Published:Updated:

`சோதனை ஓட்டத்தில் ககன்யான்’ - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

``இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடிப்படைப் பணிகள் நிறைவுபெற்று, அடுத்தகட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சிவன் - இஸ்ரோ மைய தலைவர்
சிவன் - இஸ்ரோ மைய தலைவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன், தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ``சந்திராயன்-2 செயற்கைகோளின் ஆர்பிட்டர் சிறப்பாக வேலை செய்துவருகிறது. அதிலிருந்து கிடைக்கும் தகவல்களை நாம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். நவம்பரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஒன்று ஏவப்பட உள்ளது.

சிவன்
சிவன்

தொடர்ந்து பல ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளன. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் `ககன்யான்' திட்டத்தின் வேலைகளும் சிறப்பான முறையில் நடந்துவருகிறது. ககன்யா திட்டத்துக்கான விண்வெளி வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

தேர்வு செய்யப்படும் வீரர்கள் ரஷ்யாவுக்குப் பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் முழுவதும் பூர்த்திசெய்யப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிவன்
சிவன்

வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தின் மூலம் இயங்கும் ராக்கெட் உட்பட புதிய ராக்கெட் இன்ஜின்களை வடிவமைக்கும் திட்டத்தையும், மீத்தேனில் இயங்கும் ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம்" என்றார்.