Published:Updated:

` எங்கள் வேலை இத்துடன் முடிந்துவிடவில்லை!' - சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ சிவன்

மலையரசு

ஜூலை 15-ல் தடை ஏற்பட்ட பிறகு, மீண்டும் இஸ்ரோ துணிச்சலாக எழுந்துள்ளது. தடை ஏற்பட்ட 24 மணி நேரத்தில் அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டது.

இஸ்ரோ சிவன்
இஸ்ரோ சிவன்

2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு சந்திரயான் 2 திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணி நடைபெற்றுவந்தது. அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவ இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தடை ஏற்பட்டது. இந்தத் தடையை உடைத்து, இன்று மதியம் 2.43 மணி அளவில் கார்மேகங்களுக்கு நடுவே ரம்மியமாக விண்ணில் பாய்ந்ததுடன், வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான் 2.

சந்திரயான் 2
சந்திரயான் 2

இன்றிலிருந்து 48 -வது நாளில், சந்திரனில் தரையிறங்க உள்ளது. புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் - 2 வெற்றிகரமாக சென்றதையடுத்து, விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், ``இந்த நாள் வரலாற்றின் முக்கியமான ஒரு நாள். இந்தியா மட்டுமில்லாமல் உலகமே சந்திரயான்2 -வின் வெற்றிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. விஞ்ஞானச் சோதனைகளை மேற்கொள்வதற்காக, இந்தியாவின் சந்திரனை நோக்கிய ஒரு வரலாற்று பயணத்தின் ஆரம்பமே. ஜூலை 15-ல் தடை ஏற்பட்ட பிறகு, மீண்டும் இஸ்ரோ துணிச்சலாக எழுந்துள்ளது. தடை ஏற்பட்ட 24 மணி நேரத்தில் அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டது.

இனி, இந்திய தேசியக்கொடி விண்வெளி அரங்கில் பட்டொளி வீசி பறக்கும். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் சல்யூட் செலுத்தவேண்டியது எனது கடமை. ஒவ்வொரு ஊழியரும் இன்றைய நாளுக்காக இரவு பகலாக எதையும் கண்டுகொள்ளாமல், சுயநலமின்றி உழைத்தனர். அவர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை. எங்கள் வேலை இத்துடன் முடிந்துவிடவில்லை. இனி, அடுத்த மிஷனை நோக்கி நகர்கிறோம். இந்த வருடம் இன்னும் பல முக்கியப் பணிகள் உள்ளன" என்று பேசினார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி சந்திரய்ன் 2 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ``விஞ்ஞானத்தின் புதிய எல்லைகளை அளவிட, 130 கோடி இந்தியர்களின் உறுதியை விளக்கும் வகையில், சந்திரயான் 2 விண்கலத்தின் பயணம் அமைந்துள்ளது. இன்று, ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம்கொண்டுள்ளனர். தேசத்தின் வரலாற்றில் இன்று முக்கியமான ஒரு நாள். வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள சிறப்பான தருணங்கள் இவை.

சந்திரயான் 2 முழுவதுமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்ற உண்மையை நினைத்து இந்தியர்கள் சந்தோஷப்படுகிறார்கள். மற்ற மிஷன்களைவிட சந்திரயான் 2 தனித்துவமானது. கடந்த காலங்களில் யாருமே செய்யாத நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய உள்ளது. ஆராய்ச்சி முடிவுகள் புதிய தகவல்களை அளிப்பதுடன், சந்திரனைப் பற்றிய புதிய அறிவை நமக்கு கொடுக்கும். இளைஞர்கள் அறிவியலை நோக்கி முன்னேற, தரமான ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சந்திரயானின் முயற்சி ஊக்குவிக்கும். இந்திய வெற்றி, இந்திய விஞ்ஞானிகள் திறமை மற்றும் இந்தியாவின் சக்தியை உலகுக்கு எடுத்துரைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை" என்று கூறியுள்ளார். இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் இஸ்ரோவின் வெற்றியைப் பாராட்டியுள்ளனர்.