Published:Updated:

3D பிரின்டிங்கில் `சிக்கன் நக்கெட்ஸ்'... KFC-யின் இந்த புதிய முயற்சிதான் எதிர்காலமா?

KFC Chicken
KFC Chicken ( Wikimedia Commons )

அதன் புகழ்பெற்ற சிக்கன் வகைகளை அதே சுவையுடன் 3D பிரின்டர்கள் மூலம் உருவாக்க முடியுமா என சோதித்துவருகிறது KFC நிறுவனம்.

2033-ம் ஆண்டு... மனிதன் உணவு உட்கொள்ளும் முறையே மாறியிருக்கிறது. உணவுகளை பிரின்ட் செய்ய வீட்டில் பிரின்டர்கள் இருக்கின்றன. இன்றைய கலர் பிரின்டர்களில் ஒவ்வொரு நிறத்திற்கும் கேட்ரிட்ஜ் நிரப்புவது போல இந்த உணவு பிரின்டர்களில் கொழுப்பு, புரதம் போன்றவற்றை நிரப்ப வேண்டும். அதை வைத்து வேண்டிய உணவை, முக்கிய மாமிச உணவுகளை பிரின்ட் செய்துகொள்ளலாம். நிஜ மாமிச உணவுகள் சாப்பிட அதிகம் செலவாகும் சூழல் அங்கு நிலவும். இது சமீபத்தில் வெளிவந்த `Upload' என்னும் தொடரில் எதிர்காலத்தை பற்றிய ஒரு சின்ன கற்பனையான எடுக்கப்பட்ட ஒரு சீன்தான். ஆனால் உண்மையில் இதுதான் வருங்காலமோ எனச் சந்தேகப்பட வைத்திருக்கிறது KFC-ன் புதிய ஆராய்ச்சி ஒன்று.

பிரின்டட் உணவு | Upload
பிரின்டட் உணவு | Upload
Amazon Prime

3D பிரின்டிங் தொழில்நுட்பம் மூலம், `சிக்கன் நக்கெட்ஸ்' தயாரிக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது பிரபல துரித உணவக நிறுவனமான KFC. தங்களது புகழ்பெற்ற சிக்கன் வகைகளை அதே சுவையுடன் 3D பிரின்டர்கள் மூலம் உருவாக்க முடியுமா என சோதித்துவருகிறது அந்த நிறுவனம்.

இந்த நூற்றாண்டில் இணையற்ற கண்டுபிடிப்பாக 3D பிரின்டிங் தொழில்நுட்பம் இருக்கிறது என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை. வழக்கமான பிரின்டிங் முறைகளை போல், அடுக்கு மேல் அடுக்காக மூலப்பொருளை ஒரு சிறிய ஊசி மூலம் வெளியேற்றி ஒரு பொருளை அச்சு அசலாக உருவாக்கிவிடுகிறது இந்த தொழில்நுட்பம். சிறிய பொருட்களில் தொடங்கி வீடுகள் வரை 3D பிரின்டிங் மூலம் இன்று உருவாக்கமுடிகிறது.

3D printing
3D printing
Flickr
Vikatan

இதே தொழில்நுட்பத்தை வைத்து உணவுகளையும் தயாரிக்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்து தன் ஆராய்ச்சியை ரஷ்ய 3D தொழிநுட்ப நிறுவனம் ஒன்றுடன் கைகோத்து அதன் பிரபல உணவு வகைகளில் ஒன்றாக `சிக்கன் நக்கெட்ஸ்' செய்யும் ஆராய்ச்சியில் இருக்கிறது KFC.

`Bioprinting' என்று அழைக்கப்படும் இந்த 3D பிரின்டிங் மூலம், உயிருள்ள செல்களால் ஆன பொருட்களை நம்மால் உருவாக்க முடியும். கடந்த 2018-ம் ஆண்டு, வாலற்ற முதலைக்கு ஒரு வாலை 3D பிரின்ட்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அதற்குப் பொருத்தி வெற்றிகண்டனர். அதேபோல மனிதர்களின் உறுப்புகளைக்கூட உருவாக்கி பொருத்துவதற்கு அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உணவுத் துறைக்கும் இதே போல ஆராய்ச்சியைப் பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சியாளர்கள் செய்து அதில் முன்னேற்றங்கள் கண்டு வருகின்றனர். 2006-ல் உணவுத்துறையில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் முதன்முதலில் ஆரம்பித்தது எனலாம். 2012-ம் ஆண்டு வெற்றிகரமாக 3D பிரின்டிங் மூலம் சாக்லேட் தயாரிக்கும் எந்திரத்தை வடிவமைத்தனர். மேலும் பாஸ்தா, பஞ்சுமிட்டாய், தொடங்கி கடந்த 2018-ம் ஆண்டு பன்றிக் கறிக்கு மாற்றான சைவ உணவை தயாரிப்பது வரை பல விஷயங்களில் 3D பிரின்டிங்கை செயல்படுத்திக் காட்டியிருக்கின்றனர். இப்போது முதன்முதலில் விலங்கு செல்கள் மூலம் உண்மையான கோழிக்கறியை தயாரிக்கும் முயற்சியில் KFC நிறுவனம் இறங்கியுள்ளது.

KFC யின் ஆதர்ச உணவான பொறித்த கோழி (Fried Chicken)-ஐ 3D பயோ பிரின்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் விலங்கு மற்றும் தாவர செல்களை அச்சாகப் பயன்படுத்தி அதை வைத்து உருவாக்குவதே இவர்களது முயற்சி.

நிஜ கோழி இறைச்சியை விட பயோபிரின்டட் கோழி இறைச்சி உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலுக்கு மிகவும் நல்லது என்று அமெரிக்கச் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழின் ஒரு ஆய்வை மேற்கோளிட்டு காட்டுகிறது KFC நிறுவனம். இப்படி பண்ணை முறையில் கோழிகளை வளர்க்காமல், உயிரணுக்களிலிருந்து இறைச்சியை உருவாக்குவதன் மூலம் கரிம வாயு வெளியேற்றங்களையும் குறைக்கமுடியும் எனச் சொல்கிறது KFC.

இதைப்பற்றி கருத்து தெரிவித்த `3D Bioprinting Solutions எனும் ரஷ்யா நிறுவத்தின் தலைமை அதிகாரி யூசப் கேசுவனி, ``எதிர்காலத்தில் இத்தகைய தொழில்நுட்பங்களின் வேகமான வளர்ச்சி 3D பிரின்டட் இறைச்சி தயாரிப்புகளை அனைவருக்குமானதாக மாற்றும். மேலும் KFC உடனான எங்கள் ஒத்துழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் செல் அடிப்படையிலான இறைச்சி தயாரிப்புகளை உருவாக்கப் பலரையும் ஊக்குவிக்கும்" என்று கூறியிருக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதத்தில் சோதனை முயற்சியாக மாஸ்கோவில் பயோபிரின்டட் சிக்கன் நக்கெட்ஸ் கிடைக்கும் என்று KFC தரப்பு தெரிவித்துள்ளது. சோதனை எப்படியானதாக இருக்கும் என்பது தெளிவாக விவரிக்கப்படவில்லை. உலகமெங்கும் இருக்கும் KFC வாடிக்கையாளர்களுக்கு இது எப்போது வந்துசேரும் என்றும் தெரியவில்லை.

ஏன் இந்த முயற்சி?

KFC Nuggets
KFC Nuggets
Flickr

KFC சொல்வது போல இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதல் காரணம் `வீகனிசம்'. உலகமெங்கும், குறிப்பாக மேலை நாடுகளில் வீகனிச கலாசாரம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அசைவ உணவுகளைக் கைவிடப் பலரும் ஆரம்பித்துவிட்டனர். அவர்களை ஈர்க்கும் ஒரு முயற்சியாகவே இப்படியான இறைச்சி உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன உணவு நிறுவனங்கள்.

அடுத்தது சூழலியல் பிரச்னைகள். உலகில் மீத்தேன் போன்ற கரிம வாயுக்கள் அதிகம் வெளியிடும் துறைகளில் இறைச்சி துறையும் மிக முக்கியமானதாக இருப்பதாகப் பலரும் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இதற்கும் இந்த முறைகள் தீர்வாக அமையும் என நம்புகின்றன இந்த நிறுவனங்கள். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் மூலம் இயற்கையை காப்பாற்றுகிறோமா இல்லை மொத்தமாக அதிலிருந்து விலகிச் செல்கிறோமோ என்றுதான் தெரியவில்லை.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...? கமென்ட்களில் பதிவிடுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு