Published:Updated:

`120 நாள்களாக இன்டர்நெட் சேவை இல்லை!' - வாட்ஸ்அப் கணக்கை இழக்கும் காஷ்மீர் மக்கள்

காஷ்மீரில் 120 நாள்களைக் கடந்தும் இன்னும் இணையச் சேவை வழங்கப்படாததால் அந்த மக்கள் வாட்ஸ் அப்பில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்
வாட்ஸ் அப் ( மாதிரி புகைப்படம் )

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி நீக்கப்பட்டது. காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கப்படும்போது அதனால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக ஜம்மு- காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். அரசியல் தலைவர்களும் சிறைவைக்கப்பட்டனர். அதன் பின்னரே சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

Vikatan

இவை அனைத்தும் நடந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும், இன்னும் அங்கு இணையச் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாள்களாக மக்கள் தங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தாமல் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து இயங்காமல் இருக்கும் வாட்ஸ் அப் எண்ணை அந்நிறுவனம் தானாகவே நீக்கிவிடும், அதன்படி தற்போது மொத்தக் காஷ்மீர் மக்களும் கும்பல் கும்பலாக வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள மக்களில் சுமார் 400 மில்லியன் பேர் வாட்ஸ் அப் செயலியைப் பிரதான தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீர் மக்கள் இருக்கும் குரூப்களில் அவர்களது பெயர்கள் தானாகக் காணாமல் போவதாகச் சிலர் ஸ்கிரீன் ஷாட்டுகளை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், “வாட்ஸ் அப்பின் பாதுகாப்பைப் பராமரிக்கவும் தரவுகளைக் கட்டுப்படுத்தவும் 120 நாள்கள் செயலற்றுக் கிடக்கும் வாட்ஸ் அப் கணக்குகள் தானாகவே காலாவதியாகும் என்பது நிறுவனத்தின் விதி. அப்படி வாட்ஸ்அப் பயன்பாட்டில் இல்லாதபோது, அந்த எண் தானாகவே வாட்ஸ் அப் குழுவிலிருந்து வெளியேறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதா...தற்போதைய நிலை என்ன?