Published:Updated:

`கொரோனா பாதித்தவர்களைக் கண்காணிக்க புதிய சட்டம்!' - இஸ்ரேலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

corona
corona

இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்த, நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் மந்திரி சபையின் ஒப்புதலை வைத்து அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது இஸ்ரேல்.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நாட்டு அரசுகளும் எடுத்து வருகின்றன. இஸ்ரேலில் (Israel), இதுவரை 433 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை இறப்புகள் எதுவும் இஸ்ரேலில் பதிவாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய தற்காலிக சட்டம் ஒன்றை அமலுக்குக் கொண்டுவந்திருக்கிறது இஸ்ரேல் அரசு.

கொரோனா
கொரோனா

இந்தப் புதிய சட்டத்தின்படி, கொரோனா அறிகுறி இருக்கிறது எனக் கண்டறியப்பட்ட ஒருவர் தனிமைப்படுத்தப்படுகிறாரா இல்லை, பொதுமக்களுடனான தொடர்பில் ஈடுபடுகிறாரா என்பதனைக் கண்காணிக்க, தொலைத்தொடர்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அறிகுறிகள் தென்படுகிற நபர், வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் எனத் தெரியும் பட்சத்தில், அவருக்கு 'கொரோனா அறிகுறி உள்ளவருடன் தொடர்பில் இருந்துள்ளீர்கள்' எனத் தெரிவிக்கும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இந்தத் தகவல்களை அந்நாட்டு பாதுகாப்புத்துறை சேகரித்து, அதை சுகாதார அதிகாரிகளுடன் பகிரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

இந்தப் புதிய சட்டத்தை நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், மந்திரி சபையின் ஒப்புதலைவைத்தே அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறது இஸ்ரேல். இந்தச் சட்டம் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக உரிமைகள் இரண்டிற்கும் இடையில் சிக்கியிருக்கிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புதிய சட்டம், 30 நாள்கள் மட்டுமே அமலில் இருக்கும். அதன் பின்னர் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Benjamin Netanyahu | Israel
Benjamin Netanyahu | Israel

இஸ்ரேலில் நிலைமை மிகவும் தீவிரம் அடையவில்லை. பாதிப்பு தீவிரம் ஆகாமல் இருக்க, பள்ளி கல்லூரிகள், பொது மக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றை மூடியுள்ளது இஸ்ரேல். மேலும் 10 பேருக்கு மேல் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது அமலுக்கு வந்திருக்கும் இந்த சட்டத்தைச் சமூக உரிமைகள் எனப் பார்க்காமல், சுகாதார நடவடிக்கையாகப் பார்க்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர், அந்நாட்டு சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு