Published:Updated:

கூகுள் உருவாக்கும் `விர்ச்சுவல்' தேசிய கீதம்... நாம் எப்படிப் பங்களிக்கலாம்? #SoundsOfIndia

Sounds Of India
Sounds Of India

இந்த சுதந்திர தின விழாவை 'கூகுள் இந்தியா' வித்தியாசமானதொரு இசை முன்னெடுப்புடன் நம்மை கொண்டாட அழைக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் 'பார்ட்னர் இன்னோவேஷன்' (Partner Innovation - PI) டீம் நம் நாட்டின் 'பிரசார் பாரதி' அமைப்புடன் இணைந்து, தன் AI மூலம் ஒரு பரீட்சார்த்த முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. நம் நாட்டின் 74-வது சுதந்திர தின விழாவை வித்தியாசமாகக் கொண்டாடப் பல லட்சம் இந்தியர்களின் குரல்களை மூன்று விதமான இசைக் கருவிகளின் அற்புதமான ஒலிகளாக மாற்றி, ஒரு வீடியோவாக தொகுத்து அதை நம் தேசிய கீதத்தின் விர்ச்சுவல் வெர்ஷனாக வெளியிட இருக்கிறது. இதற்காக நம் குரல்களைப் பதிவு செய்யுமாறு அறிவித்துள்ளது. நம் குரல்களுடன் AI டெக்னாலஜியையும் கலந்து இதுவரை கேட்டிராத வகையில் நம் தேசிய கீதத்தைக் கேட்கவிருக்கிறோம்.

என்ன செய்ய வேண்டும்?

#SoundsOfIndia எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்னெடுப்புக்கு நாம் நம் பங்கை அளிப்பது மிகவும் சுலபம். நம்முடைய ஸ்மார்ட்போனில் soundsofindia.withgoogle.com என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும். அதில் கொடுத்திருக்கும் எளிமையான வழிமுறைகளின்படி நம் குரலில் தேசிய கீதத்தைப் பதிவு செய்யவேண்டும். அதை அப்படியே மூன்று விதமான இசைக் கருவிகளின் ஒலியாக, வார்த்தைகள் ஏதுமில்லாத இசைக் கோர்வையாக அது நமக்கு ப்ளே செய்து காட்டுகிறது. அந்த அவுட்புட் நமக்குப் பிடித்திருந்தால், திருப்திகரமாக இருந்தால் அதை கூகுள் உருவாக்கும் வீடியோவுக்குப் பயன்படுத்தச் சொல்லி அனுமதி கொடுக்கலாம்.

60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களின் குரல்களை இதுவரை பதிந்துள்ளனர் என்று சொல்கிறது அந்த இணையதளத்தின் தரவு. பதிவு செய்யப்பட்ட குரல்கள் வீடியோவாக சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் குரல்களைப் பதிவு செய்யக் கடைசி நாள், ஆகஸ்ட் 7, 2020.
அடுத்த கட்டுரைக்கு