Published:Updated:

இனி ஒர்க் ஃப்ரம் ஹோம்தான் எதிர்காலமா? - தகவல் பாதுகாப்பு சவால்களை எப்படி எதிர்கொள்வது?#ExpertOpinion

வொர்க் ஃப்ரம் ஹோம்தான் எதிர்காலமா?
வொர்க் ஃப்ரம் ஹோம்தான் எதிர்காலமா? ( Pixabay )

உலகம் முழுவதும் ஹேக்கர்கள் என்று சொல்லப்படுகின்ற கணினி ஊடுருவிகள் உங்கள் தகவல்களை எப்பொழுது திருடலாம் என்று வேவுபார்த்துக் கொண்டே இருக்கின்றனர். சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் புகுந்து விளையாடி விடுவார்கள்.

20-ம் நூற்றாண்டு முதல் உலகப்போர் தொடங்கியது என்றால், 21வது நூற்றாண்டில் இன்னொரு வித்தியாசமான போரை இவ்வுலகம் சந்திக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ்(COVID19), என்ற ஒற்றை எதிரிக்கு எதிரான இந்தப் போரில் எல்லாப் போர்களைப் போன்றும் உயிரிழப்பு மட்டுமின்றி, வாழ்வாதார இழப்பும் அதிகம். மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவினால் அனைத்துத் தொழில் நிறுவனங்களும் முடங்கின.

ஒருபுறம் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மரணங்கள் நிகழ, மறுபுறம் உலகின் பொருளாதாரத்தின் வேர்களை அசைத்துப் பார்த்துவருகிறது இந்தக் கொடிய நோய்.

இப்பிரச்னைகளைச் சமாளிக்கத் தொழில் நிறுவனங்கள் பல வியூகங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, சில நிறுவனங்கள் ஒப்பந்த ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவுசெய்துள்ளன. சில ஏற்கெனவே செய்துவிட்டன. பெரிய பெரிய நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. தினந் தோறும் இத்தகைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

பண இழப்பு மற்றும் தொழில் முடங்கும் ஆபத்திலிருந்து சரிசெய்யும் நடவடிக்கையாக, பெரும்பாலான நிறுவனங்கள் முக்கியமாகத் தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்கள் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' (WORK FROM HOME), நடைமுறையைச் செயல்படுத்தி உள்ளன.

ஐ.டி நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் வீட்டிலிருந்து பணிசெய்தல் என்பது புதிதல்ல. பல காலமாக நடைமுறையில் உள்ள ஒன்றுதான். ஆனால் முழுநேர 'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது புதிது. முன்பு ஊழியர்களின் சொந்த அவசரக் காரணங்களின் பேரில் சில நிறுவனங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமை அனுமதித்து வந்தன.

ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்பம், இ-காமர்ஸ் நிறுவனங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க அனுமதித்துள்ளன.

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

'வீட்டிலிருந்து வேலை செய்தால் என்னப்பா லாபம்?' என்று என்னிடம் சில நண்பர்கள் வினா எழுப்பினர். ஆபீஸில் இருந்தால் காபி பிரேக், டீம் அவுட்டிங், சின்னதா ஒரு குட்டி நடை, எந்நேரமும் சில்லென்று ஏ.சி, என சிலாகித்தனர். வீட்டிலிருந்து வேலை செய்தால் நிறைய இடையீடுகள் இருக்குமே என்றும் புலம்பினர்.

மறுபக்கம் சில பேர், வீட்டிலிருந்து வேலை செய்தால் அருமையான வீட்டுச் சாப்பாடு, மணிக்கு மணி அம்மாவிடம் இருந்து நொறுக்குத்தீனி, அப்படியே ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமில் ஒரு பார்வை, கொஞ்சம் குழந்தைகளோடு விளையாட்டு, மனைவியோடு ஒரு செல்லச் சண்டை என்று ஒரே குஷியாக உள்ளனர்.

வீட்டிலிருந்து தினசரி வேலை செய்வதால் நிறுவனங்களுக்குப் பல நன்மைகள் நிச்சயம் உண்டு. ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையினால், பெரிய பெரிய கட்டடங்களுக்குத் தரும் வாடகையைச் சேமிக்கலாம், ‘ஆபரேடிங் காஸ்ட்’ என்னும் நடைமுறை ஆக்கச் செலவுகள் வெகுவாகக் குறையும், அதுமட்டுமன்றி கடந்த ஒரு மாத காலமாக ஊழியர்களின் ஆக்கத்திறன் (PRODUCTIVITY) அதிகரித்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிறுவனங்களுக்கு இது மிக மகிழ்ச்சிகரமான செய்தியே.. அதைப் போல் ஊழியர்களின் அலுவலகப் பயண நேரம், அதற்கான செலவுகள் மிச்சப்படும்.

'வொர்க் ஃப்ரம் ஹோம்' நடைமுறையினால், இதைச் சார்ந்த மென்பொருள் உருவாக்கம் (COLLABORATION TOOLS DEVELOPMENT), கணினி கட்டமைப்பு (NETWORKING SERVICES) போன்ற சேவைகளின் தேவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

TCS
TCS

பல லட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்தியாவின் பெரும் ஐ.டி நிறுவனமான டி.சி.எஸ், 75 விழுக்காடு ஊழியர்களை வீட்டிலிருந்து வேலைசெய்யும் வரைவு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த இயக்க மாதிரி வடிவத்திற்கு ‘செக்யூர் பார்டெர்லெஸ் வொர்க் ஸ்பேசெஸ்’ (SECURE BORDERLESS WORK SPACES) என்று பெயரிட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்த நிறுவனங்கள், தங்களின் கணினிகளையே பெருவாரியாகத் தந்துள்ளது. ஒரு சில நிறுவனங்கள் பற்றாக்குறையின் காரணமாகச் சொந்தக் கணினிகளை உபயோகிக்க அனுமதித்துள்ளன.

சைபர் கிரைம் என்று சொல்லப்படுகின்ற கணினிக் குற்றங்களால் 2021 ஆண்டு ஆறு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு நேரிடும்

பொதுவாக நிறுவனங்களின் மூலம் தரப்படுகின்ற கணினியில், உரிமம் பெறப்பெற்ற இயக்குதளம் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), அப்டேட்டட் ஆன்டிவைரஸ், உரிமம் பெறப்பெற்ற மென்பொருள்களுடன் இருக்கும். அதனால் கணினியில் உள்ள தகவல் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் இயங்கும்.

அதெல்லாம் சரி! வீட்டிலிருந்து வேலை செய்வதால் நிறுவனங்களின் தகவல்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் (CLIENT) தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றால், அது பெரிய கேள்விக்குறியே? இன்றைய முக்கிய சவால், தகவல் பரிமாற்றமும் அதன் பாதுகாப்பும்தான்.

வேலைக்காகச் சொந்தக் கணினிகளை உபயோகப்படுத்துகிறீர்கள் எனில், அதில் உரிமம் பெற்றுள்ள ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கிறதா? இல்லையெனில், அதில் எந்தவொரு மென்பொருள் அப்டேட்ஸும் நடைபெறாது.

VPN
VPN
முறையான மென்பொருள்கள் இல்லாமல் இயங்கும் கணினிகள் ‘வல்னரபல் மெஷின்கள்’ எனலாம். அதாவது தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவை.. இத்தகைய கணினிகளை இன்றைய உலகில் மிக எளிமையாக ஹேக் செய்யமுடியும்.

அதைப்போல உங்கள் அலுவலக வலைப்பின்னலில் (Intranet) இணைய, 'வெர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வொர்க்' (VPN) மென்பொருள் தேவை.. உங்கள் நிறுவனம் எந்த மென்பொருளைப் பரிந்துரைக்கிறதோ அதைப் பதிவிறக்கம் செய்து உபயோகிப்பது பாதுகாப்பானது.

மேலே குறிப்பிட்டதுபோல முறையான மென்பொருள்கள் இல்லாமல் இயங்கும் கணினிகள் ‘வல்னரபல் மெஷின்கள்’ எனலாம். அதாவது தாக்குதலுக்கு ஆளாகக் கூடியவை.. இத்தகைய கணினிகளை இன்றைய உலகில் மிக எளிமையாக ஹேக் செய்யமுடியும்.

உலகம் முழுவதும் ஹேக்கர்கள் என்று சொல்லப்படுகின்ற கணினி ஊடுருவிகள் உங்கள் தகவல்களை எப்பொழுது திருடலாம் என்று வேவுபார்த்துக்கொண்டே இருக்கின்றனர். சின்ன சந்தர்ப்பம் கிடைத்தால் போதும், புகுந்து விளையாடி விடுவார்கள். சைபர் கிரைம் என்று சொல்லப்படுகின்ற கணினிக் குற்றங்களால் 2021 ஆண்டு ஆறு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு நேரிடும் என்று கருத்தாய்வுகள் சொல்கின்றன.

இத்தகைய கணினிகளில் ஹேக்கர்கள் சுலபமாக பல வைரஸ்களைச் செலுத்தி உங்களுடைய கணினியின் உள்ள ரகசியத் தகவல்கள், கடவுச்சொற்கள் போன்றவற்றை எளிதாகக் கைப்பற்றமுடியும். அண்மையில் ‘மேஸ் ரேன்சம்வேர்’ என்கிற வைரஸ் இந்தியாவின் ஒரு பெரும் ஐ.டி நிறுவனத்தின் இணையம் சார்ந்த மென்பொருள்கள் (INTRANET APPLICATIONS) மற்றும் ரகசிய தகவல்களைக் களவாடியது. ரேன்சம்வேர் வைரஸைப் பொருத்தமட்டில் திருடப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்ட பணத்தைக் கொடுத்தால் மட்டுமே மீட்க முடியும். இதற்கு ‘பிட்காயின்’ கிரிப்டோகரன்சியில் இந்தப் பரிமாற்றம் நடக்க வேண்டும்.

சைபர் பாதுகாப்பு
சைபர் பாதுகாப்பு

வீட்டிலுருந்து வேலை செய்வதால் மற்றுமொரு முக்கியப் பிரச்னை உளவியல் சிக்கல்கள். தனிமையில் பணிபுரிபவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற இடைவெளிகளை ஊழியர்களுக்கு இடையே தொடர் மீட்டிங்ஸ், வீடியோ கான்ஃபரென்ஸிங், டீம் மீட்டிங்ஸ் போன்றவையால் குறைக்கலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்யும்போதும் இடையிடையே சின்ன பிரேக் எடுங்கள். நேரம் கிடைக்கும் பொழுது சில நிமிடங்கள் உங்கள் குடும்பத்தினருடன் செலவு செய்யுங்கள். உங்கள் பணியின் நேரத்தை நீங்கள் அளவிட்டு வகுத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கணினி மற்றும் மென்பொருள்களைப் பாதுகாப்பாக உபயோகிக்கக் கடினமான கடுவுச்சொற்களைப் பயன்படுத்தவும். உங்கள் நிறுவனம் வகுத்துள்ள செக்யூரிட்டி பாலிசிகளை நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.

கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பினால் 'வொர்க் ப்ரம் ஹோம்' வழிமுறையில், தகவல் பாதுகாப்பை (DATA SECURITY) பலப்படுத்தி நடைமுறைப்படுத்தினால், நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் நிச்சயம் 'வொர்க் ப்ரம் ஹோம்' ஒரு வரப்பிரசாதமே!

-இ.எஸ்.ஆர் செந்தில் சுப்பிரமணியம்

அடுத்த கட்டுரைக்கு