Published:Updated:

பில் போடும் வசதியுடன் கூடிய டிராலி... கரூர் மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

பில் போடும் டிராலியுடன் விகாஷ்
News
பில் போடும் டிராலியுடன் விகாஷ் ( நா.ராஜமுருகன் )

'டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பொருள்களை எடுத்த பின்னர், பில் போடுவதற்கு நீண்டநேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையை இது மாற்றும்' என்று சொல்கிறார் விகாஷ்.

இன்றைய அவசர யுகத்தில் தொழில்நுட்பத்தைக் கொண்டு பல கடின வேலைகளை எளிதாகச் செய்யக்கூடிய கருவிகள் பெருகிவிட்டன. மனிதசக்தி குறைந்து, இயந்திர சக்தியின் பயன்பாடு பெருகிவிட்டது. இந்தத் துரித உலகில் பல வேலைகளுக்கு நாம் இயந்திரங்களை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. அப்படி காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் தேவையை உணர்ந்து, கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவரான விகாஷ், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பயன்படுத்தப்படும் பில் போடும் டிராலிகளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

பில் போடும் மெஷின்
பில் போடும் மெஷின்
நா.ராஜமுருகன்

'டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் பொருள்களை விரைவாக எடுத்துவிட்டாலும், பில் போடுவதற்கு மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை இனி இருக்காது' என்று சொல்கிறார் விகாஷ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கரூர் மாவட்டம், திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் விகாஷ். இவர், கரூரில் உள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். இவர் தன் அறிவியல் வழிகாட்டி ஆசிரியர் சதீஷ்குமாரின் உதவியோடு, இந்த பில் போடும் வசதியுடன் கூடிய டிராலியைக் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து, மாணவர் விகாஷிடம் பேசினோம்.

"சிறு வயது முதல் எனக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகம். ஏதாவது எலெக்ட்ரிகல் பொருள்கள் கிடைத்தால், அதை அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து ஆய்வு பண்ணுவேன். சிறு வயது முதல் இந்த ஆற்றல் எனக்குள் இருந்தது. அறிவியலில் எதையாவது கண்டுபிடித்து சாதிக்கவேண்டும் என்று நினைத்தேன்.

சதீஷ்குமாருடன் விகாஷ்
சதீஷ்குமாருடன் விகாஷ்
நா.ராஜமுருகன்

அதற்காக, அப்துல் கலாம் ஐயா சொன்னதுபோல் அது பற்றிய கனவுகளுடனே இருந்தேன். இந்த நிலையில், எங்கள் பள்ளி இயற்பியல் ஆசிரியர் சதீஷ்குமார் சார் என் ஆர்வத்தைப் பார்த்து, என்னை தட்டிக்கொடுத்தார். அவர் உதவியோடு, பில் போடும் வசதியுடன்கூடிய இந்த டிராலியைக் கண்டுபிடித்தேன்.

என் அம்மாவோடு அடிக்கடி டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்குப் போவேன். அப்போது டிராலிகள், கூடைகள் மூலம் விரைவில் பொருள்களை எடுத்துவிட்டாலும், பில் போடும் இடத்தில் மட்டும் அதிக நேரம் காத்திருக்கவேண்டிய சூழல் இருப்பதைப் பார்த்தேன். அதற்குத் தீர்வாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் ஆசிரியர் சதீஷ்குமார் சாரிடம் சொன்னபோது, அவர் உற்சாகப்படுத்தினார். அவரின் உதவியோடு, இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினேன். பில் போடும் இடத்தில் கூட்டமாக இருப்பதைத் தவிர்க்கும் விதமாக, ஒவ்வொரு பொருளையும் எடுத்து டிராலியில் போடும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள கருவியில் ஸ்கேன் செய்து கொள்ளலாம். பொருள் தேவையில்லை என்றால், திரும்பி எதிர்திசையில் ஸ்கேன் செய்து பட்டியலிலிருந்து எடுத்துவிடலாம்.

பில் போடும் டிராலியுடன் விகாஷ்
பில் போடும் டிராலியுடன் விகாஷ்
நா.ராஜமுருகன்

இதில், நாம் வாங்கும் பொருள்களின் எடை, விலை மற்றும் இதர தகவல்கள் RFID Tag உடன் டிராலியுடன் இணைக்கப்பட்டிருக்கும். பொருள்களை டிராலியில் வைத்தவுடன், இந்த RFID Tag பொருள்களின் தொகையைக் கணக்கீடு செய்ய ஆரம்பிக்கும். கடைசியில், மொத்தம் வாங்கிய பொருள்கள், அதன் எடை, விலை, மொத்தப் பொருள்களின் விலை உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளர்கள், பில் போடுவதற்கு முன்னதாகவே தெரிந்துகொள்ளலாம்.

எனவே, நாம் நேராக பணம் செலுத்தும் இடத்துக்குச் சென்று, அதற்கான தொகையைக் கட்டி, பொருள்களை வாங்கிச் செல்லலாம். பெரும்பாலும் கூட்டம் அலைமோதுவது, பில் போடும் இடத்தில்தான். அதுவும் இந்த கொரோனா நோய்த்தொற்று காலத்தில், பொருள்களை வாங்குவது என்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. எனவே, ஒரு சிறு முயற்சியாக இந்தச் சவாலை எளிதாக்கும் முறையாக பில் போடும் வசதியுடன்கூடிய டிராலியைக் கண்டுபிடித்தோம்.

இவ்வகை டிராலியால் நாம் தேவையில்லாமல் பில் கவுன்டரில் காத்திருக்கத் தேவையில்லை.

 பில் போடும் டிராலியுடன் விகாஷ்
பில் போடும் டிராலியுடன் விகாஷ்
நா.ராஜமுருகன்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு, நமது தேவைகளை எளிதாக்கலாம். கேஷ் கவுன்டரில் இருப்பவர் தனது கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் விவரங்களைச் சரி பார்ப்பார். சில நிமிடங்களிலேயே நாம் பணத்தைச் செலுத்தி பொருள்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள bar code reader முறையில் ஸ்கேன் செய்து, அத்துடன் RFID Tag-ஐ இணைத்துச் செயலாற்ற முடியும். எனவே, இதற்கான நடைமுறையைப் பின்பற்றுவதில் எவ்வித நடைமுறை சிரமமும் இருக்காது எனலாம். இக்கருவியை நடைமுறையில் பல்பொருள் அங்காடிகளில் செயல்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இவருக்கு வழிகாட்டிய ஆசிரியர் சதீஷ்குமார், "விகாஷின் ஆர்வத்தைப் பார்த்த நான், அவருக்கு தகுந்த ஆலோசனையைக் கொடுத்தேன். சிறப்பாக, இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்பு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்தக் கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இந்த உத்தியை பல்பொருள் அங்காடிகளில் செயல்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நோய் பற்றிய அச்சத்தையும் கூட்டத்தைப் பற்றிய பயத்தையும் தவிர்க்கலாம். இந்த அரிய கண்டுபிடிப்பு, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டு, சிறந்த படைப்பாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

விகாஷூடன் சதீஷ்குமார்
விகாஷூடன் சதீஷ்குமார்
நா.ராஜமுருகன்

மேலும், இது அங்கு வந்த மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. அதோடு, மத்திய அரசின் Inspire Manak - 2019 அறிவியல் கண்காட்சி அறிவியல் கண்டுபிடிப்புகளில் பங்கு பெற்று, சிறந்த படைப்புக்கான ஊக்கத்தொகையாக ரூபாய் 10,000 வழங்கப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டது. இதை, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுபோகும் முயற்சியில் இருக்கிறோம்" என்றார்.

வாழ்த்துகள் விகாஷ்!