Published:Updated:

ஃபேஸ்புக் - ஜியோ கூட்டணி... இந்தியாவில் 'சூப்பர் ஆப்' ஆகுமா வாட்ஸ்அப்?! #LongRead

முகேஷ் அம்பானி - மார்க் சக்கர்பெர்க்
முகேஷ் அம்பானி - மார்க் சக்கர்பெர்க்

ஃபேஸ்புக் - ஜியோ ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு வாரத்தில் களத்தில் இறங்கிவிட்டன இரு நிறுவனங்களும். இந்தியாவில் வாட்ஸ்அப்பின் எதிர்காலம் எப்படியானதாக இருக்கப்போகிறது?

கடந்த வாரம் கொரோனாவைத் தாண்டியும் இந்தியாவில் முக்கிய பேசுபொருளானது பிரபல சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக். அதுவும் சர்ச்சை எதுவும் இல்லாமல் பாசிட்டிவ்வாக! குறைந்த காலத்தில் இந்திய டெலிகாம் சந்தையின் ராஜாவான ரிலையன்ஸ் ஜியோவில் ஃபேஸ்புக் செய்த முதலீடுதான் அதற்குக் காரணம். ஜியோவின் 9.99% பங்குகளை சுமார் 43,574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஃபேஸ்புக். 2014-ல் வாட்ஸ்அப்பை வாங்கியதற்குப் பிறகு ஃபேஸ்புக் செய்திருக்கும் மிக முக்கிய முதலீடு இதுதான். இதன் பின்னணியில் என்னென்ன திட்டங்கள் இருக்கலாம் என அனைவரும் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், களத்தில் இறங்கி திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டன இரு நிறுவனங்களும்.

முதல்கட்டமாக ஜியோ மார்ட் (Jio Mart) சேவையுடன், ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான சாட்டிங் சேவையான வாட்ஸ்அப் இணைக்கப்பட்டிருக்கிறது. 'ஜியோ மார்ட்டா, அப்படின்னு ஒரு சேவை இருக்கா?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். ஃப்ளிப்கார்ட், அமேசான் போல இது ஜியோவின் ஆன்லைன் வர்த்தக சேவை. இது பெரிய விற்பனையாளர்கள் அல்லாமல் உங்கள் அருகில் இருக்கும் சிறு குறு கடைகளை வாடிக்கையாளர்களுடன் இணைக்கும். ஏற்கெனவே பல நிறுவனங்கள் (Big Basket, Grofers) இப்படியான சேவையை வழங்கிவர முயற்சி செய்துவந்தாலும் எதுவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், ஜியோ போன்ற ஒரு பெரும் நிறுவனம் இதைக் கையில் எடுக்கும்போது அது சாத்தியமாகும்.

Jio Mart
Jio Mart

தற்போது மஹாராஷ்டிராவின் நவி-மும்பை, புனே, கல்யாண் ஆகிய நகரங்களில் மட்டும் செயல்படும் ஜியோ மார்ட் விரைவில் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் வந்துசேரும். விரிவடையும் இந்தத் திட்டத்திற்குத் தற்காலிகமாக கொரோனா தடையாக இருந்து வருகிறது. பிரச்னைகள் தீர்ந்ததும் டெலிகாம் சந்தையில் சாதித்ததை ஆன்லைன் வர்த்தகத்திலும் சாதிக்கும் ஜியோ எனக் கணிக்கின்றனர் நிபுணர்கள்.

ஜியோவுடன் கைகோக்கும் ஃபேஸ்புக்! - யாருக்கு லாபம்?

இந்த சேவையுடன்தான் தற்போது வாட்ஸ்அப் இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் எளிமையான நடைமுறைதான். ஜியோ மார்ட் சேவைக்கென ஒரு எண் (+91 88500 08000) கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மொபைலில் சேவ் செய்ய வேண்டும். பின்பு அந்த எண்ணுக்கு 'Hi' என வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்யவேண்டும். அதற்கு ரிப்ளையாக 'Auto-generated' மெசேஜ் ஒன்று வரும். அதில் ஒரு லிங்க் இருக்கும், அதை கிளிக் செய்து தேவையானதை செலக்ட் செய்து ஆர்டர் செய்துகொள்ளலாம். இந்த லிங்க் 30 நிமிடங்கள் மட்டுமே வேலை செய்யும்.

Jio Mart + Whatsapp
Jio Mart + Whatsapp

மேலே கூறியது போல, ஜியோவுக்கு முன்பு ஃபேஸ்புக் செய்திருந்த மிகப்பெரிய முதலீடு, வாட்ஸ்அப்பை வாங்கியதுதான். இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.2 லட்சம் கோடிக்கு 2014-ல் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியபோது பல கேள்விகள் எழுந்தன. 'ஒரு இலவச ஆப்பில் ஏன் இவ்வளவு பெரிய முதலீட்டை ஃபேஸ்புக் செய்கிறது?' என்பதுதான் அதில் முக்கியமானதாக இருந்தது. இது இன்றும் கேட்கக்கூடிய கேள்வியாகவே இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றதல்ல வாட்ஸ்அப். அவை இரண்டிலும் விளம்பரங்களிலிருந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஆனால், வாட்ஸ்அப்பில்?

இந்தியாவில் மட்டும் வாட்ஸ்அப்பிற்கு சுமார் 40 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் இருக்கின்றனர்.

ஆனால் இவர்கள் யாரிடமும் வாட்ஸ்அப் சேவை பயன்படுத்துவதற்கும் பணம் வசூலிக்கப்படுவதில்லை, உள்ளே விளம்பரங்களும் கிடையாது. கிட்டத்தட்ட வருமானமே தராத ஒரு முதலீடாகத்தான் இதுவரை ஃபேஸ்புக்கிற்கு வாட்ஸ்அப் இருக்கிறது.

ஆனால், ஃபேஸ்புக் இதை அப்படிப் பார்க்கவில்லை. பெருமளவில் மக்கள் பயன்படுத்தும் சேவை எப்படியும் ஒரு நாள் பலன் கொடுக்கும் என நம்பியது. அந்த நாள்கள் வந்துவிட்டதாக தற்போது கருதுகிறது. அதற்கான அடித்தளம்தான் இந்த ஃபேஸ்புக்-ஜியோ கூட்டணி. இத்தனை கோடி பயனாளர்களுடனும், ஜியோவின் பங்களிப்புடனும் இந்தியாவின் 'சூப்பர் ஆப்' ஆக உருவெடுக்க இப்போது பத்துப் பொருத்தமும் வாட்ஸ்அப்பிடம் இருக்கிறது.

`சூப்பர் ஆப்'
அப்படின்னா என்ன?

ஒரு நாளில் ஒரு சராசரி பயனாளருக்குத் தேவையான எல்லா சேவைகளையுமே ஒரே இடத்தில் தரும் ஆப்பை 'சூப்பர் ஆப்' எனலாம். சீனாவில் 'We Chat' அப்படியான ஒரு சேவைதான். காலையில் எழுந்து செய்திகள் வாசிப்பதில் ஆரம்பித்து அலுவலகத்துக்குச் செல்ல டாக்ஸி புக் செய்வது, பெட்டிக் கடைகளிலிருந்து 5 ஸ்டார் ஹோட்டல் வரை பணம் செலுத்துவது என, சீனாவில் ஒரு நாளை போக்க 'We Chat' மட்டும் போதும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், அமேசான், ஓலா, ஸ்விக்கி வழங்கும் சேவைகளையெல்லாம் ஒரே ஆப்பில் தருகிறது 'We Chat'.

'We Chat'
'We Chat'

WeChat-ம் வாட்ஸ்அப்பை போன்ற ஒரு சாட்டிங் சேவையாகத்தான் ஆரம்பித்தது. பின்பு ஒவ்வொரு வசதியாகச் சேர்த்து இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. இந்தப் பாதையை எடுப்பதே ஃபேஸ்புக் CEO மார்க் சக்கர்பெர்க்கின் திட்டமாக இருக்கிறது. கடந்த வருடம் ஃபேஸ்புக்கையே கொஞ்சம் கொஞ்சமாக பிரைவேட் மெசேஜிங் சேவையாக மாற்றப்போவதாகக் கூறியிருந்தார். இது ஏன் எனப் புரிந்துகொள்ள, தற்போது டெக் நிறுவனங்கள் எப்படி வேலைசெய்கின்றன எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஃபேஸ்புக் மட்டுமில்லை கூகுள், ட்விட்டர் போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே விளம்பரங்களை நம்பித்தான் இருக்கின்றன. விளம்பரங்கள்தான் அவற்றின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. அவர்கள் பழக்கப்பட்ட பிசினஸ் மாடல் அதுதான். ஆனால் WeChat விளம்பரங்கள் இல்லாமலும் நல்ல வருமானம் ஈட்டமுடியும் என புது பிசினஸ் மாடலை உலகின் முன் எடுத்துவைத்திருக்கிறது.

ஒரு நாளில் ஒரு பயனாளருக்கு WeChat அதிகபட்சமாகவே 2-3 விளம்பரங்கள்தான் காட்டுகிறது.

இதற்கு பதிலாக வாடிக்கையாளர்களையும் தொழில்களையும் எளிதாக இணைப்பதற்காகத் தொழில் நிறுவனங்களிடமிருந்து பணம் வசூலிக்கிறது WeChat. அதிக வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையை வழங்கமுடிவதால் தொழில் நிறுவனங்களும் ஹேப்பி, எளிதாக அனைத்தையும் ஒரே ஆப்பில் செய்யமுடிவதால் பயனாளரும் ஹேப்பி. இருவரையும் நல்ல முறையில் இணைத்ததற்கான கூலி மட்டும் போதும், விளம்பரங்கள் போடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதுதான் ஃபேஸ்புக்கின் கனவும். முடிந்தளவு அதனிடம் இருக்கும் அனைத்து சேவைகளையும் இந்த மாடலுக்குள் எடுத்துவர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது ஃபேஸ்புக். இதைச் செய்ய வாட்ஸ்அப்பை விடச் சிறந்த சேவை இருக்க முடியாது, இந்தியாவை விடச் சிறந்த இடம் இருக்கமுடியாது.

WeChat Pay
WeChat Pay
Wikimedia Commons

ஒரு சூப்பர் ஆப்பிற்கு முக்கியமானது எது? பணப் பரிவர்த்தனை சேவை. சீனாவில் 'WeChat' மேலே குறிப்பிட்ட அனைத்தையும் செய்ய முக்கிய காரணம் அதனிடம் 'WeChat Pay' என்ற சொந்த பேமன்ட் வசதி இருந்ததுதான். இது இல்லை என்றால் பல சேவைகளை உள்ளே எடுத்துவந்திருக்கவே முடியாது. ஆன்லைனைப் போல் ஆஃப்லைனிலும் தனது பேமன்ட் முறையைப் பிரபலப்படுத்த WeChat பலருக்கும் அத்தியாவசிய ஆப்பானது. சீனாவின் கடைக்கோடி கடையில் கூட 'WeChat Pay' QR கோடை பார்க்கலாம்.

இந்த முயற்சியில் ஃபேஸ்புக் இறங்காமல் இல்லை. 2018-லேயே இந்தியாவில் 'வாட்ஸ்அப் பே' என்னும் பேமன்ட் சேவையை அறிமுகம் செய்யவிருந்தது. டேட்டா எப்படி பாதுகாக்கப்படும் என்பதில் குழப்பங்கள் இருந்ததால் பல காலமாக NPCI (National Payments Corporation of India) அதற்கு ஒப்புதல் வழங்காமலேயே இருந்தது. இறுதியாகக் குழப்பங்கள் தீர்க்கப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதனால் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் பே சேவை முழுவதுமாகக் கிடைக்கத்தொடங்கும் என நம்பலாம். ஆனாலும் இதில் வாட்ஸ்அப்பின் என்ட்ரி என்பது தாமதமானதுதான். ஏற்கெனவே பேடிஎம், கூகுள் பே, போன் பே எனப் பல சேவைகள் மக்களைச் சென்றுசேர்ந்துவிட்டன.

Paytm
Paytm

சொல்லப்போனால் இன்றைய நிலையை மட்டும் வைத்துப் பார்த்தால் 'சூப்பர் ஆப்' ஸ்டேட்டஸ்க்கு வாட்ஸ்அப்பை விடவும் பேடிஎம்தான் அருகில் இருக்கிறது. வெறும் ரீசார்ஜ் செய்யும் ஆப்பாக இருந்த பேடிஎம் இன்று கிட்டத்தட்ட அனைத்து சேவைகளையும் தருகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு Paytm Mall, திரைப்பட டிக்கெட் புக்கிங், பஸ் புக்கிங், ட்ரெயின் புக்கிங் என பேடிஎம்மில் அத்தனை அம்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கை 20 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும் பேடிஎம்மை விட வாட்ஸ்அப்பிற்குதான் இந்த 'சூப்பர் ஆப்' ஸ்டேட்டஸ் முதலில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

காரணம் ரொம்ப சிம்பிள்தான். என்னதான் பேடிஎம்மில் அத்தனை வசதிகள் இருந்தாலும் ஒரு சில நிமிடங்களைத் தாண்டி யாரும் அதில் நேரம் செலவழிக்கப்போவதில்லை. வாட்ஸ்அப் அப்படியில்லை. நண்பர்களுடன் பேசுவது தொடங்கி அலுவலக வேலை வரை அனைத்துமே அதில்தான். ஒரு நாளில் வாட்ஸ்அப்பில் மட்டும் சில மணிநேரங்கள் செலவழிக்கிறோம். அதில் இப்படியான கூடுதல் வசதிகள் வரும்போது அது ஏற்படுத்தும் தாக்கமே வேறு.

சூப்பர் ஆப்களில் ஒரு முக்கிய பிரச்னையும் உண்டு. அது பர்சனல் டேட்டா பாதுகாப்புதான். இதைக் காரணம் காட்டிதான் பல மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற ஆப்களுக்கு முழு ஆதரவு தராமல் இருக்கின்றன. இதுபோன்ற ஆப்கள் ஒருவரைப் பற்றி அளவுக்கு அதிகமான தகவல்களைச் சேமிக்கும். ஹேக் செய்யப்பட்டால் அனைத்துத் தகவல்களும் கசிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வளவு தகவல்கள் இருப்பதால் ஒருவரின் விருப்பு வெறுப்பு குறித்து மிகவும் துல்லியமாகச் சொல்லமுடியும் இந்த ஆப்களால்.

Personal Data
Personal Data
Wikimedia Commons
தொடர்ந்து பிரைவசி சார்ந்த சர்ச்சைகளில் சிக்கிவரும் ஃபேஸ்புக் இதைப் பாதுகாப்பாக வைத்திருக்குமா?

முன்பு குறிப்பிட்டது போல 'வாட்ஸ்அப் பே'வுக்கான ஒப்புதலைப் பெற பெரிதும் போராடியது ஃபேஸ்புக். இதற்கு அரசுக்கு ஃபேஸ்புக் மீதான நம்பகத்தன்மை இல்லாததுதான் காரணம். ஜியோவுடனான இந்தக் கூட்டணிக்குப் பிறகும் இதே அளவிலான கண்காணிப்புகளும் நெறிப்படுத்தல்களும் அரசு தரப்பில் இருக்குமா என்பது சந்தேகம்தான். ஜியோவை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி தன்னை ஓர் இந்திய நிறுவனம் போலவே பாவிக்க முயற்சி செய்யும் ஃபேஸ்புக். இது நடக்காமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து இணையம் சார்ந்த உரிமைகளுக்குக் குரல் கொடுத்துவரும் இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் (IFF) அமைப்பின் நிர்வாக இயக்குநர் அப்பர் குப்தாவிடம் பேசும்போது புதிய ஐடியாக்களுடன் வரும் ஸ்டார்ட்-அப்கள் இந்த சூழலில் திணறும் என்று மற்றொரு முக்கிய சிக்கலை விளக்கினார். அவர் கூறியதாவது, "ஜியோவை அடித்தளமாகக் கொண்டு இப்படி ஒரு சூப்பர் ஆப் உருவாவது என்பது இதைத் தண்ணீருக்கும் பைப்புக்குமான கூட்டணியைப் போன்றது. இது ஒரே இடத்தில் டேட்டா சார்ந்த சேவைகளைக் குவியச் செய்யும் (Centralisation of data side markets). இதனால் என்ன வெளிப்படைத்தன்மை இருந்தாலும், இவர்களை விடச் சிறந்த சேவையைக் கொடுப்பது என்பது மற்ற நிறுவனங்களுக்குக் கடினமாக இருக்கும். பயனாளர்கள் தேர்ந்தெடுக்க அதிக ஆப்ஷன்கள் இல்லாத சூழல் ஏற்படும். புதிய ஐடியாக்களுடன் ஸ்டார்ட்-அப்கள் களம் காண வாய்ப்புகள் குறையும். தொழில்களுக்குமே இவர்களுடன் இணைந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். இப்போதிலிருந்தே சரியான கண்காணிப்பும் கடுமையான ஒழுங்குமுறை விதிமுறைகளையும் கடைப்பிடிக்கப்பட்டால் இது நடக்காமல் தடுக்கலாம்".

ஃபேஸ்புக் - ஜியோ கூட்டணி... இந்தியாவில் 'சூப்பர் ஆப்' ஆகுமா வாட்ஸ்அப்?! #LongRead

ஃபேஸ்புக்-ஜியோவால் இந்தியாவில் பல வாய்ப்புகள் உருவாகப்போவது உண்மைதான். பல சிறு தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாறுவதில் இந்தக் கூட்டணி பெரும் பங்கு வகிக்கப்போகிறது. ஆனால் இப்போதே எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். தொடக்கத்தில் இருக்கும்போதே அரசும் இதைச் சரியாக முறைப்படுத்தினால்தான் 'டிஜிட்டல் இந்தியா' ஆரோக்கியமானதாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு