Published:Updated:

`சந்திரயான் 2' தரையிறங்கும் முன்பு சைபர் தாக்குதலா?- எச்சரித்த சைபர் ஒருங்கிணைப்பு மையம்!

கூடங்குளம் மட்டுமல்லாமல் இஸ்ரோவும் சைபர் தாக்குதல் குறித்து எச்சரிக்கப்பட்டது!

சந்திரயான் 2
சந்திரயான் 2

`லாசரஸ்' என்ற வட கொரிய ஹேக்கர்ஸ் குழு டி- டிராக் எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலையில் சைபர் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவ அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்தியாவின் அனைத்து அணுமின் நிலையங்களையும் நிர்வகிக்கும் அணுசக்தி மின் உற்பத்திக் கழகம் (NPCIL) சைபர் தாக்குதல் நடந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டது. சியோலில் உள்ள இஸ்யூ மேக்கர் லேப் (Issue Maker lab) என்ற லாப நோக்கற்ற அமைப்பு, 2016-ல் தென்கொரிய ராணுவத்தின் இணையக் கட்டமைப்பைத் தாக்கிய வைரஸ்தான் தற்போது இந்தியாவில் கூடங்குளம் அணுமின் இணையக் கட்டமைப்பைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்திருந்தது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம்

இது அலுவலக நிர்வாக அளவில் நடந்த பாதிப்புதானே தவிர அணுஉலையின் முக்கிய கட்டுப்பாடு இயந்திரங்கள் தனித்து இயங்குவதால் அவற்றை ஹேக் செய்யமுடியாது' என்றும் NPCIL தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் மாதம் NPCIL-க்கு மட்டுமல்லாமல் இஸ்ரோவிலும் சைபர் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று National Cyber Coordination Centre எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

`அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்'... எத்தனை அலட்சியம் கூடங்குளத்தில்?!

National Cyber Coordination Centre அமைப்புக்கு அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் மூலம் இந்தத் தகவல் சென்றுசேர்ந்திருக்கிறது. இதனால், சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதற்கு 100 மணிநேரங்களுக்குமுன் ஒரு சைபர் பாதுகாப்புக் குழு இஸ்ரோவில் தீவிரமாகச் சோதனையிட்டது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆனால், இதுகுறித்து எந்த விளக்கமோ பதிலோ இஸ்ரோ தரப்பிலிருந்து இதுவரை கொடுக்கப்படவில்லை.