்ரல் மாதம் வரை டிக்டாக் 2 பில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் தொடர்ந்து டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்துகொண்டேதான் இருக்கின்றன. சமீபத்தில் மீண்டும் இது வலுக்கத்தொடங்கியிருக்கிறது. இந்தியர்கள் பலரும் கூகுள் பிளே ஸ்டோரில் டிக்டாக் ஆப்பிற்கு 1 ஸ்டார் ரேட்டிங் அளித்துவருகின்றனர். இதனால் 4.5 ஸ்டார்களிலிருந்து 1.3 ஸ்டார்களுக்கு இறங்கியிருக்கிறது டிக்டாக்கின் ரேட்டிங். ஏற்கெனவே ஆபாச சர்ச்சையின் காரணமாக இந்தியாவில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் டிக்டாக் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அந்தத் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் டிக்டாக் மீதான தடை நீக்கப்பட்டது.

தற்போது டிக்டாக் மீண்டும் இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற குரல் இந்திய யூடியூப் பிரபலம் கர்ரி மினாட்டியின் வீடியோ ஒன்றால் வலுக்கத்தொடங்கியிருக்கிறது. இவரது ``Youtube vs tiktok : The end" என்ற வீடியோ சமீபத்தில் வைரலானது. இதில் டிக்டாக் பயனாளர்கள் பலரும் யூடியூப் வீடியோக்களில் இருக்கும் கன்டென்ட்டை திருட்டுத் தனமாக தங்களது வீடியோக்களில் பயன்படுத்தி வருவதாகக் குற்றம்சாட்டினார் கர்ரி மினாட்டி. இதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. யூடியூப் இந்த வீடியோவை நீக்கினாலும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் என இது ஏற்படுத்திய தாக்கம் மட்டும் இன்னும் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

சில டிக்டாக் பிரபலங்கள் அதிக ஃபாலோவர்களைப் பெறுவதற்காக பெண்கள் மீதான வன்முறை, பெண் வெறுப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அப்படிதான் கடந்த வாரம் ஆசிட் வீச்சை தூண்டும் வீடியோ ஒன்றை டிக்டாக் பிரபலம் பதிவிட அது பெரிய சர்ச்சையாக வெடித்தது. தேசியப் பெண்கள் ஆணையம் வரை பிரச்னை சென்றது. ஆசிட் வீச்சிலிருந்து மீண்டு வந்தவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு பிரச்னைகளும் ஒரே நேரத்தில் நடக்க #BanTikTok இந்தியளவில் ட்ரெண்டானது. ப்ளே ஸ்டோரில் ரேட்டிங் குறைந்ததும் இதனால்தான்.

இந்த மாதிரியான வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக டிக்டாக் சொன்னாலும், அதெல்லாம் பெயரளவிலேயே இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தீவிரவாதத்தைத் தூண்டும் வீடியோக்கள், மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வீடியோக்கள், சாதியப் பெருமை பேசும் வீடியோக்கள், மிருக வதை வீடியோக்கள் எனப் பல சமூக விரோத வீடியோக்கள் டிக்டாக்கில் பதிவாகின்றன, அதிக அளவில் பகிரப்படுகின்றன.
ஏற்கெனவே இந்தோனேசியா மற்றும் வங்கதேசத்தில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு முக்கிய காரணமாக ஆபாச கன்டென்ட் மற்றும் சமூகத்திற்கெதிரான வீடியோக்கள்தான் எனக் கூறுகின்றன அந்த நாடுகள். இதோடு அமெரிக்க ராணுவமும் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாகக் கூறி டிக்டாக் செயலியின் பயன்பாட்டிற்கு இராணுவத்தில் தடை விதித்தது.

தொழில்நுட்பப் பிரச்னைகள்:
டிக்டாக் செயலியில் தொழில்நுட்பப் பிரச்னைகளும் நிறைந்தே காணப்படுகின்றன. இதில் முக்கியமாகத் தகவல் திருட்டு மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. டிக்டாக் செயலி பயனாளர்களின் தகவல்களைச் சீனாவிடம் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், இதை டிக்டாக் நிறுவனம் மறுத்தே வருகிறது. மேலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் பயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் தகவல் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவருகிறது. இதில் குழந்தைகளுக்கான பயன்பாடானது அவர்களின் வயதுக்கேற்ப பாதுகாப்பாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பிறந்த தேதியை மாற்றிக் கொடுத்தால் குழந்தைகளும், பெரியவர்களைப் போலவே அனைத்து வகையான வீடியோக்களையும் பார்க்க முடியும். இது சமூகத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
டிக்டாக்கில் அவ்வப்போது புதுப் புது சேலஞ்ச்கள் ட்ரெண்டாவது வழக்கம். அது இசை, நடனம், நடிப்பு என்ற அளவில் இருப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால், அவ்வப்போது தாறுமாறான சேலஞ்ச்களும் டிக்டாக்கில் வைரலாகி விடுகின்றன. டிக்டாக்கில் தங்களது வீடியோக்கள் வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்கின்றனர். சில நேரங்களில் அது அவர்களை பெரும் ஆபத்துகளுக்கு உள்ளாக்குகிறது. இதனால் டிக்டாக் நிறுவனம் எந்த மாதிரியான வீடியோக்கள் பதிவாகிறது என்பதைப் பார்த்துச் சரியாக முறைப்படுத்த வேண்டும். இதற்கு முன் 16 வயதிற்குப்பட்டவர்கள் டிக்டாக்கில் பப்ளிக் அக்கௌன்ட் வைத்திருந்தால் அவர்களுக்கு யார் வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்பலாம் என்னும் சூழல் இருந்தது. சமீபத்தில்தான் இது மாற்றியமைக்கப்பட்டது.

டிக்டாக் விளக்கம்!
சமீபத்திய ஆசிட் வீச்சு சர்ச்சை குறித்து விளக்கம் கொடுக்கும் விதத்தில் டிக்டாக் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ``டிக்டாக்கை அனைவருக்கும் பாதுகாப்பான தளமாக வைத்திருப்பதில் முழுக் கவனம் செலுத்திவருகிறோம். `Term of Service and Community Guidelines'-ல் தெளிவாக எந்த மாதிரியான விஷயங்களெல்லாம் டிக்டாக்கில் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
``சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அந்த வீடியோ எங்கள் வரம்புகளை மீறுவதாகத்தான் இருக்கிறது. அதனால் அதை நீக்கியதோடு அந்தக் கணக்கையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். இதுகுறித்து சட்ட ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்றும் கூறியுள்ளது டிக்டாக். ஆனால் சமூக வலைதளங்களில் இதுபற்றிய பேச்சு எழாமல் இருந்திருந்தால் டிக்டாக் இதைச் செய்யத் தவறியிருக்கும் என்பதே பலரது வாதமாக இருக்கிறது. சீன நிறுவனம் என்பதால் பயனர்களின் தகவல்களை சீன அரசிடம் பகிர்கிறதா என்ற கேள்விக்குப் பல நாள்களாகவே மறுப்பு தெரிவித்துதான் வருகிறது. முன்பு கூறியது போல இந்தியப் பயனர்களின் தகவல்கள் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இருக்கும் தகவல் மையங்களில்தான் சேமிக்கப்படுவதாக கூறுகிறது டிக் டாக்.
மொத்தமாக டிக்டாக் பயன்படுத்தப் பாதுகாப்பானதா என்ற கேள்விக்குப் பதில் உங்கள் பயன்பாட்டைப் பொறுத்துத்தான் இருக்கிறது. குழந்தைகள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தும் போது பெற்றோர்களின் பார்வையில் எப்போதும் இருக்க வேண்டியது கட்டாயம். இதனால் தேவையற்ற வீடியோக்களை அவர்கள் பார்ப்பதை நம்மால் தடுக்க இயலும். மேலும் தேவையில்லாத வீடியோக்களை பொதுவெளியில் பதிவிட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமலும் இருக்க முடியும். பெரியவர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்தும் போது சமூகப் பொறுப்போடு பயன்படுத்த வேண்டியது அவசியம். டிக்டாக்கும் தற்போது முக்கிய சமூக வலைதளமாக உருப்பெற்றுள்ளது. இதன் பொறுப்பை உணர்ந்து கொண்டு பயனாளர்கள் சரியான வீடியோக்களைப் பதிவிட வேண்டும். டிக்டாக் நிறுவனமும் சமூகத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வீடியோக்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் துரிதம் காட்டவேண்டும்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
